இந்தியாவில் முதன் முறையாக, அதுவும் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு கல்வி கற்பதில் வாய்ப்பு அளிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நலவாரியம் அமைத்தலை தொடர்ந்து திருநங்கைகளின் நலனுக்கான அடுத்த படிக்கட்டாக இது கருதப்படுகிறது. ஆனால், இதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களை அறிந்து அதற்கும் அரசு ஆவண செய்தால் மட்டுமே அதன் முழு பலனும் கிட்டும்.
பொதுவாக, திருநங்கைகள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறும் பொழுது வயது 16 முதல் 22 ஆகிறது. தான் ஒரு ஆணல்ல, திருநங்கை என்பதை முழுதாக உணர்ந்து அதனால் ஏற்படக்கூடிய அனைத்து பின் விளைவுகளையும் அறிந்து, தீர்க்கமான முடிவெடுக்கும் வயது இது. ஆனால், அதற்குப்பின் அவர்கள் தொடர்ந்து குடும்பத்துடன் தொடர்ந்து வாழ்வது அரிதினும் அரிது. குடும்பத்தை விட்டு வெளியேறிய பின் திருநங்கைகளின் வாழ்க்கை முறை என்னவென்பதும் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.
பிச்சை எடுத்தோ அல்லது பாலியல் தொழில் செய்தோ வாழ வேண்டியுள்ள திருநங்கைகள் அதனை விட்டுவிட்டு கல்லூரி செல்வது என்பது நடைமுறையில் சாத்தியமல்ல. பெற்றோருடன் வாழும் பட்சத்தில் கல்லூரிக் கட்டணம், தங்குமிடம், உணவு, பாதுகாப்பு இவற்றை அவர்களே பொறுப்பேற்றுக் கொள்வர். ஆனால், அன்றாட செலவிற்கே பிச்சை எடுக்கும் திருநங்கைகள் கல்லூரி செல்ல ஆரம்பித்தால் அவர்களின் கல்விக்கான அடிப்படை தேவைகளுக்கு பொறுப்பேற்க யாரும் இல்லை என்பதே நிஜம்.
அப்படியே கற்பதற்கு பொருளாதார தடையேதும் இல்லாதபோதும், தொன்றுதொட்டு திருநங்கைகளுக்கிடையேயுள்ள அர்த்தமற்ற சட்டதிட்டங்களுக்கிடையே சிக்கிக் கொண்டு கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் திருநங்கைகள் இந்த அரசானையை கேள்விப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வமும் காட்டப்போவதில்லை. திருநங்கைகளில் பலர் 10-ம் வகுப்பு கூட தேராதவர்கள். சிலர் M.A., M.Sc., M.B.A., M.Phil கூட முடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் படிக்காத திருநங்கைகளுக்கு கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. நன்கு படித்தவர்களுக்கோ, படித்தும் வேலையில்லாத நிலையில், தொடர்ந்து படிப்பு அவசியமற்றது.
இத்தகைய காரணங்களால், இம்முயற்சி தோல்வியடைவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது. பிறகு, திருநங்கைகளுக்கு அரசு உதவ முன்வந்தாலும், திருநங்கைகள் அதனை முறையாக பயன்படுத்துவதில்லை என்ற அர்த்தமற்ற பழிச்சொல் தான் மிஞ்சும்.
*********
திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவேண்டுமெனில் முதலில் அவர்களை குடும்பம் ஏற்றுக் கொள்ள ஆவண செய்ய வேண்டும். குடும்பம் ஏற்றுக் கொள்ள சமூகத்திற்கு திருநங்கைகள் குறித்த சரியான புரிதலை பரவலாக்க வேண்டும். மற்ற ஆண் / பெண் அனைவருக்கும் வாய்த்த இயல்பான குடும்பச் சூழல் திருநங்கைகளுக்கும் ஏற்பட வேண்டும்.
ஆதரவற்ற நிலை, பிச்சையெடுத்தல், மற்ற தகாத சூழல் போன்றவற்றை சந்திக்காத வாழ்க்கை முறை திருநங்கைகளுக்கு அமைய வேண்டும். அப்பொழுது மற்றவர்களைப் போலவே திருநங்கைகளாலும், இவ்வரசானையைப் பயன்படுத்தி படிக்க முடியும். அதைவிட முக்கியம் இப்பொழுதுள்ள படித்த / படிக்காத திருநங்கைகளுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தகுந்த வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் இவ்வரசானையை பயனுள்ளதாக்கவும் முடியும்.
**********
இவ்வரசானையின் கூறப்பட்டுள்ள சில நிபந்தனைகள் அங்கீகாரத்திற்கிடையே ஒதுக்குதலாகவும் உள்ளது.
இவ்வரசானை அரசு கல்லூரிகளில் அதுவும் கலை / அறிவியல் ( Arts and Science )பாடங்களுக்குத்தான் பொருந்துமாம். தனியார் கல்லூரிகளிலோ, மற்ற உயர் கல்விகளுக்கோ இந்த அரசானை பொருந்தாதாம். தமிழக அரசு தாயுள்ளத்துடன் இதனை பரிசீலித்தேயாக வேண்டும். திருநங்கைகளுக்கு அரசு அளிக்கும் கல்வி வாய்ப்பென்பது முழுமுற்றானதாக இருக்க வேண்டும். அதில் பாகுபாடென்பது பொருளற்றது.
அதோடு, இருபாலர் கல்லூரிகளில் (Co-education ) மட்டும், அதும் கடைசி பெஞ்சில் தான் அமர வேண்டும் என்ற தடைகளையும், கருணையோடு பரிசீலிக்க வேண்டும்.
***********
அரசின் நல்முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வந்தனமும்; அம்முயற்சி ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கமுமே திருநங்கைகளின் சார்பாக எனது இப்பதிவின் நோக்கம்.
திருநங்கைகள் கல்லூரியில் சேர்க்கை - அரசிற்கு நன்றியும், சில கோரிக்கையும்
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
9
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் அரசு, திருநங்கைகள்
பெயரில் என்ன இருக்கிறது
இந்த உலகமும் அதன் அனைத்து மூலக்கூறும்பெயர்களால் அறிந்து கொள்ளவும், பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு செல் உயிரி முதல் மனிதன் வரையிலும், ஏழை முதல் கோடிஸ்வரன் வரையிலும் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரவர்க்கென்று ஒரு பேராவது இருக்கும். பெயரிடல் போக (நல்ல) பேருக்கா உழைப்பவர்கள், உயர்ந்தவர்களும் உண்டு. தன் பணியை ஏதோ (கடமைக்கு) பேருக்கு செய்பவர்களும் உண்டு.
ஆனால், நானோ எந்த பேருக்கும் இன்றி சொந்த பேருக்காவே போராடி வருகிறேன். பெற்றோர்களால் இடப்பட்ட பெயரையும் மறுத்து என் தேவை, என் பாலுணர்வு, என் உரிமை, என் வலிகளுக்காய் என் அடையாளத்தை மீட்டெடுத்து, சில கைதட்டுகளோடும் பல கல்லடிகளோடும் என்னை ஸ்திரபடுத்திக் கொண்டு வந்தாலும், பெயரால், பாலின அடையாளத்தால் நான் இழந்தவை பல.
நூலக அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு, சிம் கார்ட்டு என சகல விதத்திலும் அங்கீகாரமின்றியும், அறுவெறுப்புக்குள்ளாகியும். கடந்த 3 வருடங்களை தாய்நாடு ஈன்றெடுத்த அகதியாய் வலம் வருகிறேன். அடையாளமின்றி வாழ்வது துறவறத்திற்கு பொருந்தலாம். மனிதத் திரளின் மத்தியில் சக மனுஷியாய் நேர்கொண்டு நிற்க இயலாதவளாய் என் நிலை நிர்கதியற்று இருந்தது.
அக்டோபர் 2005ல் எனக்கு பணியும், தங்குமிடம் கிடைத்து ஒரு பாதுகாப்பான platform கிடைத்தபின் நான் செய்ய வேண்டிய முக்கியமான அடுத்த பணி பெயர் மற்றும் பாலின மாற்றம் பெறுவது. ஆனால், அதை எவ்வாறு செய்வது என்பதில் தெளிவிருக்கவில்லை. எனவே, முதலில் பெயரையாவது மாற்றிக் கொள்வோம் என்று பெயர் மாற்றத்திற்கு தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை, சென்னைக்கு விண்ணப்பப்படிவம் அனுப்பினேன். பெயர் மாற்றத்திற்கென சில காரணங்கள் குறிக்கப்பட்டிருந்தது. உ.ம். மதமாற்றம், Astrology, Neumorology, என்கிற ரீதியில் சில..
நானோ எனது பாலின சிக்கலை எதுவும் குறிப்பிடமால் பொதுவாக "I want my name with no regional, religious and gender identity" என்று குறிப்பிட்டிருந்தேன். சரியாக 15வது நாளில் எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வந்தது. அதில் நிராகரிப்பிற்கான காரணமாக கொடுக்கப்பட்ட பட்டியலில் அனைத்தையும் பேனாவால் அடித்துவிட்டு. ஒரு மூலையில் பென்சிலால் "இங்க மனிதர்களுக்கு மட்டுமே பெயர் மாற்றம் மேற்கொள்ளப்படும்" என்று எழுதியிருந்தது.
ஆத்திரம், அழுகை எல்லாமே இருந்தாலும் என்ன செய்வதென்று தெரியாத நிலை. நண்பர் ஒருவரின் அறிவுரையின் படி மதுரையில் உள்ள பெண்ணிய ஆர்வலரும், வழக்கறிஞருமான ரஜினி அவர்களை சந்தித்து என் பிரச்சனையை விளக்கினேன். (இவர் ஏற்கனவே 2002ல் திருநங்கைகளுக்கான வழக்கு ஒன்றில் பங்காற்றியவர்).
அவரது வழிநடத்தலின் கீழ் பிப்ரவரி 2005ல், நான் பிறந்த ஊரான திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும், நாங்கள் வசித்த பகுதியை சார்ந்த தாசில்தார் அவர்களுக்கும், இவற்றோரு தலைமைச் செயலகத்திற்கும் எனது பிரச்சனையை தெளிவாகக் கூறி அனைவருக்கும் மனு ஒன்றினை அனுப்பி எனக்கு பெயர் மற்றும் பாலின மாற்றம் ஏற்படுத்தித் தர வேண்டிக்கொண்டேன்.
சில நாட்கள் கழித்து திருச்சி தாசில்தார் அலுவலகத்திற்கு அழைப்பு வந்தது. மூன்று முறை நேர்முகத் தேர்வும், சில விசாரணைகளும் முடித்தபின் எனது பெயர் மற்றும் பாலின மாற்ற விண்ணப்பத்தினை தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னைக்கு மீண்டும் அனுப்பிவைத்தனர். எனக்கும் அதன் நகல் அனுப்பப்பட்டது. ஆனால், பதில் வரவேயில்லை. பிறகு நேரில் சென்ற பிறகு கடிதம் அனுப்புவதாக சொன்னார்கள்.
