நாம் வியந்து போற்றும் பல்வேறு அறிவியல் மாற்றங்களும் நாகரீக வளர்ச்சியும் கொண்ட இன்றைய இந்திய சமூகத்தில் இன்னும் இன்னும் சமூக மையநீரோட்டத்தில் கண்டுணரப்படாமலும் மதிக்கப்படாமலும் இருப்பதோடு மட்டுமல்லாமல் கூடுதலாக நசுக்கப்பட்டும் வரும் சகமனிதர்கள், சம பால் ஈர்ப்புடைய பெண்கள் (Lesbian), சமபால் ஈர்ப்புடைய ஆண்கள் (Gay), இருபால் ஈர்ப்புடையவர்கள் (Bi -sexual) மற்றும் திருநம்பி/ திருநங்கைகள் (Transgenders), சுருங்கச் சொன்னால் பாலியல் சிறுபாண்மையினரே (LGBT). சாதி, மத, இன வேறுபாடின்றிப் பாலினத்தேர்வு மற்றும் பாலின அடையாளச் சிக்கல் காரணமாக ஒடுக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கும் இவர்கள் ஒன்றினைத்து கடந்த 20 வருடங்களாக நாடு முழுதும் வெவ்வேறு வகையில் சகமனிதர்களாலும் அரசாலும் அங்கீகரிக்கப்பட வேண்டி இடைவிடாது தொடர்ந்து போராடிவருகிறார்கள். இதன் பயனாகப் பாலியல் சிறுபாண்மையினர்கள் மீதான குறைந்தபட்ச அக்கரையைப் பெற்று வருகிறது இன்றைய சமூகம். முழு அங்கீகாரம் கிடைக்காத நிலையிலும் கலை, எழுத்து, ஊடகம், கணினித் துறை போன்ற பல தளங்களில் தங்களுக்கான இடத்தை விடாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இவர்கள் அடைந்துவருகின்றனர். இருப்பினும், பரவலாகப் பாலியல் சிறுபாண்மையினரின் இன்றைய நிலை என்பது குடும்ப ஆதரவின்றி, சமூக அந்தஸ்து மறுக்கப்பட்டு, பாதுகாப்பான புகலிடம் இன்றி, தங்களுக்குள் கூனிக்குறுகி, தாய்நாட்டு அகதிகளாக இருளில் புகலிடம் தேடி அலையும் அவல நிலையிலேயே உள்ளது. தமது பாலியல் அடையாளச் சிக்கல் காரணமாக ஒரு இந்தியக் குடிமகனாக இருந்தும் எந்த சமூகப்பயனும் பெறமுடியாதவர்களாகவே பாலியல் சிறுபாண்மையினர் இருந்துவருகின்றனர். அன்போடு அரவணைக்க வேண்டியவர்களைப் பொதுவெளியிலுருந்து விலக்கப்பட்டவர்களாக வைத்திருப்பது நாகரீக சமூகத்திற்கு முறையாகுமா? இந்த் நிலை மாற இந்திய அளவில் ஜூன் 2003, கொல்கத்தாவில் “வானவில் அணிவகுப்பு” என்ற LGBT PRIDE MARCH முதலில் துவங்கியது. அதன் தொடர்ச்சியாகத் தமிழகத்தின் பங்காக 2009 முதல் சென்னையிலும் வருடம் தோறும் ஜூன் மாதம் முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் LGBT PRIDE MARCH பல தொண்டு நிறுவனங்களாலும், தனிநபர் ஆர்வலர்களாலும் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. அதன் ஒரு அங்கமாக இவ்வருடம் கட்டியக்காரி அரங்கக்குழு காலந்தோறும் மறித்துப்போன பாலியல் சிறுபாண்மையினருக்கு மரியாதை செய்யும் விதமாக நினைவேந்தல் நிகழ்வு ஒன்றினை நடத்துகிறது. தன்னைப் பெண்ணாக உணரும் திருநங்கைகளைக் குடும்பம் வெறுத்துத் தள்ளிய போதும் வெளியேறித் தன்னையொத்த திருநங்கைகள் குழுவுடன் இணைந்து ஒரு புதுவாழ்வை அமைத்துக் கொள்ளும் வாய்ப்பு திருநங்கைகளுக்கு உண்டு. ஆனால், தன்னை