WALL - E

Waste Allocation Load Lifter - Earth Class என்பதன் ரத்தின சுருக்கம் WALL-E. 1969ல் வெளிவந்த திரைப்படம் ஒன்றின் Out there / There's a world outside of Yonkers என்ற பாடல் ஒலிக்க படம் துவங்குகிறது. நிர்மூலமாகிவிட்ட பூமித்தாயின் மயானம் போல, மனிதவாடையே இல்லாமல் வெறும் வானுயர்ந்த கட்டிடங்களுடன் படத்தின் முதல் காட்சி விரிகிறது. அவற்றின் மத்தியில் ஆங்காங்கே ஜொளிக்கின்றன BUY LARGE என்ற விளம்பர பலகைகள். நுகர்வு கலாச்சாரத்தின் நிச்சயமான ஆபத்தை முதல் காட்சியிலே கன்னத்தில் அறைந்து சொல்கிறது PIXER நிறுவனம். பின்னர் தான் தெரிகிறது, அவை கட்டிடம் அல்ல குப்பைக் குவியல் என்று. மனிதர்கள் விட்டுச்சென்ற குப்பைகளை அள்ளியெடுத்து சிறு சிறு சதுரகட்டிகளாக்கி, அவற்றை கட்டிடம் போல அடுக்கி வைப்பது WALL-E என்ற தனியொரு ரோபா. இன்றிலிருந்து 700 வருடங்கள் கழித்து மனிதர்கள் நுகர்வு கலாச்சரத்திற்கும், அதீத தொழில்நுட்பத்திற்கும் அடிமைப்பட்டு இயற்கை வளங்களையும், மனிதத்தன்மையும் இழந்து எந்திரமயமாகியிருக்க, WALL-E அவர்களை மீண்டும் மனிதர்களாய் மாற்றும் அழகான கவிதை WALL-E.


யாருமற்ற பூமியில் WALL-E க்கு துணையாய் இருப்பது ஒரேயொரு கரப்பான் பூச்சியும், பாடல் காட்சி கொண்ட பழைய வீடியோ டேப்பும் தான். பாடல் காட்சியின் இறுதியில் காதலர்கள் கைகோர்க்கும் தருணத்தில் துணையற்ற WALL-E தன் இரு கையையும் ஏக்கத்தோடு பற்றிக்கொள்வது நூற்றாண்டுத் தனிமையின் சோக கீதம். தினந்தோறும், குப்பைகளை அள்ளி சீர் செய்யும் போது தென்படும் வித்தியாசமான பொருட்களை தனது தனி அறையில் சேகரிக்கும் பழக்கம் கொண்டது WALL-E. அழிந்து போன உலகத்தின் கடைசி மூச்சாய் முளைவிட்ட சிறு செடி ஒன்றை அவ்வாறு கண்டெடுக்கும் WALL-E, அதை ஷீ ஒன்றில் வைத்து பாதுக்காப்பது அழகு. அழகிய iPod வடிவத்தில் அதிரடியாய் பூமியை சோதனையிட வரும் ஈவா (நாயகி) எனும் மற்றொரு ரோபோவிடம் காதல் கொள்ளும் WALL-E அதற்கு செடியை பரிசாய் அளிக்கிறது. அச்செடியை ஆசையாய் பெற்றுக் கொண்டதும் ஈவா செயலிழந்து விடுகிறது. ஈவாவை பூமியில் இறக்கிவிட்ட எந்திரம் மீண்டும் அதை எடுத்துச் செல்லும் பொது அதைத் தொடர்ந்து WALL-E செல்லும் போது துவங்குகிறது கதை.