மாத இடைவெளிக்குப் பின், பால்மாற்று அறுவை சிகிச்சை மாற்று மேற்கொண்டதன் மருத்துவ சான்றிதழ் அனுப்பக் கோரி பதில் வந்தது. எனது பால்மாற்று சிகிச்சையோ அங்கீககாரமின்றி மேற்கொள்ளப்பட்டது. மேலும், அதற்கான அங்கீகாரமோ, புரிதலோ கூட இல்லாத சூழலில் நான் என்ன செய்வது? அதற்கும் என்னிடம் வழி இருந்தது. பால்மாற்று சிகிச்சை முடித்த சில மாதங்களில் குடல்வால் வளர்ச்சி காரணமாக எனக்கு வேறொரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அச்சிகிச்சை முடிந்து நான் வெளியேறிய போது discharge குறிப்பில் எனக்கு ஏற்கனவே, பால் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதனை ஆதரமாக எடுத்துக்கொள்ளுமாறு அனுப்பியிருந்தேன். ஏற்கனவே அனுப்பிய விண்ணப்பத்திலும் அப்பிய போதும். மீண்டும் தனியாக கடிதத்தோடு அனுப்பியிருந்தேன். ஆனால், பால்மாற்று சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் தான் சான்றிதழ் தரவேண்டுமென மீண்டும் மறுத்துவிட்டனர். இதிலேயே அரையாண்டு கழிந்துவிட்டது.
அவர்கள் அனுப்பிய மறுப்புகளை அடிப்படையாக கொண்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ரஜினியின் உதவியுடன் வழக்கு பதிவு செய்தேன். நான்கு மாதங்கள் கழித்து எனது பெயர் மாற்றத்தினை 7 வாரங்ளுக்குள் மேற்கொள்ள வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. சந்தோசத்தின் உச்சியில், மிகப்பெரிய வெற்றியடைந்த களிப்போடு காத்திருந்தேன். 7 வாரங்களை அதிகபட்சம் 2 மாதங்களாக கொண்டு காத்திருந்தேன். 3 மாதங்கள் ஆனது பதிலே இல்லை பொறுக்க முடியாமல் சென்னை வந்து நேரடியாக அலுவலகத்தில் விசாரத்த போது, தீர்ப்பில் பரிந்துரைக்கதான் சொன்னார்கள் நாங்கள் பரிந்துரையை ஏற்க முடியாது என்று முடித்துக் கொண்டனர். அடக்கமுடியாத ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு என் நிலையை விளக்கி, பரிந்துரையை ஏன் ஏற்றுக் கொள்ளமுடியாது அதற்கான காரணம் வேண்டும் என சண்டையிட்ட பின் மருத்துவ சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாற்றித்தர முடியும் என்றார்கள்.
மருத்துவ சான்று வேண்டுமெனில் அதற்கான வழியை மேற்கொள்ளுங்கள் இல்லையெனில் கோர்ட் அவமதிப்பு மற்றும் மானநஷ்ட வழக்கு தொடருவேன் என்று பூச்சாண்டி காட்டியின் கடிதம் அனுப்புவதாக சொன்னார்கள். பல நாட்களுக்குபின் மதுரை ராஜாஜி அரசு மருத்துவனையிலிருந்து மருத்துவ சான்றிதழ் பெருமாறு எனக்கும், என்னை சோதித்து சான்றழிக்குமாறு மருத்துவமனைக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
மருத்துவமனையில் சென்று சான்றிதழ் வாங்குவதற்கு 3 வாரங்கள் ஆனது. அலுவலகத்தில் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்ட பின் மருத்துவர்களால் சில நாட்கள் அலைக்கழிக்கப்பட்டேன். அதைவிட கொடுமை அங்குள்ள சில அலுவலர்களால் ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் ஆளானது. அனைத்தையும் பொருமையுடன் சகித்துக் கொண்டு ஒரு வழியாக மருத்துவசான்றிதழும் சாதாக கிடைக்க "எவ்வளவு கஷ்டப்பட்டாலும் மிக மிக முறையான, சரியான வகையில் காரியம் முன்னேறி வருகிறது என்ற நம்பிக்கையும், இது ஒரு முன்மாதிரியாக அனைவருக்கும் உதவும் என்ற பூரிப்போடு" காத்திருந்தேன்.
காத்திருப்பு, அதீத தாமதம், சென்னை விஐயம். ஆவலோடு கேட்டால், "எங்களுக்கும், காப்பி வந்துச்சு. ஆனா, அதுல Medical examination seems she can reared as Female ன்னு தான் இருக்கு. she is female அப்பிடின்கு வரல. அதனால மாத்த முடியாது". இப்போதும், பொருத்துக் கொண்டு "அதெப்பிடி பிறப்பால் நான் பெண்ணு இருந்தா அத எங்க அப்பா, அம்மா ஆரம்பத்திலேயே பாலினம்னு குறிச்சிருப்பாங்களே... இப்படி பெறக்கப்போயிதானே இந்த கஷ்டமெல்லாம். அப்ப டாக்டருங்களும் அதான சொல்ல முடியும். எப்பிடி மாத்த முடியும்னு" விவாதம் நடந்தது. பிறகு பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார்கள். ஒருவழியாக பெயர் மாற்றத்திற்கு சம்மதித்தார்கள் என நிம்மதி பெருமூச்சு விட்ட போது செப்டம்பர் 2006.
பிறகு டீனிடம் பேசணும், அங்க கேக்கணும், G.O. வரலைன்னு ஏகப்பட்ட சமாளிப்புகள். பொறுத்தவரை பொறுத்து நேரடியாக ஒருநாள் அலுவலுகம், மேலதிகாரி அனைவர் முன்பாகவும் கொதித்தெளுந்து சண்டை போட்டதன் பயனாக "பேர் மட்டும் மாத்துரதுன்னா பரவால்ல பாலினம் வேற மாத்தனும்ல அதனால் எப்படின்னு பேசிட்டு இருக்கும் அதான் லேட்டு" என்று உயரதிகாரி ஒருவர் சொன்னார்.
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் காத்திருந்தேன். இதற்கிடையில் மதுரையை விட்டு சென்னைக்கு மாறி வந்தாச்சு. சென்னைக்கு நான் வந்ததன் முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்று. முகவரி மாற்றத்தை நேரில், போனில், கடித்தில் தெரிவித்தும் தொடர்ந்து வந்த கடிதங்களோ ஆரம்ப மதுரை முகவரிக்கே தொடர்ந்து கொண்டிருந்தது. அங்கிருந்து மீண்டும் என்னை அடைய சில நாட்கள் என எல்லாமே தாமதம்.
பிறகு பெயர் மாற்ற குறிப்பினை குறிப்பிட்டு ரூ.1,645/-னை கட்டுமாறும் கடிதம் கிடைத்தது. வழக்கமான பெயர்மாற்றத் தொகையோ வெறும் 410 தான். தொகையோ பல மடங்கு கூடுதல் மேலும், பெயர் மாற்றம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மீண்டும் நேரில் சண்டை போட்டும் பயனில்லை. சரி பெயராவது மாறட்டும் என்று மனதை தேற்றிக்கொண்டாலும் அவ்வளவு என்னிடம் இருந்ததோ 500 பிறகு அதற்கு மேல் பணம் திரட்ட முயன்று, தோற்று ஒரு வழியாக சென்னை பல்கலைகழக கன்னட துறை பேராசிரியர் திருமதி.தமிழ்செல்வி அவர்கள் கொடுத்து உதவினார்கள். (ஒருமுறை தொலைபேசியிலும், ஒருமுறை நேரிலும் மட்டுமே அறிமுகம்)
பணம் கட்டி முடித்து ஐனவரி 2008 புது வருடம் புத்தம் புதியாய் எனக்கு தொடரும் என்று காத்திருந்தேன். ஐனவரி சோர்வாய் சென்று முடிந்தது. பிப்ரவரியும் வந்து, பெயர் மாற்றம் என் மனதை அறித்துக் கொண்டிருப்பது நின்றுவிட்ட மதுரையிலிருந்து நேற்று ஆன்ட்டி கால் செய்து என் பெயர் மாற்ற அறிவிப்பு கடிதம் கிடைத்த செய்தியை சொன்னார்.
நண்பர்களே என் வாழ்நாளின் தீர்க்க முடியாத சிக்கில் ஒரு பாதியை தீர்த்து விட்ட மகிழ்ச்சியை உங்களுக்கு சொல்லாமல் யாரிடம் சொல்வேன்.
உபரி : பேர் மாற்றத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேல் காத்திருந்ததற்கு கின்னஸ் கிடைக்குமான்னு விசாரிச்சு சொல்லுங்கப்பா....
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
49
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் அனுபவம், சமூகம், திருநங்கைகள்
ஆளுநர் உரை-தமிழக அரசு - நன்றி
நேற்று சட்டசபையில் தமிழக கவர்னர் திரு.சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் ஆற்றிய உரையில் இவ்வாண்டில் திருநங்கைகளுக்கு தனி நலவாரியம் அமைக்கப்படும் என்று அறிவிப்பும் உள்ளடங்கியிருந்தது.
இந்திய அளவில் திருநங்கைகளுக்கான சில நல்முயற்சிகள் தமிழகத்தில் அதிகபட்சம் நடைபெறுவதும், சில கதவுகள் திறப்பதும் மகிழ்ச்சிகரமாக உள்ளது. தமிழக அரசின் இம்முடிவுக்கு திருநங்கைகள் சார்பில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்நல வாரியம் நிதர்சனத்தில் சாத்தியப்பட வேண்டும். கூடுமான முறையில் திருநங்கைகளே இவ்வாரியத்தில் பணியாற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், இதன் அடுத்த கட்டமாக திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம், வேலைவாய்ப்பு, குடும்ப - சமூக பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும்.
நன்றை இன்றே செய்- என்பது வள்ளுவர் வாக்கு, வள்ளுவர்க்கு சிலை வைத்த தமிழக அரசு அவர் சொல்படி இந்நற்செயலை துரிதமாகவும், துள்ளியமாகவும் செய்து முடிக்கும் என்று நம்பிக்கையோடு மீண்டும் சொல்கிறேன்...
நன்றி! நன்றி! நன்றி!!
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
5
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் அரசு, திருநங்கைகள்
நானே நானா..? ஐந்தே தானா?!
எனது பதிவுகளில் வத்தலும் சொத்தலும் போக பதிவு என்றவகையில் ஒரு 60 தேரும் என்று வைத்துக் கொள்ளலாம். அதில் கவிதைகள் ஒரு பத்து போக 50 பதிவுகள் தேரலாம். தேரலாம் என்பது என்னளவில் தான். கட்டற்ற சுதந்திரந்திரத்தின் உச்சம் நம் வலைப்பூ எனவே யார் மறுக்க முடியும்? ஆனால் நம்மை நாமே தேர்விற்குள்ளாக்கி 5 பதிவுகளை தேர்வு செய்யும் போதுதான் தெரிகிறது இந்த ஐம்பது கூட தேறாது என்பது.
இருந்தாலும் வலையுலக தாதாவே வரவேற்கும் போது மறுக்க முடியுமா? எனவே, கஷ்டப்பட்டு தேடி கண்டுபிடிச்சு ஐந்து பட்டியலிட்டுள்ளேன்.