ஆணாக உணரும் திருநம்பிகள் குடும்பத்தை விட்டு உயிரோடு வெளியேறும் வாய்ப்போ மிக மிக அரிதானது. மீறித் தப்பிப் பிழைக்கும் திருநம்பிகளுக்குத் தம் வாழ்வைப் புணரமைத்துத் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்கான எந்த வாய்ப்பும் இடமும் இங்கில்லை. பாலியல் சிறுபாண்மையினரில் திருநங்கைகளுக்கு விரும்பத்தகாத போதும் கடை கேட்கவோ, பாலியல் தொழில் செய்து பொருளீட்டும் சூழலோ உள்ளது போல குடும்பத்தை விட்டு வெளியேறி வந்த திருநம்பிகளுக்கென பொருளாதார வாய்ப்போ பணிச்சூழலோ இல்லை. திருநங்கைகளுக்கென திருநங்கைகள் குழுமம் இருப்பதைப் போல திருநம்பிகளுக்கு குறைந்த பட்சம் ஆதரவான சூழலும் இல்லை. திருநம்பியின் குழந்தை பருவத்தில் அவனது ஆண் போன்ற நட்த்தையை குடும்பம் அடையாளம் காணும் முதல் நாள் தொடங்கி அத்திருநம்பி எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களை வெறும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. பெண் போல அடக்க ஒடுக்கமாக நடந்துகொள்ளத் தொந்தரவு செய்யப்படுவதாகத் தொடரும் ஒடுக்குமுறை திருமண வயதில் பூதாகரமாக நிற்கிறது. தன்னையே ஆணாக உணரும் ஒரு திருநம்பியால் மற்றொரு ஆணை மணப்பதோ அவனுக்கு அடிபணியும் மனைவியாக மாறுவதையோ கற்பனைகூட செய்யமுடியாத நிலையில் தனது பாலியல் அடையாளத்தை வெளிப்படுத்த நேர்கிறது. இது இறுதியில் கௌரவக் கொலையில் முடிகிறது. பெரும்பாலான திருநம்பிகளும், சமபால் ஈர்ப்புகொண்ட பெண்களும் பெரும்பாலும் தற்கொலைகளாலும், கௌரவக்கொலைகளாலும் தங்கள் உயிர்வாழும் உரிமையை இழந்து வரலாற்றில் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகிறார்கள். 1860ல் ஆங்கிலேய அரசு இந்தியாவில் சமபால் புணர்ச்சிக்கு எதிராக sec 377 சட்டம் கொண்டுவந்தது முதல் சட்டரீதியாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் பல சமபால் ஈர்ப்புடைய சகோதர சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1987 திசம்பரில் போப்பாலைச் சேர்ந்த லீலா - ஊர்மிளா என்னும் சமபால் விருப்பமுடைய பெண்கள் தங்களுக்குள் திருமணம் செய்துகொண்ட காரணத்தால் காவல்துறை பணியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டனர். யார் வகுத்த விதியில் எங்கள் காதல் அடங்கும் என்ற கவிஞர் இன்குலாபின் கேள்விக்கு இன்றுவரை விடையில்லை. 2000, ஜுன் மாதம் வெளிவந்த ஒரு இலங்கைப் பத்திரிக்கை பெண்களை நேசிக்கும் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவது சரி என எழுதியது. இதனைச் சக இலங்கைப் பத்திரிக்கையாளர்கள் குழுவும் சரி என்றே ஆணவத்துடன் கருத்து தெரிவித்தது. பெண்களை நேசிக்கும் பெண்களைக் குறித்த தமிழக பத்திரிக்கைகளின் போக்கை, செய்திகளைத் தொடர்ந்து வாசிக்கும் அனைவராலும் எளிதில் அவதானித்துவிட முடியும். மத அடிப்படையிலான