விளக்கங்கள் 1. 377-ஐ குறித்து பேசும் முன் சமபால் ஈர்ப்பிற்கும், பாலியல் அடையாள சிக்கலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்வது அவசியம்… சமபால் ஈர்ப்புடையவர்களுக்கு பாலியல் ஈர்ப்பென்பது சமபால் ஈர்ப்புடையவர்களுடன் ஏற்படும் ஈர்ப்பு மட்டுமே.. பாலியல் அடையாள சிக்கல் என்பது திருநங்கைகளும்/திருநம்பிகளும் தங்கள் பாலினத்தை முறையே பெண்/ஆண் என முழுமையாக மாற்றி வாழ வேண்டுமென்பது. 2. இயற்கை? இயற்கைக்கு முரணானது என்று சொல்லுபர்கள் பெரும்பாலும் மதவாத பிண்ணணியை கொண்டர்வகளாகவே இருக்கிறார். எது இயற்கை? அல்லது எது இயற்கை எது இயற்கைக்கு முரணானது என்று தீர்மானிப்பது யார்? அப்படி பார்த்தால் மதமும், சாதியம் தானே இயற்கைக்கு முரணானது.. ஒரு செல் அமீபா தோன்றி பல மில்லியன் ஆண்டு பரினாம வளர்ச்சியில் உருவான ஹோமெசெப்பியன்ஸ் ஆடையின்றி குகைவாசிகளாக இருந்து மெல்ல நெருப்பும், சக்கரமும் கண்டுபிடித்து கொஞ்சம் கொஞ்சமாக வேட்டியாடி, விவசாயம் செய்து இன்றைய நவீன மானுடமாக வளர்ந்துள்ளோம்.. இதில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த மதம் தானே இயற்க்கைக்கு முரணானது. மேலும், காதல், காமம் புரியாத வயதில் குழந்தை திருமணம் செய்து வைத்தீர்களே அது இயற்கைக்கு முரண் இல்லையா… இல்லை அந்த பொம்மை கல்யாணத்தில் கூட சிறுவன் இறந்த பின் பெண் குழந்தைகளை விதவையாக்கி ரசித்தது இயற்கைக்கு முரண் இல்லையா..? கணவன் இறந்த பின் உடன்கட்டை ஏற்றி ஊர் கூடி கொலை செய்தது இயற்கைக்கு முரண் இல்லையா… ஏன் இப்போதும் கூட மனிதன் பிறந்தால் இறக்க வேண்டும் என்ற இயற்கைக்கு மீறி ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து மரணம் தொட்ட மனிதர்களை மீண்டும் உயிர்கொடுத்து உலவவிடுதல் இயற்கைக்கு முரணில்லையா…? தாங்கள் நம்பும் மதத்திற்கு முரணானது என்பதை ஒத்துக்கொள்ள நேர்மையற்ற இவர்கள் பயன்படுத்தும் மாற்று சொற்கள் தான் இயற்கையும், கலாச்சாரமும்.. ஆனால், சமபால் ஈர்ப்புடைய தோழர்களும், திருநங்கைகளும், திருநம்பிகளும் முறையே பாலியல் ஈர்ப்பிற்கும், பாலியல் அடையாளத்திற்கும் நேர்மையாக இருந்து அந்த உரிமையை நேர்மையாகத்தான் கேட்கிறோம்.. ஒரு ஜனநாயக நாட்டில், ஆதி முதல் இருந்து வந்த சமபால் ஈர்ப்பு கொண்ட தோழர்களை இயற்கைக்கு முரணானவர்கள் என்று உச்ச நீதிமன்றமே கூறுவது… இந்திய இறையாண்மைக்கு பெருத்த அவமானமாகும். 3. பாராளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டுமா? இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அடிப்படை உரிமைகளான கல்வி, வேலைவாய்ப்பு, குடும்பம், சமூக பாதுகாப்பு, சுகாதாரம் என எதுவும் பாலின பேதமின்றி இருக்க வேண்டுமென கூறும் போது ஏன் திருநங்கைகள்/திருநம்பிகள் மற்றும் சமபால் ஈர்ப்பு கொண்ட ஆண்/பெண்கள் ஒதுக்கப்பட வேண்டும். இது ஒருபுறமிருக்க, ஒரு வேளை குரங்குகளோ இன்ன பிற விலங்குகளொ உங்களிடன் எங்களுக்கு இன்ன உரிமை வேண்டுமென்றால் நீங்கள் புதிய சட்டமியற்றலாம். அல்லது, ஒருவேளை செவ்வாய் கிரகவாசிகளாக இருந்து உங்கள் இந்திய நாட்டில் இந்த உரிமை கொடுங்கள் என்றால் புது சட்டம் இயற்றுங்கள்… ஆனால், சக இந்தியர்களான நாங்கள் சட்டத்தை திருத்தத்தான் போராட முடியும். கேள்விகள் 1. 377 என வரும்போது நாடுமுழுதும் திருநங்கைகள் உட்பட திரளும் LGBTiQ ஏன் திருநங்கைகள்/திருநம்பிகளின் கல்வி/வேலைவாய்ப்பு என வருகையில் ஏன் ஐந்து பேர் கூட கூடுவது இல்லை…? 2. மூலைக்கு மூலை 377-ஐ விவாதிக்கும் ஊடகங்கள் சமீபத்தில் வேலைவாய்ப்பு மற்றும் இடஒதுக்கீடு கேட்டு போராடிய எங்கள் போரடங்களுக்கு அந்தளவிற்கு முக்கியத்துவம் தராதது ஏன்…? அல்லது இந்தியாவில் முதன்முறையாக TNPSC தேர்வெழுத போராடி அனுமதி பெற்ற ஸ்வப்னா தோழர்க்கு என்ன முக்கியத்துவம் தரப்பட்டது? நாடு முழுவதும் 377 க்கு எதிராக போராட கிடைத்த குறைந்தபட்ச அனுமதி கூட திருநங்கைகள்/திருநம்பிகளின் வேலை வாய்ப்புக்காக போராட கிடைப்பதில்லை ஏன்? 3. திருநம்பிகளையும், சமபால் ஈர்ப்புடைய பெண்(லெஸ்பியன்)களையும் ஏற்றுக்கொள்ள தயங்கும் திருநங்கைகளுக்கான தொண்டு நிறுவனங்கள் சமபால் ஈர்ப்புடைய ஆண்களுக்காக உறுதுணையாக நிற்பது ஏன்…?
Subscribe to:
Post Comments (Atom)
0 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
Post a Comment