***
பொதுவான ஒரு சொலவடை ஒன்று உண்டு. இன்னார் ஒரு பேருக்கு ஆசைப்படுபவர். வெறும் பேருக்காகத்தான் இதெல்லாம் செய்கிறார்கள் என்ற ரீதியில்... நான் நிஐமாகவே பேருக்காக (பாலினத்திற்காகவும்) கிட்டதட்ட ரெண்டு வருடமா போராடிக்கொண்டிருக்கிறேன். இது குறித்து தனி பதிவு விரைவில் தனி பதிவும் வரும். இப்படியிருக்க ஏன் லிவிங் ஸ்மைலுன்னு கேக்காத புண்ணியவான்/வதி இல்ல. இதற்கான விடையாய், மீள்பதிவாய், என் முதல் பதிவு.
1. ஏன் லிவிங் ஸ்மைல்? 
நானறிந்து பெயர் மாற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் வரை முயற்சி செய்து கொண்டிருக்கும் பெண்மணி நானாகத்தான் இருக்க முடியும் (கின்னஸ்க்கு விண்ணப்பிக்கும் அய்டியாவும் உள்ளது)என்று நினைக்கிறேன். குறிப்பாக பெயர் மாற்றத்திற்கான முயற்சிக்காகவே புலம் பெயர்ந்த உலகின் முதல் பெண்ணும் நானாகத்தான் இருக்கமுடியும். தலைநகர் தேடி அடைந்து நான்கு மாதங்காக தனியார் (அ) அரசு பணிக்காகவும், தங்குமிடத்திற்ககாகவும் முயற்சித்துக் கொண்டிருக்கும் இநந்நிலையில் இப்பதிவை படிக்கும் போது எனக்கே ஏக்கமாகத்தான் உள்ளது.
2. நம்புங்கள் நாம் வசிப்பது தமிழ்நாட்டில் தான்
வெகுஐன திரைஇசை ரசனையிலிருந்து ராக் இசைக்கு என்னை வழிநடத்திய ஆசான் பாப் மார்லி. இசையினூடாக தனிமைக்கான சிறந்த மாற்றையும் ஏற்படத்தியவை ராக் இசை சமீபகாலமாக எனது வலைப்பக்கத்தில் சில பாடல்கள் வருவதும் தாங்கள் அறிந்ததே.
அந்த கலைஞன் குறித்த எனது குட்டி அறிமுகம் விழித்தெழு எழந்து போராடு உன் உரிமைக்காய் என்னும் இந்த பதிவில்
எனக்குரிய இளமையில் நான் நானாக கொண்டாட முடியாததன் தொடர்ச்சி அல்லது முற்றப் பெறாமையின் காரணமாகவே என்னிடம் குழந்தைத்தனம் ஓங்கி இருப்பதுண்டு. அதன் இன்னொரு வடிவம் குழந்தைகளின் மீதான தீராக் காதலும். எங்கேயும், எப்போதும் சுட்டிக் குழந்தைகளை கொஞ்சுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளின் மீது ஆசை, கொஞ்சல், ஏக்கம், மகிழ்ச்சி, மழலை உலகம் எல்லாமே என் குணங்களில் ஒன்று. குழந்தைகளில் உலகை அழகாக விவரித்து வந்த நாவலை குறித்த என் வாசிப்பு அனுபவமாக இந்த பதிவும் -டோட்டோ சான் ஐன்னலில் ஒரு சிறுமி- எனக்கு நிறைவான பதிவுகளில் ஒன்று. நாவலில் வரும் ரயில் பள்ளி போன்ற பள்ளியில் படிக்கவி்ல்லை என்றாலும், கிட்டதட்ட இதைப் போலவே, பாடத் திட்டம் கொண்ட சிறக மாண்டசோரி பள்ளியில் பணிபுரிவதும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. 
மதுரையில், புதிய காற்று இதழ் சார்பாக தமிழ் சினிமா அகமம் புறமும் என்றொரு மூன்று நாள் கருத்தரங்கு ஒன்றிற்காக தயார் செய்த கட்டுரை. எனது மற்ற பதிவுகளோடு ஒப்பிடுகையில் கட்டுரை என்னும் வடிவத்தற்கு சற்று நெருங்கி வந்துள்ள பதிவாக இது அமைந்துள்ளது மற்றும் அவசியமானதும் கூட என்பதால் என் தேரிவிலிருந்து விலக்க முடியாததாகி விட்டது.
5. தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைளின் நிர்வானம்
சில மாதங்களாக தமிழ்மணம் பக்கம் அடிக்கடி தலைகாட்ட முடியவில்லை. எனவே யாரெல்லாம் எழுதியுள்ளார்கள், யாரெல்லாம் அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற வரலாறும் எனக்கு தெரியாது. எனவே, இப்பதிவை படிக்கும் பதிவர்களில் இன்னும் எழுதாதோர் இதனை எனது நேரடி அழைப்பாக ஏற்று தொடரை வழிநடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புன்னகைத்தவர்
லிவிங் ஸ்மைல்
பதிந்த நேரம்
4
நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்
வகைகள் பொது
என் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்
சிறுவர் மலர், அம்புலிமாமா, முல்லா/பீர்பால்/ராமன் கதைகள் என வளர்ந்து வந்த நான் பத்தாம் வகுப்பும் படிக்கும் நாட்களில் கண்மணி, ரமணி சந்திரன், ராஜேஸ்குமார், சுபா என இலக்கிய சோலையில் மயங்கிக் கிடந்தேன். இளங்கலை சேர்ந்த சில நாட்களில் தமிழ் வாத்தியார் ஒருவா ஒரு முறை "சில நேரங்களில் சின மனிதர்கள்" என்னும் நாவல் குறித்து சிலாகித்ததில் கல்லூரி நூலகத்தில் தேடினேன். தேடியது கிடைக்காத போதும் அதே ஜெயகாந்தனின் "ரிஷி மூலம்" கிடைத்தது.
அது அப்படியே தொடர்ந்து, ஜி.நாகராஐன், ப்ரேம் ரமேஷ், அசோகமித்ரன், சு.ரா., தஞ்சை பிரகாஷ், தி,ஜானகிராமன், எஸ்.ராமகிருஷ்ணன் என்று வளர்ந்து பின்னர் லியோ டால்ஸ்டாய், அன்டன் செக்காவ், தஸ்தாயவெஸ்கி, மக்சிம் கார்க்கி, மிகயில் ஷோலகவ் ரஷ்ய மொழிபெயர்ப்பின் பால் திரும்பியது. மற்ற நூல்கள் எல்லாம் நூலகம் மூலமாகவே பெற முடிந்த எனக்கு, NCBHன் புண்ணியத்தில் மலிவு விலைபதிப்புகளாக ரஷ்ய சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் கிடைத்தன. ரஷ்ய பனியும், பயணமும், கதைகளும் என் கனவுகளை நிறைத்துக் கொண்டிருந்தன.
மெல்ல மெல்ல இலக்கிய போதைக்கு அடிமையாய் இருந்தேன். முதுகலை சேர்ந்த சிலநாட்களில் நாடக பேராசிரியர் மு.ராமசாமியின் அறிமுகம் மற்றும் முருகுபூபதியின் நட்பு இயல்பாகவே எனக்கிருந்த நடிப்பாசையை முறையான தீயின் கதகதப்பில் செழுமையாக்கிக் கொண்டிருந்தன.
கவிதைகளோடு அதிகம் பரிச்சயம் இன்றி இருந்த வந்த எனக்கு முருகுபூபதியின் நட்பும் அவருடன் கொண்ட உரையாடல் அல்லது முருகுபூபதி, கோணங்கி, குமார் அம்பாயிரம், வியாகுலன், யவனிகா ஸ்ரீராம் போன்ற அதிதீவிர கவிஞர்ளின் உரையாடல்களை வாய் பார்த்த நாட்களிலிருந்து கவிதையின் சுவை மீது மோகம் வரத்துவங்கியது. கவிதை எழுதுவதற்கும் முயற்சித்தேன் (வரவில்லை விட்டுவிட்டேன்)
முருகுபூபதி வகையராக்களின் கவிதைமொழி கடினமானது என்பதால் அவற்றைக் கடந்து கல்யாண்ஜி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, மதிவண்ணன, தேவேந்திர பூபதி, தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் என்னைக் கவர்ந்த கவிஞர்களாக என் தேர்வில் இருந்தார்கள். முதுகலை இறுதியாண்டு வரும் சமயம், உயிர்மை இதழ் முதலாக வர ஆரம்பித்திருந்த சமயம். மாதம் தவறாமல் ஒரு இலக்கிய புத்தகமாவது வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தெருந்த சமயத்தில் உயிர்மை சரியாக பட்டது. உயிர்மையை தேர்ந்தெடுத்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. அப்போது திருச்சியில் நான் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் நடித்த நண்பர் செந்தில் உயிர்மையோடு அப்போது நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தற்போது உயிர் எழுத்து நடத்தி வருகிறார். தொடர்ந்து ரிகசர்ல் நடந்த அந்நாட்களில் அவரிடம் பெரும்பாலும் ஓசியிலேயே உயிர்மை இதழ்கள் கிடைத்தன.
உயிர்மை இதழில் அறிமுகமான சாருநிவேதிதா அந்நாட்களில் எனக்கு மிகவும் சிறந்த எழுத்தாளராக பட்டார். துணிச்சலான, வெளிப்படையான, பல்பரிமாண எழுதுத்தாக அவரது படைப்புகள் என்னனை கவர்ந்தன. இது போது இணையத்திலும் அவரது இணையபக்கத்தையும், வெப்உலகம், திண்ணை என்று கொஞ்சம் மேய்ந்து கொண்டிருந்தேன். நிஐத்தில் எழுத வேண்டும் என்ற நப்பாசையை மட்டும் எனக்கு அவ்வப்போது எழுப்பிக்கொண்டிருந்த நெருக்கமான தோழனாக சாருவின் எழுத்துக்கள் இருந்தன.
இது போக சிறு சிறு புத்தக கண்காட்சிகள். நண்பர்களின் பரிசு, நூலகம் என மேலும் கொஞ்சம் வாசிப்போடு தொடர்பிலிருந்தேன். ஒரு வகையில் அல்லது முழுக்க முழுக்க இந்த வாசிப்பே என் தனிமைக்கு உற்ற தோழியாக இருந்தது.
இந்த வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் புனே சென்று பிச்சை எடுக்க ஆரம்பித்த சில நாட்களில் முழுக்கவும் நின்றுவிட்டது. இயல்பு வாழ்க்கையின் இன்னல்களும், கோரங்களும் நேரமின்மையொடு கைகோர்த்து இலக்கியங்களின் மீது எனக்கிருந்த இனம்புரியாத தேடலை நீர்த்துப் போகச் செய்தது.
****************
புனேவிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து புது மனுஷியாய் வாழ்க்கை மீதான அவநம்பிக்கையும், அதிருப்தி மற்றும் பயத்தோடு தமிழகம் திரும்பினேன். முன்பிருந்த இலக்கிய ஆர்வம் இப்போது இல்லை. என் தேவையெல்லாம், தங்குமிடம், பாதுகாப்பு, வேலை, நிம்மதி இவை மட்டுமு. என் முயற்சிகளுக்கு ஆதாரமாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது முருகபூபதி மற்றும் பிற இலக்கிய நண்பர்களின் நட்புதான். நேரடியாக உதவ முடியாத சூழ்நிலையிலும் பல கவிஞர்கள் என் நிலைக்காக வருத்தமும் நல்லது நடக்க வேண்டும் என்ற அக்கரையும் கொண்டிருந்தனர்.
இவற்றிற்கு அப்பாற்பட்டு எனக்கு தெரிந்த பல நண்பர்களிடம் சகட்டு மேனிக்கு வேலை வேலை என நச்சரித்துக் கொண்டிருந்தேன். அந்நிலையில், தோன்றிய யோசனைகளுள் ஒன்று சாருநிவேதிதாவிடமும் உதவி கேட்கலாம் என்பது. மிகச் சரியாக சொல்வதென்றால் அது ஒரு முட்டாள் தனமான யோசனையும் தான். எனக்கு சாருவைத் தெரியும் ஆனால் சாருவிற்கோ என்னைத் தெரியாது. அதனால் என்ன? விளிம்புகளின் அவலத்திற்காக கொதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளன். வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை கொண்ட எழுத்தாளன், பல பெரிய புள்ளிகளுடன் தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளன் எனவே முயற்சி என்ற அளவில் என்ன தவறு என் தயக்கத்தை உடைத்துக் கொண்டேன்.
ஒரு திருநங்கை. அதுவும் கொளரவமாக வேலை செய்ய வேண்டும் என ஆசைபடும் நியாயமான நோக்கம். இதற்காகவெல்லாம் தன்னாலான சிறுமுயற்சி கூடவா ஒரு எழுத்தாளர் எடுக்க மாட்டார்?! ஒருவேளை இம்முயற்சியின் பலனாக நல்ல வேலை கிடைத்துவிடாதா என்ற நப்பாசை என்னை விடாமல் துரத்தியது. இவற்றையெல்லாம் கடந்து என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளரிடம் பேசப் போகும் மகிழ்ச்சியும்.
பல முயற்சிகளோடு ஒரு முயற்சியாய் நண்பர்கள் மூலமாக சாருவின் எண் கிடைக்கப் பெற்று, தொலைபேசியில் உரையாடினேன். என்னை பற்றிய சுய அறிமுகம் செய்து கொண்டேன். குரலும், பேசும் விதமும் பாந்ததமாக, அன்பாகவே இருந்தது. பிறகு எனது உதவியை முன் வைத்தேன். எதிர்பார்த்த ரியாக்சனோ, பதிலோ இல்லை. தொடர்ந்து தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம், தவிர்க்கப்பட்டேன். ஒருவேளை தன்னிடம் யாரோ விளையாடவதாக தவறாக நினைத்துக் கொண்டாரோ அல்லது ஒரு இலக்கிய ஐாம்பவானிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறை இதுவல்லவோ என்று என்னை நானே சமாதனப்படுத்திக் கொண்டேன்.
அதற்குள் எனக்கும் வேலை கிடைத்து ஓரளவு செட்டிலாகி விட்டிருந்தேன். எனக்கு திருநங்கைகளுக்கான ஆவண மையம் நடத்த வேண்டும் என்ற உபலட்சியம் ஒன்றிருந்தது. அற்காக திருநங்கைகள் தொடர்புடைய புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது கோணல்பக்கங்களின் சில பகுதிகளில் திருநங்கைகள் குறித்த சாருவின் பார்வை, அனுபவங்கள் எனக்கு சந்தேகத்தை, விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. அது குறித்து விவாதிக்கலாம் என்று சாருவுடன் தொடர்பு கொண்டபோது, ஒரு நேரம் கொடுத்து அந்த நேரத்தில் பேசலாம் என்றார். அவர் குறிப்பிட்ட நேரத்தில் தொடர்புகொண்ட போது பிறகு பேசுவோம் என்றார். அப்படியே தவிர்த்துக் கொண்டுவந்தார்.
அவர் இணைய உலாவி என்று அறிந்திருந்ததால், அவரது ஹாட்மெயில் / யாஹீ சரியாக நினைவில் இல்லை முகவரிக்கு சாட் செய்ய அழைப்பு ஒன்று விடுத்திருந்தேன். சில நாட்கள் கழித்து அந்த அழைப்பிற்கு பதிலிளித்தார். அதில் நான் யார் என்று கேட்டிருந்தார். என்னை யாரென்று தெரியாமல் ஏதோவொரு வித்யா என்றுதான் வந்துள்ளார் என்று அறிந்து. முன்பு தொலைபேசியில் பேசியவற்றை நினைவு படுத்தினேன். சட்டென சாட்டிலிருந்து மாயமானார். அதற்குள் சில இலக்கிய, சிந்தனை சிற்பிகளின் போலிமுகங்களை தெரிந்து கொண்டதாலும், இலக்கிய ஜாம்பவான்களின் மேலிருந்த பிரேமை நீங்கியதாலும், சாருவின் சிறுமையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அதைத் தொடர்ந்து அவரது எழுத்துக்களை மறுவாசிப்பு செய்ததில் பல கட்டுரைகளை ரசிக்க முடிந்தது. அதே பகடி, கோபம், தகவல் திரட்டு எல்லாம் ஆச்சரியப்படுத்தினாலும். சில தகவல்கள் போலியானது, நாடகத்தனமானது என்பதையும் என்னால் யூகிக்க முடிந்தது. கிட்டதட்ட ஒரு வருடங்கள் கழித்து ஒருவருடம் கழித்து உயிர்மையில் எழுதிய கட்டுரையை படித்து பயங்கர ஆத்திரம் எழுந்தது. அதிமேதாவியாக தோன்றினாலும் சில கட்டுரைகள் மிக எரிச்சலூட்டுவதாக அமையும் சாருவின் சில கட்டுரைகளுக்கிடையே இந்த திரைக்கட்டுரையையும் அதன் அபத்தததையும் ஏற்கனவே இங்கே எழுதியுள்ளேன். அதோடு அதை மறந்தும் விட்டேன்.
கடந்த 6 ஐனவரியன்று நியூ உட்லான்ட்ஸ் ஹோட்டலில் சாருவின் மூன்று புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். இவ்விழாவில் பார்லிமெண்ட் உறுப்பினர் கனிமொழி வருவதால் முடிந்தால் அவரை நேரில் சந்தித்து, பெயர், பாலின மாற்றத்திற்கு உதவக்கோரியும், வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் முயற்சிக்கலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம். அடடா, எங்க வேல கேக்குறதுன்னா விவசத்த இல்லயான்னு மட்டும் கேக்காதிங்க. முறையான பெயர் மற்றும் பாலின அங்கீகாரமின்மையால் தினசரி வாழ்க்கையில் அடையும் நேரடிச் சிக்கல்கள் அனுபவத்தால் மட்டுமே புரியும். மனிதாபிமானம் கொண்டு ஒருவரின் உரிமைக்காக உதவுவதன் முனபு இலக்கியமோ, நாகரீகமோ எனக்க பெரிதாக படவில்லை.
ஆக நிகழ்ச்சிக்கு சென்ற எனக்கு அங்கே மற்றொரு ஆனந்த அதிர்ச்சியாக, திருநங்கைத் தோழிகளான ப்ரியா பாபுவும், ரோசும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.
கண்டிப்பாக இருவருமே சாருவை, சாருவை மட்டுமன்றி யாரையும் படித்ததில்லை என்பது தெரியும். பிறகு இங்கே எப்படி என்பதே என் ஆச்சரியம். அவர்களிடமே கேட்டபோது, "அவரைத் தெரியும் " என்றார்கள். சரியென்று கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தேன். விழாவிற்கு வந்த பல முண்ணனி கலையுலக, எழுத்தாளர்களில் அழகிய பெரியவன்,பாரதி கிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பாலு மகேந்திராவின் உரை நன்றாக இருந்தது. பாலு மகேந்திரா தாமதித்து தாமதித்து பேசினாலும், உரையாடலின் சில பகுதிகள் நன்றாகவே இருந்தது.
எதிர்பார்த்தபடியன்றி, கனிமொழி தனது உரையை விரைவாக முடித்துக் கொண்டு, அடுத்த கூட்டத்திற்கு சென்றுவிட்டார். ஆனாலும், ஆறுதலாக இருந்தது மற்றவர்களின் உரை. "வரம்பு மீறிய பிரதிகள்" குறித்து அழகிய பெரியவனின் அலசல் நன்றாக இருந்தது. மொழிபெயர்ப்பு கதைகள் குறித்து பல தகவல்களும் பிற கூடுதல் செய்திகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் உரையில் கிடைத்தது. சுவைபட பேசுவதில் வல்லவரான பாரதி கிருஷ்ணனின் உரையும் ரசிக்கும் படி இருந்தது. ஏற்கனவே தன் பல கட்டுரைகளில் சொன்னவற்றின் சாராம்சத்தோடு வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி சுவையான ஏற்புரையை சாருவும் தந்தார்.
விழா முடிந்த உடன், பல நாட்களாக கைகுழுக்க வேண்டுமென்று ஆசையாய் இருந்த அழகிய பெரியவனிடம் என்னை அறிமுகம் செய்து கைகுழுக்கிக் கொண்டேன். அவ்வாறே விழாவிற்கு வந்திருந்த கல்லூரி பட இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் பாராட்டுதல் தெரிவித்து கூடவே, அவரது அடுத்த படத்தில் திருநங்கைகளை நேர்மறையாக காண்பிக்குமாறு சில காட்சிகளாவது வையுங்கள் என வேண்டுகோளும் விடுத்தேன். பெரும்பான்மை திரைவிமர்சகர்களால் சிலாகிக்கப்பட்ட காதல் படம் எனக்கும் பிடித்திருந்தாலும், கல்லூரி படமே எனக்கு மிகவும் சிறந்த படமாக, இந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்படமாக பட்டது. எனது வாழ்த்தை அவரிடம் நேரடியாக சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சியும் இருந்தது.
வரும் போது, திரைத்தொடர்பாக சாரு எழுதிய ஒரு புத்தகத்தையும் அங்கேயே வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே உயிர்மையிலும், இணையபக்கத்திலும் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பு தான் என்றாலும், இதில் திருநங்கைகள் குறித்த சொற்கள் இடம் பெற்றதால். எனது ஆவண சேகரிப்பு உதவுமென்பதால் வாங்கிக்கொண்டேன்.
வாசிப்பில் தீவிரமாக இருந்த ஆரம்பநாட்களில் எழுதவேண்டும் என்ற கொஞ்சநஞ்ச ஆசையை எழுப்பி எழுதுவதில் இருந்த தடையை உடைக்க உதவியவை சாருவின் எழுத்து என்பது மறுக்க முடியாதது. இலக்கிய கூட்டம், வாசிப்பு என கடந்த இரண்டு வருடங்களாக விலகியே இருந்த எனக்