BUY LARGE என்ற நிறுவனம், வாண்வெளியில் பிரம்மாண்டமான விமானம் ஒன்றில் மனிதர்களை குடியமர்த்துகிறது. அங்கே அதீத நவீன வசதிகளை மனிதர்களுக்கு வழங்குகிறார்கள். நவீனம் என்றால் அங்குள்ள மனிதர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அந்தரத்தில் மிதக்கும் சொகுசு இருக்கை ஒன்றில் அமர்ந்தபடியே அவர்கள் வேண்டும் பொருட்களை அவர்கள் அருகில் எடுத்துவர ரோபோ பணியாட்கள். முகத்திற்கு நேரே உள்ள Virtual Monitorல் வேண்டியவர்களின் முகத்தை பார்த்தப்டியே பேசிக்கொள்ளலாம். உண்ணும் உணவு, உடையின் நிறம் அனைத்தையும் கூட தேர்வு தீர்மானிப்பது BUY LARGE நிறுவனம் தான். விளைவு மனிதர்கள் உடல் பருமனடைந்து, நடக்கக் கூடத்தெரியாதவர்களாய், ஸ்வ்விம் பூலில் நீந்தத் தெரியாதவர்களாய், கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே தெரியும் நட்சத்திரங்களையும், அண்ட வெளியையும் ரசிக்கத்தெரியாதவர்களாய் கிட்டத்தட்ட ஜடமாய் ஆகியுள்ளார்கள்.


700 வருட விண்வெளி சொகுசு வாழ்க்கையில் மனிதர்கள் மெல்ல மெல்ல பொம்மைகளைப் போல மாறிவருவதை காலவரிசைப்படி தொங்கவிடப்பட்டுள்ள அவ்விமான கேப்டன்களின் புகைப்படங்களில் தெரிகிறது. பழுதடைந்த ஈவாவை சரி செய்யும் போது அதனுள் உயிருள்ள செடியைக் கண்டெடுக்கிறார்கள். முதன்முதலாக செடியைப்பார்க்கும் விமான கேப்டன் தனது கம்யூட்டரிடம் விளக்கம் கேட்டு செடிகளைப் பற்றிய புத்தகத்தைப் பெறுகிறான். புத்தகத்தை எப்படி பிரித்து படிக்க வேண்டும் என்பதைக் கூட அக்கம்யூட்டர் தான் சொல்லித்தருகிறது. செடியைப் பற்றி அறியும் போது, நடனம் என்னும் புது வார்த்தையையும் கேள்விப்படுகிறான். நடனம் என்றால் என்ன என்பதைக்கூட கம்ப்யூட்டர் தான் வீடியோவுடன் விளக்குகிறது. தனது முன்னோர்களின் நடனக் காட்சியைப் பார்த்து வியக்கும் கேப்டன் தன்னால் நடக்கக் கூட முடியாது என்பதை நினைத்து வருந்துகிறான். தொடர்ந்து முன்னோர்களைப் பற்றி அறியும் போது, பூமியைக் குறித்தும், தண்ணீர், கடல், தாவரம் இன்ன பிறவற்றை பற்றியும் தெரிந்து கொள்கிறான். இதுவரை, மனித குலம் இழந்த இயற்கையோடு இயைந்த வாழ்வை உணர்ந்து, மீண்டும் தாய்பூமிக்கு திரும்ப முயற்சிக்கிறான். தாயகம் திரும்ப விரும்பும் கேப்டனை அதுவரை அடிமாய் சேவகம் செய்த கம்ப்யூட்டர் அவர்களை பூமிக்கு திரும்பவிடாமல் தன் சுயரூபத்தைக் காட்டுகிறது. பசுமை பூத்த அச்செடியை சாவியாய் கொண்டு அனைவரும் பூமி திரும்ப WALL-Eயும், ஈவாவும் உதவுகிறார்கள்.பூமி திரும்பும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்தல், மீன்பிடித்தல், வீடு கட்டுதல் என உடல் உழைப்புடன் வாழ்வதைப் பார்க்கும் போது, நாம் அனைவரும் நகரமயமாக்கலின் அபாயத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிளாஸ்டிக், ரசாயனக்கழிவுகள், தொழில்நுட்ப உபகரணங்களின் கழிவுகள் சேர்ந்து பூமியை கொஞ்சம் கொஞ்சமாக குப்பைக் கூடமாக்கி வருகிறது. அதன் அபாயத்தை வெகு அழுத்தமாக, அழகாக கற்பனை கலந்து சொல்லியிருக்கிறது WALL-E. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்குமான இப்படத்தை செம்மையாக எடுத்து சொல்ல வேண்டியதை சொல்லியிருக்கிறது PIXER இனி செய்ய வேண்டியது நாமதானே!

13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

செந்தழல் ரவி said...

படம் பார்க்கும்போது ஏதோ வால்-இக்கும் ஈவாவுக்கும் இடையேயானா காதல் - ஏதோ மனிதர்களுக்கிடையே ஏற்படுவதைபோல உள்ளது...!!!

அருமையான விஷுவல் ட்ரீட் !!!

யாத்ரீகன் said...

>> அருமையான விஷுவல் ட்ரீட் !!! <<

yes.. these guys are able to take a movie where the entire family could watch, get entertained, not an advise, yet a good movie..

G.Ragavan said...

வால்-ஈ பாத்துட்டீங்களா. நானுந்தான். இப்பப் பாத்த படங்கள்ள எனக்கு ரொம்பப் பிடிச்ச படம் இதுவும் டார்க்-நைட்டும்தான். அதுல வால்-ஈ சூப்பரு.

அதுலயும் அந்தச் செடியை உள்ள வெச்சிக்கிட்டு ஈவா அமைதியானப்புறம் அதை அங்கயிங்கன்னு கூட்டீட்டுப் போறதும்....மழை பெய்றப்போ கொடை அதுயிதுன்னு ஒரே சிரிப்புதான் போங்க. அதே போல கடைசீல ஈவா அந்தக் காட்சியெல்லாம் பாக்குறப்போ உணர்ச்சிகளைக் காட்டவே முடியாத அந்த ரோபோ முகத்துல கூட காதலைக் காட்டியிருக்கிறது அற்புதம்.

உண்மையிலேயே படம் சொல்லியிருக்கும் பாடம் நாம் அனைவரும் சிந்திக்கத் தொடங்க வேண்டியது.

cable sankar said...

நல்ல விமர்சனம். மேலும் விமர்சனத்திற்கு http://cablesankar.blogspot.com/2008/09/blog-post_5240.html

ஆர்.கே.சதீஷ்குமார் said...

//பூமி திரும்பும் அவர்கள் மீண்டும் விவசாயம் செய்தல், மீன்பிடித்தல், வீடு கட்டுதல் என உடல் உழைப்புடன் வாழ்வதைப் பார்க்கும் போது, நாம் அனைவரும் நகரமயமாக்கலின் அபாயத்திலிருந்து விழித்துக் கொள்ள வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.//
yes.

Anonymous said...

நானும் பார்த்தேன்..நல்ல படம் :)

வரவனையான் said...

// Thooya said...
நானும் பார்த்தேன்..நல்ல படம் :)//


ஒரு படம் விடாத...


*************************************
நான் இன்னும் பார்க்கலை வித்யா, பரவாயில்லை நல்ல விமர்சனம் எழுதற. வாழ்த்துகள் உயிரோட்டமா இருக்கு

raj said...

படம் இன்னும் பார்க்கவில்லை! ஆனால் உங்கள் கருத்துரை படம் பார்க்கத் தூண்டுகிறது...

வாழ்த்துகள்..

அதிரை ஜமால் said...

படம் பார்க்கும்போது ஏதோ வால்-இக்கும் ஈவாவுக்கும் இடையேயானா காதல் - ஏதோ மனிதர்களுக்கிடையே ஏற்படுவதைபோல உள்ளது...!!!

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நீங்க கதை சொல்லாதவரை - வெறும் காதல் மட்டும் தான் புரிந்தது.

நன்றி.

solomon said...

good comments

s.solomon francis samuel said...

i completely read your book "naan saravanan.vidhya". i thank "kizhakku padhippagam" for giving opppurtunity for me to know your autobiography through book.

Srivats said...

Nalla ezhudhareenga , edharthamaavum erukku :) Endha padam enakkum romba pidichi erundhudhu, Came here through Athivas post.

Sundar Raj said...

ஈவா ரோபாட் ஒரு துப்பறியும் வகையை சேர்ந்ததுன்னும், அது பூமிக்கு அனுப்பப்படுவதே அச்செடியை கண்டுபிடிக்கதானென்றும் குறிப்பிட மறந்து விட்டீர்கள் போலும்...மற்றபடி, சுவாரசியமான படத்திற்க்கு சுவாரசியமான விமர்சனம்...நன்றி...
--
ம. சுந்தர் ராஜ்