அம்புலிமாமாவில் துவங்கி ராஜேஷ் குமார், ரமணி சந்திரன் என சென்ற பேருந்து பயண வாசிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியின் நூலகம். ஜெயகாந்தனின் ரிஷி மூலம் என் வாசிப்பை மாற்றியது., பிறகு அவரது 90% நாவல்களை வெறித்தனமாக படித்தேன். அடுத்து தி.ஜாவின் மரப்பசு, செம்பருத்தி பிறகு சு.ரா., கி.ரா., எஸ்.ரா.க்களின் சிறுகதைகள், இவர்களை தொடர்ந்து சிறு பத்திரிக்கைகள், பிறகு பெண்ணியம் குறித்த புரிதலை அம்பை, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, ரேவதி, குட்டிரேவதி, லீணா மணிமேகலை, சல்மா போன்றோர் தந்தனர். தொடர்ச்சியாக உலக சினிமாக்கள், குறும்படங்கள்.. இவற்றினூடே பேரா.இராமனுஜம், மு.ராமசாமி, முருகபூபதி, பிரளயன், ந.முத்துசாமி போன்றோர் மூலம் நவீன நாடகம் என சென்று... இறுதியாண்டின் இறுதியில் முதுகலை நாடகம் படிக்க விரும்பி., தமிழ் பல்கலைகழகத்தில், முதுகலை-மொழியியல் சேர்ந்து, பேரா.மு.ராமசாமி அவர்களில் சிறு அறையில் பழியாய் இருந்து "கழகக்காரர் தோழர் பெரியார்" எனும் நாடகத்தில் சேர்ந்து 45 மேடையேறி.., இடையிடையே, ஒத்திகை கலைக்குழுவில் சேர்ந்து "சாம்பான்" இருமுறை, ஆழி.வெங்கடேசன் மற்றும் கார்த்திக் அண்ணன்களின் இருநாடகங்கள், புதுவையில் அப்போதைய நாடகத்துறை மாணவர் கோபி இயக்கிய ந.முத்துசாமி அவர்களின் "நாற்காலிக்காரர்" நாடகங்களில் நடித்து என எல்லாமே நன்றாக போனது... பிறப்பு கொடுத்த ஆண் அடையாளத்திலேயே இருந்து என் பெண் தன்மையை வெளி உலகத்திற்கு மறைத்து வைத்தது வரை... ஆண் அடையாளத்தில் பிறந்த போதும், பெண்ணாக என்னை தீர்க்கமாக உணர்ந்த பின், அந்தஉணர்விற்கு நேர்மையாக, நான் பெண் என்று வெளிவந்ததன் விளைவாக மட்டுமே நான் இழந்தவை பல.., குடும்பம் (சில விதிவிலக்குகளோடு), கற்ற கல்வியின் பயன்பாடு, சமூக அங்கீகாரம், இயல்பு வாழ்க்கை என இழந்தவை எத்தனையோ அவற்றில் மிக முக்கியமாக நானிழந்தது "இலக்கியமும், வாசிப்பும்". திருநங்கை என்று படி தாண்டிய அன்று முதல் வாழ்க்கை தலைகீழாக திரும்பி விட்டது. வாழ்க்கை தந்த கசப்புணர்வு சம்பந்தமேயின்றி வாசிப்பிலிருந்து என்னை புறந்தள்ளிவிட்டது. அதனையும் மீறி கடந்த 8 ஆண்டுகளில், திருநங்கையாக இருந்த போதும், இந்தியாவிலேயே, பெண்/திருநங்கை என்ற அடையாளத்தோடே பொதுத் துறையில் பணியாற்றிய முதல் திருநங்கையாக நிரூபித்தேன்... முதன்முறையாக, எனது பெயரை/பாலினத்தை முதல் முறையாக சட்ட மற்றும் அறிவியல்ரீதியாக மாற்றிக்காட்டினேன். முதன்முறையாக, திரைத்துறையில் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பெற்ற முதல் திருநங்கையாகவும் நிரூபித்தேன். முதல்முறையாக 25 வ்யதில் "நான் வித்யா" என்னும் தன்வரலாற்று நூலும் எழுதி, அது ஆங்கிலம், மலையாளம், மராத்தி, கன்னடம் என மொழிபெயர்ப்பாகவும் வ்ந்தது. குறிப்பாக, கன்னட மொழிபெயர்ப்பு சாகித்ய அகாடமி வென்றது. அவ்வப்போது கவிதை என்ற பெயரில் கொஞ்சம் எழுதியதுமுன்டு. இவற்றோடு அ.மங்கை, ஸ்ரீஜித் சுந்தரம், மு.ரா., ச.முருகபூபதி, கருணா பிரசாத் உள்ளிட்ட 10 இயக்குநர்களிடம், கிட்டதட்ட 25 நாடங்களில் குறிப்பாக திருநங்கையாக அன்றி பெண்ணாகவே நடித்திருந்தேன். இதோ வரும் வருடத்தில் பிரிட்டிஷ் கவுன்சில்-சார்ல்ஸ் வாலஸ் பெலோஷிப் மூலம் 6 மாதம் நாடகம் பயில போகிறேன்.... இடையிடையே மானே, தேனேன்னு சில சிறப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம், தற்பெருமைன்னுதானே சொல்றீங்க., சொல்லிக்கோங்க No Problem..!! இவை அத்தனையும் திருநங்கையாகவே இருந்து நான் நிரூபித்து காட்டியது... அத்தனையும் இந்த அநாகரீக/அறிவியல் பார்வையற்ற சமூகத்திற்கு என்னை நிரூபிக்க வேண்டி வெறி கொண்டு (பல நல்லுள்ளங்களில் உதவியோடு) நான் போராடி வென்ற சாதனைகள்.. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்.............. நேற்று முன்தினம் மாலை "நெல்லை புத்தக விழா" நிகழ்விற்கு பிறகு அதன் தீவிரத்தை உணர்ந்தேன். "நெல்லை புத்தக திருவிழா" மேடையில் என் கவிதை வாசிப்பிற்கு பிறகு, பெருங் கவிஞர்களும், இலக்கிய ஜாம்பவான்களும், விழா அமைப்பாளர்களும் என்னை புறக்கணித்த விதம்... நான் வெறும் திருநங்கைதானோ என்ற... சலிப்பை ஏற்படுத்தியது. அதனினும் கொடுமை, பார்வையாளராக அமர்ந்திருந்த, நான் வெகுவும் மதிக்கும் இலக்கிய ஜாம்பவான்கள் யாரும் என் கவிதையை கேட்கவும் தயாரின்றி உரையிடாலில் திளைத்திருந்தனர். எல்லோரும் என் கவிதையை கேட்க வேண்டும், ரசிக்க வேண்டும், புகழ்ந்த தள்ள வேண்டும் என்பது என் தேவையல்ல., தன் கண்முன் ஒலிக்கும் ஒரு விளிம்பின் குரலை கேட்கவும் தயாரில்லை என்ற மெத்தனமே என்னை பாதிக்கிறது. இது ஒருபுறமிருக்க, விழா அமைப்பினரோ தலையிலிருந்து விழும் கூந்தலுக்கு தரும் மரியாதையைக்கூட தரவில்லை., ஹானரோரியம் என்ற பெயரில் ஒரு சிறு தொகையை எனக்கும், தோழர்கள் ப்ரியா பாபு, பாரதி கண்ணம்மா மற்றும் நடனமாடிய திருநங்கை முத்து மீனாட்சி நால்வருக்கும் போக்குவரத்துடன் சொற்ப தொகையும், எங்களுக்கு கொடுத்த்தை விட ஏழு படங்கு+போக்குவரத்து செலவு என பெரும் இலக்கியவாதி ஒருவருக்கும் கொடுத்தார்கள். எங்களின் போக்குவரத்திற்கே போதாத அந்த சொற்பத்தொகையையோடு கூடுதல் கொஞ்சம் கேட்டபோது கூட மறுநாள் மதியம் 1-மணி வரை காத்திருந்தே பெற்றோம் (அந்நிலையில் எங்களுக்கு ஆதரவாக நின்ற எழுத்தாளர் க்ருஷிக்கும், அரங்க ஆளுமை மு.ராமசாமி அவர்களுக்கும் எம் பெரும் நன்றி!).. நண்பர்களே!! இப்பதிவின் நோக்கம் என்னவென்றால், திருநங்கைகள் குறித்த முதல் புத்தகம் எழுதிய தோழர் ரேவதியாகட்டும், அதிகபட்சமாக மூன்று புத்தகங்களை எழுதிய தோழர் @Priyababu ப்ரியா பாவுவாகட்டும், சிறியவள் நானும் எங்கள் பாலியல் அடையாளயத்தை வென்று, அதன் பக்க விளைவுகளையும் வென்று சற்று பிரச்சார நெடியோடாவது (என்று முன்முடிவும், பின்முடிவும் கொண்டோர்க்கு) இந்தளவிற்காவது எழுத முடியுமென்றால், பதின்ம வயதிலேயே பாலியல் அடையாள சிக்கலினால் ஏற்படும் மன உலைச்சல்கள் இன்றி, பள்ளியில் மாணவர்-ஆசியர்களின் பாலியல் வக்கிரங்கள் ஏதும் இன்றி, ஆரோக்கியமான கல்விச் சூழலும், வாசிப்பு சூழலும், கூடுதலாக இன்றைய இலக்கிய சாம்பவான்களுக்கு அன்று வாய்த்த ஆண்-சுதந்தரமும் வாய்த்திருக்கேமேயானால், எங்களின் படைப்பும், தரமும் உங்களின் தரத்திற்கு கொஞ்சமும் குறைந்திருக்காது என்பது உறுதி.. இதற்குப் பிறகும் எங்கள் உரையும், கவிதையும் மொக்கையென்றோ, பிரச்சார நெடியென்றோ கருதி காதுகொடுக்கவும் நீங்கள் தயாரில்லையென்றால், நீங்கள் தாரளமாக எங்களை புறக்கணிக்கவே செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
//எங்களின் படைப்பும், தரமும் உங்களின் தரத்திற்கு கொஞ்சமும் குறைந்திருக்காது என்பது உறுதி..// உங்களின் மன உறுதி ஒவ்வொரு செயலிலும் உங்களை வழிநடத்தும்..வாழ்த்துகள்
cool always cool
Post a Comment