இச்சமூகத்தில் பாலியல் சிறுபாண்மையினர் அனைவரது காதலும் இன்றுவரை காயடிக்கப்பட்டே வருகிறது. பெற்றோர்களாலோ, அல்லது சமூக வரைமுறைக்கு அஞ்சியோ தன் காதலை மறுதலித்து வெளியேறும் காதலிகளின் பிரிவுதாளாமல் தற்கொலை செய்து கொண்ட திருநம்பிகள்/ சமபால் ஈர்ப்புடைய பெண்கள் பலர். திருநங்கைகளில் காதலர்களில் மெய்யான காதலன்றி அவளது பொருளாதார பலனுக்காகக் காதலிக்கும் சுயநல காதலர்கள் பலர். இதனை அறிந்தும் அத்தகைய ஒருவனைக் காதலிக்கும் திருநங்கைகள் தன்னை முற்றாக மறுதலிக்கும் அக்காதலனின் பிரிவு தாளாமல் தற்கொலை எனும் முட்டாள் முடிவை எடுப்பதுண்டு. வாழ்க்கையின் இறுதிப் பற்றுதலாகத் தான் நம்பிய காதலும் தன்னைக் கைவிட்ட நிலையில் இம்முட்டாள்தனத்திற்குத் தன்னைப் பலிகொடுத்துவிடுகிறார்கள். இந்தியச் சூழலில், குடும்பம், சமூகம், காவல் துறை, சட்டம் என அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பல பாலியல் சிறுபாண்மையினரின் மரணத்திற்குக் காரணமாக இருந்துவருகின்றன. வாழும் போது ஏற்றுக் கொள்ளாத திருநங்கைகளின் குடும்பமோ இறந்த பின் அடாவடியாகத் திருநங்கையின் உடலைப் பெற்று ஆணுக்குரிய முறையில் ஈமச்சடங்கு செய்கிறது. அதோடுவிட்டுவிடாமல் இறந்தவளின் உடலில் களிமண்ணால் செய்த ஆணுறுப்பைப் பொருத்திவைத்து எரிக்கும் சடங்கும் நிகழ்த்துவது உட்சப்ட்ச வன்முறையாகும். தன்னால் ஒரு ஆணாக நடிக்கவோ/ வாழவோ முடியாதென குடும்பம், சமூக அங்கீகாரம் என எதை இழந்தாலும் தனது உயிரே போனாலும் பாதகமில்லையெனத் தன் உடலைச் செதுக்கும் திருநங்கையின் பிணத்தின்மீது நிகழ்த்தப்படும் இத்தகைய வன்முறை எப்போது நிற்கும். சமீபத்தில் சமூக விரோதிகளால் மறித்துப்போன கேரளத்தைச் சேர்ந்த தோழர் மரியாவுக்கும், அவரைப் போலவே காவல்துறையினராலும் சமூக விரோதிகளாலும் புரிதலற்ற பெற்றோர்களாலும் மரணத்தைத் தழுவிய அத்தனை தோழர்களுக்கும் கட்டியக்காரி அரங்க குழு சார்பாக நினைவேந்தல் கூட்டம் வரும் ஜூன் 30-ம் தேதி ஸ்பேசஸ், பெசண்ட் நகரில் நிகழவிருக்கிறது. இந்நினைவேந்தலின் உறுதியான நோக்கம் இனிவரும் காலங்களில் எந்த ஒரு பாலியல் சிறுபாண்மையினருக்கும் இத்தகையதொரு நினைவேந்தல் செய்ய வேண்டிய அவசியமற்றுப்போக வேண்டுமென்பதே. இந்நிகழ்வைச் சாத்தியப்படுத்த நிறைந்த அன்புடன் நிகழ்வில் பங்கேற்று உங்கள் ஆதரவை உறுதிபடுத்த வேண்டுகிறோம். மனிதர்களாக ஒன்றிணைவோம்! மானுடத்தின் உதாரணமாக நின்றிடுவோம்!! நன்றி!! தொடர்புக்கு : கட்டியக்காரி 90940 31188 (ஸ்ரீஜித்), 99944 36973 (ஸ்மைலி).
Subscribe to:
Post Comments (Atom)
2 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
மனம் கனக்கிறது, என்று பிறக்கும் நமக்கு விடியல் ? இருள் சூழ்ந்த மனிதர்கள் மத்தியில்... நல்ல பதிவு தோழி.
நல்ல பகிர்வு சகோதரி...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment