திருநங்கைகள் கல்லூரியில் சேர்க்கை - அரசிற்கு நன்றியும், சில கோரிக்கையும்

இந்தியாவில் முதன் முறையாக, அதுவும் தமிழகத்தில் திருநங்கைகளுக்கு கல்வி கற்பதில் வாய்ப்பு அளிப்பது குறித்து முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நலவாரியம் அமைத்தலை தொடர்ந்து திருநங்கைகளின் நலனுக்கான அடுத்த படிக்கட்டாக இது கருதப்படுகிறது. ஆனால், இதிலுள்ள சில நடைமுறை சிக்கல்களை அறிந்து அதற்கும் அரசு ஆவண செய்தால் மட்டுமே அதன் முழு பலனும் கிட்டும்.


பொதுவாக, திருநங்கைகள் தங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறும் பொழுது வயது 16 முதல் 22 ஆகிறது. தான் ஒரு ஆணல்ல, திருநங்கை என்பதை முழுதாக உணர்ந்து அதனால் ஏற்படக்கூடிய அனைத்து பின் விளைவுகளையும் அறிந்து, தீர்க்கமான முடிவெடுக்கும் வயது இது. ஆனால், அதற்குப்பின் அவர்கள் தொடர்ந்து குடும்பத்துடன் தொடர்ந்து வாழ்வது அரிதினும் அரிது. குடும்பத்தை விட்டு வெளியேறிய பின் திருநங்கைகளின் வாழ்க்கை முறை என்னவென்பதும் நாம் அனைவரும் நன்கு அறிந்ததே.


பிச்சை எடுத்தோ அல்லது பாலியல் தொழில் செய்தோ வாழ வேண்டியுள்ள திருநங்கைகள் அதனை விட்டுவிட்டு கல்லூரி செல்வது என்பது நடைமுறையில் சாத்தியமல்ல. பெற்றோருடன் வாழும் பட்சத்தில் கல்லூரிக் கட்டணம், தங்குமிடம், உணவு, பாதுகாப்பு இவற்றை அவர்களே பொறுப்பேற்றுக் கொள்வர். ஆனால், அன்றாட செலவிற்கே பிச்சை எடுக்கும் திருநங்கைகள் கல்லூரி செல்ல ஆரம்பித்தால் அவர்களின் கல்விக்கான அடிப்படை தேவைகளுக்கு பொறுப்பேற்க யாரும் இல்லை என்பதே நிஜம்.


அப்படியே கற்பதற்கு பொருளாதார தடையேதும் இல்லாதபோதும், தொன்றுதொட்டு திருநங்கைகளுக்கிடையேயுள்ள அர்த்தமற்ற சட்டதிட்டங்களுக்கிடையே சிக்கிக் கொண்டு கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் திருநங்கைகள் இந்த அரசானையை கேள்விப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கு ஆர்வமும் காட்டப்போவதில்லை. திருநங்கைகளில் பலர் 10-ம் வகுப்பு கூட தேராதவர்கள். சிலர் M.A., M.Sc., M.B.A., M.Phil கூட முடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகம் படிக்காத திருநங்கைகளுக்கு கல்வியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. நன்கு படித்தவர்களுக்கோ, படித்தும் வேலையில்லாத நிலையில், தொடர்ந்து படிப்பு அவசியமற்றது.


இத்தகைய காரணங்களால், இம்முயற்சி தோல்வியடைவதற்கே அதிகம் வாய்ப்புள்ளது. பிறகு, திருநங்கைகளுக்கு அரசு உதவ முன்வந்தாலும், திருநங்கைகள் அதனை முறையாக பயன்படுத்துவதில்லை என்ற அர்த்தமற்ற பழிச்சொல் தான் மிஞ்சும்.


*********


திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவேண்டுமெனில் முதலில் அவர்களை குடும்பம் ஏற்றுக் கொள்ள ஆவண செய்ய வேண்டும். குடும்பம் ஏற்றுக் கொள்ள சமூகத்திற்கு திருநங்கைகள் குறித்த சரியான புரிதலை பரவலாக்க வேண்டும். மற்ற ஆண் / பெண் அனைவருக்கும் வாய்த்த இயல்பான குடும்பச் சூழல் திருநங்கைகளுக்கும் ஏற்பட வேண்டும்.


ஆதரவற்ற நிலை, பிச்சையெடுத்தல், மற்ற தகாத சூழல் போன்றவற்றை சந்திக்காத வாழ்க்கை முறை திருநங்கைகளுக்கு அமைய வேண்டும். அப்பொழுது மற்றவர்களைப் போலவே திருநங்கைகளாலும், இவ்வரசானையைப் பயன்படுத்தி படிக்க முடியும். அதைவிட முக்கியம் இப்பொழுதுள்ள படித்த / படிக்காத திருநங்கைகளுக்கு அவர்களின் கல்வித் தகுதிக்கேற்ப தகுந்த வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவதன் மூலம் இவ்வரசானையை பயனுள்ளதாக்கவும் முடியும்.


**********


இவ்வரசானையின் கூறப்பட்டுள்ள சில நிபந்தனைகள் அங்கீகாரத்திற்கிடையே ஒதுக்குதலாகவும் உள்ளது.


இவ்வரசானை அரசு கல்லூரிகளில் அதுவும் கலை / அறிவியல் ( Arts and Science )பாடங்களுக்குத்தான் பொருந்துமாம். தனியார் கல்லூரிகளிலோ, மற்ற உயர் கல்விகளுக்கோ இந்த அரசானை பொருந்தாதாம். தமிழக அரசு தாயுள்ளத்துடன் இதனை பரிசீலித்தேயாக வேண்டும். திருநங்கைகளுக்கு அரசு அளிக்கும் கல்வி வாய்ப்பென்பது முழுமுற்றானதாக இருக்க வேண்டும். அதில் பாகுபாடென்பது பொருளற்றது.


அதோடு, இருபாலர் கல்லூரிகளில் (Co-education ) மட்டும், அதும் கடைசி பெஞ்சில் தான் அமர வேண்டும் என்ற தடைகளையும், கருணையோடு பரிசீலிக்க வேண்டும்.***********


அரசின் நல்முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வந்தனமும்; அம்முயற்சி ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்ற ஆதங்கமுமே திருநங்கைகளின் சார்பாக எனது இப்பதிவின் நோக்கம்.

27 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

எம்.ரிஷான் ஷெரீப் said...

http://mrishanshareef.blogspot.com/2008/05/blog-post_15.html

வால்பையன் said...

உங்கள் ஆசைகளும் கனவுகளும் கொஞ்சம், கொஞ்சமாக நிறைவேறி கொண்டிருக்கிறது. விரைவில் அது முழுமையடையும், நம்பிக்கையுடன் இருங்கள்,
அப்போ அப்போ எதாவது பதிவும் போடுங்கள்

வால்பையன்

Balaji-Paari said...

அன்பின் தோழி,
தங்கள்ளது இப்பதிவு மிகவும் முக்கியமானது. மிகச் சரியான நேரத்தில் பதிவு செய்துள்ளீர்கள். இப்பதிவையோ அல்லது இது கூறும் செய்திகளையோ ஊடகங்கள் மூலம் பொது மக்களின் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் எடுத்து செல்லுமாறு கேட்டு கொள்கின்றேன்.

கயல்விழி முத்துலெட்சுமி said...

கோரிக்கைகள் நிறைவேறிட வாழ்த்துக்கள்...

( பழிச்சொல்.. பொறுப்பு இரண்டும் மேலே தவறாக தட்டச்சப்பட்டிருக்கிறது மாற்ற நேரமிருப்பின் செய்யுங்கள்..)

லிவிங் ஸ்மைல் said...

//// கயல்விழி முத்துலெட்சுமி said...

கோரிக்கைகள் நிறைவேறிட வாழ்த்துக்கள்... ///

நன்றி...

/// ( பழிச்சொல்.. பொறுப்பு இரண்டும் மேலே தவறாக தட்டச்சப்பட்டிருக்கிறது மாற்ற நேரமிருப்பின் செய்யுங்கள்..) ///


மாற்றிவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

nedun said...

நீண்ட நாட்களாக தாங்கள் பதிவுகள் ஏதும் இடவில்லை. ஏன்?

முரளிகண்ணன் said...

\\தனியார் கல்லூரிகளிலோ, மற்ற உயர் கல்விகளுக்கோ இந்த அரசானை பொருந்தாதாம். தமிழக அரசு தாயுள்ளத்துடன் இதனை பரிசீலித்தேயாக வேண்டும். திருநங்கைகளுக்கு அரசு அளிக்கும் கல்வி வாய்ப்பென்பது முழுமுற்றானதாக இருக்க வேண்டும். அதில் பாகுபாடென்பது பொருளற்றது\\

கண்டிப்பாக

மனோகரின் மாணவன் said...

அன்புடன் வித்யாவிற்கு...
சாதிகள் இல்லையடி பாப்பா
குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்
அன்பு நிறைய உடையவர்கல் மேலோர்.

போராட வேண்டாம். என்னைப் பொறுத்தவரை அது கோழைத்தனம். துணை வரும் நட்போடு போர் செய்ய பழகிக் கொள். ஒன்று லட்சிய வாழ்க்கை அல்லது வீர மரணம்.

Sathiya said...

நீங்கள் சொன்ன விஷயத்தை நானும் படித்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் சொல்லும் கோரிக்கைகளையும் திரு கருணாநிதி அவர்கள் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு ரோஸ் மூலம் மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது கண்கூடாக தெரிகிறது. கூடிய விரைவில் திருநங்கைகளும் சராசரி வாழ்க்கையை வாழ முடியும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
(http://vadakkupatturamasamy.blogspot.com/2008/04/blog-post_27.html)

ஏகலைவன் said...

தோழியர் வித்யா அவர்களுக்கு,

தொடர்ந்து நிறைய எழுதுங்கள். அது திருநங்கைகளின் பிரச்சினை குறித்துத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, இன்னபிற சமூகப் பிரச்சனைகளையும் நீங்கள் கையிலெடுத்து எழுதவேண்டும். அதற்காக திருநங்கைகள் அனுபவித்துவரும் கொடுமைகளையோ இழிநிலைகளையோ நான் குறைத்து மதிப்பிடுவதாக நினைக்கக் கூடாது.

முக்கியமாக உங்களது போராட்டங்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைப் போல இருந்துவிடக்கூடாது. சமூகத்துக்கு எந்த விதமான உருப்படியான பங்களிப்பையும் செய்யாத பலர் எங்கு முகாமிட்டுள்ளனர் என்றால் அது அரசுத்துறையில்தான்.

அவர்களின் போராட்டங்களும் கோரிக்கைகளும் அவர்களுடைய பிரச்சினைகளை மட்டுமே வட்டமடித்துச் சுற்றிவரும். அவர்களைத்தாண்டி விவசாயிகள் குறித்தோ, விலைவாசி ஏற்றம் குறித்தோ அல்லது பெண்ணடிமைத்தனம் குறித்தோ, அவ்வளவு ஏன் திருநங்கைகள் பற்றியதாகவோ ஒருபோதும் இருக்காது.

வெறும் கூலி உயர்வும் போனசும் அவர்களது வயிற்றுக்குச் சற்று பசை பூசலாம், சமூகத்தில் வாழும் பிற பெரும்பான்மையானவர்களின் நிலை???!!!

கூலி உயர்வு குறித்துப் போராடுவது தவறல்ல. ஆனால் அவர்களது கோரிக்கைகளும் போராட்டங்களும் அதனைத்தாண்டி வருவதில்லை என்பதுதான் பிரச்சினை.

"எங்களை மனிதனாகக் கூட அங்கீகரிக்காத இந்த கேடுகெட்ட சமூகத்தைப் பற்றி நாங்கள் ஏன் கவலைப்படவேண்டும்" என்று நீங்கள் மனதுக்குள் கேட்பது எனக்குப் புரிகிறது.

அப்படி சமூகத்தால் புறக்கனிக்கப்பட்டவர் நாங்கள் மட்டும்தான் என்று உங்களின் எண்ணிக்கையினை நீங்களே சுருக்கிப் பார்க்கவேண்டாம். உங்களுக்குத் துணையாக 'ஒருவேளை சோறுகூட இல்லாத பலகோடி மக்கள்' உங்களுக்காக காத்திருக்கின்றனர். ஒருநாளைக்கு வெறூம் இருபது ரூவாய் மட்டுமே சம்பளமாகப் பெறக்கூடியவர்கள் 80 கோடிகளுக்கும் மேல் இருக்கிறார்கள். (இது நாம் சொல்லுகின்ற மனக்கணக்கு அல்ல, அரசாங்கமே வெளியிட்ட புள்ளிவிபரம்தான் இவை)

சமூகத்தில் இழிநிலையில் உள்ள அத்துனை பிரச்சினைகளையும் உடனடியாகக் கையிலெடுங்கள். அதற்காகப் படியுங்கள் எழுதுங்கள். திருநங்கைகளின் அவல நிலைகுறித்தும் ஊடாக எழுதுங்கள்.

உங்களது எழுத்துநடை மிகவும் சிறப்பாக இருப்பதனால், உங்களால் இதனைச் எளிதாகச் செய்யமுடியும் என்பதனால் இதனை உங்களிடத்தில் நான் வலியுறுத்திச் சொல்லுகிறேன். உங்களது அத்துனை போராட்ட நடவடிக்கைகளையும் கீழ்கண்ட எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துங்கள். நான் நிச்சயமாக ஆதரவுடன் பங்களிப்பேன்.

நான் மேற்கூரியவற்றில் உமக்கு ஏதேனும் மாற்றுக் கருத்தோ விமர்சனமோ இருந்தால், தயங்காமல் எடுத்துவையுங்கள்.

தோழமையுடன்,

ஏகலைவன்.
yekalaivan@gmail.com

கயல்விழி said...

வித்யா அவர்களே

ஒரு மனிதரை, அவர் ஆணோ, பெண்ணோ, திருநங்கையோ - டிஸ்க்ரிமினேட் பண்ணுவது அநியாயம். ஆனால் இந்த அநியாயங்கள் தொடர்ந்து கல்வியிடங்களிலும், வேலையிடங்களிலும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இது உடனே நிறுத்தப்படவேண்டும். உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

அசுரன் said...

தோழி லிவிங் ஸ்மைல் வித்யா,

தமிழகத்திலும் அதனை தொடர்ந்து பிற மாநிலங்களிலும் திருநங்கைகளுக்கான உரிமைகளை சிவில் சொசைட்டி அங்கீகரிக்க தொடங்கியுள்ள மாற்றங்கள் மகிழ்ச்சியளிக்கிறது.

ஆயினும் இவை இன்னமும் திருநங்கைகளின் பிரச்சினைகள் குறித்த அடிப்படையான புரிதல் இன்றியும், திருநங்கைகள் குறித்த பொதுப் புத்தியின் ஆளுமையின் கீழ் செய்யப்படுபவையாகவும் இருப்பதையே தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள கல்வித் துறை சீர்திருத்தம் காட்டுகிறது.

கடைசி பெஞ்சில் வைப்பது என்றால் இதை எப்படி புரிந்து கொள்வது?....

தட்டுங்கள் கதவுகளை இன்னும் பலமாக... நாம் உங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கிறோம்.....

புகழ்ச்சிகளும், இகழ்ச்சிகளும் நம்மை பாதிக்காது.. நாம் கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்று முன்னோக்கி நடப்போம்.

புரட்சிக்ர வாழ்த்துக்கள்.....
அசுரன்

a said...

அன்பின் தோழி,

கோரிக்கைகள் நிறைவேறிட வாழ்த்துக்கள்!

Socrates said...

சமூகம் விழிப்புணர்வு பெற்றால் தான், நீங்கள் விரும்புகிற குடும்பத்துடன் வாழ்கிற வாழ்க்கை என்கிற நிரந்தர தீர்வாக இருக்க முடியும். அதற்கு தனிநபர்களாக‌ இருக்கும் பிரிந்து கிடக்கிற வரை சாத்தியமில்லை.

த‌னிநபர்களாக இருப்பதால் தான், "தாயுள்ளத்துடன்" பரிசீலிக்க மன்றாடுகிறீர்கள்.

எந்த‌ உரிமையும் வ‌ர‌லாற்றில் போராடாம‌ல் கிடைத்த‌தில்லை. போராடி தான் அனைத்தையும் பெற்றிருக்கிறோம்.

போராடுங்க‌ள்! ஒன்றாய் இணைந்து போராடுங்க‌ள்.

myil.blogspot.com said...

இனிய வித்யா..
உங்கள் கோரிக்கைகள் நியாயமானவை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை..
அவை நிறைவேரிட வாழ்த்துகள்!
மேலும் இந்த கோரிக்கைகளை அரசுக்கு நேரடியாக தெரிவிக்க ஏதேனும் முயற்சிகள் எடுத்தீர்களா? குறிப்பாக திருநங்கையருக்கான சங்கம் வைத்திருப்போர் பார்வைக்கு கொண்டு சென்றீர்களா? இப்படிக்கு ரோஸ் - நிகழ்ச்சியில் இந்த கோரிக்கைகளை எடுத்துரைக்க ஏதாவது முயற்சி செய்தீர்களா? செய்திருப்பின் சிறப்பு! இல்லையேல் முயலுங்கள்!
தங்கள் முயற்சிக்கி ஆதரவு கரம் நீட்ட என்றும் தயாராக இருக்கிறோம்..

அன்புடன்..
மயில்வண்ணன்.
myilvannan@gmail.com

cheena (சீனா) said...

வித்யா

அரசின் முதல் முயற்சி - வெற்றி பெற காலம் எடுக்கும். அதற்குள் நிறைகுறைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் அரசு ஆவன செய்யும். திருநங்கைகளின் துய்ரம் சீக்கிரம் தீர பிரார்த்தனைகள். நல்வாழ்த்துகள்

நாமக்கல் சிபி said...

//தட்டுங்கள் கதவுகளை இன்னும் பலமாக... நாம் உங்களுடன் சேர்ந்து குரல் கொடுக்கிறோம்.....//

நாங்களும் உடனிருக்கிறோம் வித்யா!

Karu said...

http://vinavu.wordpress.com

LOKNATH KARTHIKEYAN said...

MY HEARTY WISHES TO U FOR MAKING AN REVOLUTION FOR YOUR PEOPLES GOODNESS.VIDYA IF YOU WANT TO GET AN SOLUTION TO THIS PROBLEM THE GOVERNMENT SHOULD IMPLEMENT SOME LESSONS FOR THE SCHOOL STUDENTS ABOUTS ALTERNATIVE SEX COMMUNITY AND THEY SHOULD BE EXPLAINED ABOUT THE SCINTIFIC REASONS FOR ALTERNATIVE SEX.THIS IS THE ONLY WAY TO GET AN RECOGNISATION AND AN ENLIGHTMENT IN THE WORLD.

LOKNATH KARTHIKEYAN said...

MY HEARTY WISHES TO U FOR MAKING AN REVOLUTION FOR YOUR PEOPLES GOODNESS.VIDYA IF YOU WANT TO GET AN SOLUTION TO THIS PROBLEM THE GOVERNMENT SHOULD IMPLEMENT SOME LESSONS FOR THE SCHOOL STUDENTS ABOUTS ALTERNATIVE SEX COMMUNITY AND THEY SHOULD BE EXPLAINED ABOUT THE SCINTIFIC REASONS FOR ALTERNATIVE SEX.THIS IS THE ONLY WAY TO GET AN RECOGNISATION AND AN ENLIGHTMENT IN THE WORLD.

Ramesh Ranganathan said...

Dear Vidya , Good to see more and more transgenders coming out openly with thier feelings and thoughts. My hearty wishes for you .
- Ramesh
rameshrang@gmail.com

தருமி said...

இதனைப் பதிவிடத் தேவையில்லை - ஒரு திருத்தம் சொல்ல மட்டுமே.

அரசாணை தவறாகத் திருப்பி திருப்பி வருவதால் சுட்டியுள்ளேன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள் கோரிக்கைகள் நிறைவேறவும், நோக்கங்கள் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

நல்ல தகவல்கள், பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தலும், விழிப்புணர்வு ஊட்ட வேண்டியதும் மிக மிகத் தேவையான ஒன்று !

Thinks Why Not - Wonders How said...

We will pray your wishes and requests come true very soon...

Keep on giving your voice up for the less fortunate.

குப்பன்_யாஹூ said...

good news, happy to hear this.

உடன்பிறப்பு said...

இந்தியாவிலேயே குடும்ப அட்டைகளில் முதல் மாநிலமாக மூன்றாம் பாலை இணைத்த பெருமை நம் தமிழகத்துக்கே சேரும் அதை நிகழ்த்தி காட்டியவர் கலைஞர் அவர்களே