திருநங்கைகள் அடிப்படை உரிமையும், அடையாள அட்டையும்.

ந்தியாவில் வேறெந்த மாநிலங்களிலும் 5/10 ஆண்டுகளுக்குப் பின் ஏற்படக்கூடிய பல மாற்றங்கள் திருநங்கைகள் விசயத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இம்மாற்றத்திற்கு பல்வேறு மட்டங்களில் அவரவர் தளத்தில் தொடர்ந்து உழைத்த திருநங்கைகள் பலர்.

திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை வேண்டுமென 2002ல் திருநங்கை ப்ரியா பாபு அவர்களும், வழக்கறிஞர் ரஜினியும் உயர்நீதி மன்றத்தில் ரிட்(Writ) பதிவு செய்தனர். அம்முயற்சி நல்ல பலன் அளித்தது. அதே ஆண்டு திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்பட வேண்டுமென தீர்ப்பளித்தது.அதேசமயம் அவர்களது பாலினத்தில் ஆண்ணா பெண்ணா என்பதை திருநங்கைகள் அவரகள் விருப்பத்திற்கேற்ப நிரப்பிக்கொள்ளலாம் என்றும் தெளிவிள்ளாததாக இருந்தது. திருநங்கைகள் குறித்த அரசு இயந்திரத்தின் முதல் அசைவாக இதை எடுத்துக்கொள்ளலாம். இது திருநங்கைகள் நலன் குறித்த முக்கியமான கவனஈர்ப்பை ஊடகமத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தியது. 2006ல் வழக்கறிஞர் ரஜினியின் உதவியுடன் முழுதாக ஒருவருட உழைப்பிற்குப் பிறகு என் பெயரை லிவிங் ஸ்மைல் வித்யா என்றும் பாலினம் பெண் எனவும் கெஜட்டில் மாற்ற முடிந்தது. பாலின மாற்றம் குறித்து அரசு ஆவணங்களில் ஏற்பட்ட முக்கிய மாற்றங்கள் இவை.

இவற்றின் தொடர்ச்சியாக பலரது போராட்டத்தால் கவிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான திருமிகு. கனிமொழி அவர்களின் பெருமுயற்சியாலும், திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய செயல்பாடாக சமீபத்தில் திருநங்கைகளுக்கு முதலகட்டமாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.


மேலோட்டமாக இவை நல்ல மாற்றங்களாக இருந்தாலும், திருநங்கைகளின் நலனில் அக்கறை கொண்ட தமிழக அரசு திருநங்கைகளின் தேவை குறித்து முழுபுரிதலோடு செயல்படவில்லையோ என்று தோன்றுகிறது. எனது நோக்கம் அரசைக் குறைசொல்வதில்லை. உண்மையில் அரசை நெருங்கும் நிலையிலுள்ள மூத்த திருநங்கைகள் முறையாக இப்புரிதலை ஏற்படுத்தவில்லை என்பதே என் கருத்து.

உதாரணத்திற்கு அடையாள அட்டை விசயத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு குடிமகளாக திருநங்கைகளுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் தேவை. அதை முழுமையாக அடைவதே திருநங்கைகள் நலத்திட்டங்களின் அடிப்படை நொக்கமாக இருக்கவேண்டும். இவ்வாறு அடிப்படை உரிமைகள் அனைத்தும் பெற திருநங்கைகளும் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதற்கு ஆதாரம் தேவை. இது அடையாள அட்டையின் மூலமே சாத்தியப்படும். திருநங்கைகளோ தங்கள் பாலினதிரிபு காரணமாக எந்த அடையாளமும் இன்றி தாய்நாட்டு அகதிகளாக சட்டத்தால் கைவிடப்பட்டோர் ஆகின்றனர். எனவே திருநங்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் என்பது அடையாள அட்டை மூலமே சாத்தியப்படும்.


ஆனால், அடையாள அட்டை என்பது தற்போது திருநங்கைகளுக்கு வழங்கப்பட்ட இந்த அடையாள அட்டை அன்று. அனைத்து ஆண்/பெண்ணிற்கு உள்ளது போல் குடும்ப அட்டையாக, வாக்காளர் அடையாள அட்டையாகவும், ஓட்டுநர் உரிமமாகவும் இன்ன பிறவாகத்தான் இருக்க வேண்டும். சொல்லப்போனால் பெரும்பாலான திருநங்கைகளுக்கு குடும்ப அட்டையும், வாக்காளர் அடையாள அட்டையும் இருக்கவே செய்கிறது. சிலருக்கு இல்லாமல் இருப்பதற்குக் காரணம் நிரந்தர குடியுறுப்பு (வாடகைவீடாகக்கூட) இருப்பதில்லை. அல்லது அடையாள அட்டை பெருவதற்காக இதுவரை முயற்சிக்காமல் இருப்பது.


இதுகுறித்து மேலும் விவாதிக்கும் முன் தற்போது வழங்கப்பட்டுள்ள இவ்வடையாள அட்டையை ஒரு பார்வை பார்க்கலாம்.







இவ்வடையாள அட்டையில் உள்ள தகவல்கள் புகைப்படத்துடன் சேர்த்து

அந்நபரின் இயற்பெயர் : ...........
தற்போதைய பெயர் : ...........
முகவரி : ...........
உறுப்பினர் எண் : ........... அவ்வளவே. இதிலுருந்து பெறக்கூடிய பயன் என்ன? அல்லது இந்த அட்டை இல்லாததால் இழக்கப்போவது என்ன? பொதுவாக, இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் அனைத்து அடிப்படை உரிமைகளும் பெற ஆதாரமாக அக்குடிமகனுக்கு இருக்க வேண்டிய அடிப்படை சான்றுகள் சில உண்டு.
பெயர் மற்றும் பெற்றோர் பெயர் சான்றிதழ்,
முகவரி சான்றிதழ்,
வயது சான்றிதழ்,
கல்வி சான்றிதழ்,
சாதி (மத) சான்றிதழ்,
புகைப்பட சான்றிதழ் இது போக தனித்திறமை ஏதேனும் இருந்து, விளையாட்டு போன்றவற்றில் பெற்ற சான்றுகள்.

இவற்றில் பெயர் மற்றும் முகவரி தவிர இதர முக்கிய சான்றுகளான வயது, பெற்றோர், கல்வி, சாதி சான்றுகள் குறிப்பிடப்பட வில்லை. இவை எதுவும் குறிப்பிடாத பட்சட்த்தில் ஒரு குடிமகனுக்குரிய எந்த சலுகைகளும் பெறமுடியாது. குறிப்பாக, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு. வெறும் முகவரி அடையாள அட்டையை வைத்து திருநங்கைகள் பழையபடி பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் தான் முடியும். யோசித்துப் பாருங்கள் இது திருநங்கைகள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்?


திருநங்கைகள் பாலின மாற்றம் பெறுபவர்களாக இருப்பதால் நியாயமாக அவர்களின் பாலின மாற்றத்தைக் குறிக்கும் மருத்துவ சான்றிதழே வழங்கப்பட வேண்டும். அதாவது ராசிபலன்/மதமாற்றம் போன்ற காரணத்தால் பெயர்மாற்றம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழைப் போல திருநங்கைகளின் பாலின மாற்றம் குறித்த சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இதில் பெயர் மாற்றுச் சான்றிதழில் குறிக்கப்படுவதைப் போல இன்ன முகவரியில், இன்ன தேதியில், இன்னாருக்கு மகனாக பிறந்த இன்னார் அவரது பாலினதிரிபு காரணமாக இன்ன தேதியிலுருந்து இனி இன்னாராக, இன்ன (திருநங்கை அல்லது மாறியபாலினம் -பெண்) பாலினமாக அறியப்படுவார் என்று சான்றளிக்கப்பட வேண்டும்.


இத்தகைய அனைத்து அடிப்படை குறிப்புகளும் அடங்கிய பால்மாற்றுமருத்துவ சான்றிதழ் மூலமாக திருநங்கைகள் தம் பாலின அடையாளம் மாறினாலும், தமது பழைய குடும்ப அட்டையில் (திருநங்கை / மாறிய பாலினம் பெண்) என மாற்றிக் கொண்டு சராசரியாக வாழமுடியும். குடும்பம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் குடும்ப அடையாள அட்டையிலிருந்து நீக்கல் சான்றிதழ் பெற்று தனியாக குடும்ப அட்டையும், தொடர்ந்து மற்ற அடையாள அட்டைகளும் பெறமுடியும்.


முக்கியமாக ஆண் அடையாளத்தில் பெற்றிருந்த கல்விச்சான்றிதழ், பணியாற்றியிருப்பின் அந்நிறுவனத்திடம் பெற்ற பணி அனுபவச்சான்றிதழ்/நன்னடத்தை சான்றிதழ் என அனைத்துயும் தொடர்ந்து பெண் அடையாளத்திலும் பயன்படுத்த முடியும். தங்கள் படிப்பை பாதியில் விட்டவர்கள் தற்போது விரும்பினால் தொடர்ந்து படிக்கவும், அல்லது அவர்களது மேற்படிப்பிற்கும் இந்த மருத்துவ சான்று ஆதாரமாக உதவும். இதுபோலவே வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கும் உதவும். மற்ற அடையாள அட்டைகளான வங்கி கணக்கு, பாஸ்போர்ட் போன்றவையும் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

இது பிறப்பால் ஆணாக இருந்து இயற்கையின் விளைவால் பெண்மையை உணர்ந்து பெண்ணாக வாழும் திருநங்கைகளுக்கு மட்டுமன்றி, பெண்ணாக பிறந்து ஆணாக வாழ்பவர்களுக்கும் பொருந்தும்.


*********



ஆணுக்கு பெண் சளைத்தவள் அல்ல. ஆண்/பெண் இருவருக்கும் சளைத்தவர்கள் திருநங்கைகளும் அல்ல எனபதை அனைவரும் உணர வேண்டும். திருநங்கைகளில் உள்ள பல படித்த, படிக்காத திருநங்கைகளுக்கு அவரவர் கல்வித்தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும்.


குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ், பாலினத்திரிபு காரணமாக குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்படும் திருநங்கைகள் தொடர்ந்து தங்கள் குடும்பத்துடன் வாழ தகுந்த வழி செய்ய வேண்டும். சில குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தாலும் அக்கம்பக்கத்தினரின் ஏச்சிற்கு அஞ்சிய திருநங்கைகளை விலக்கி வைக்கும் நிர்பந்ததிற்கு ஆளாகிறார்கள்.


எனவே, சமூகம் திருநங்கைகளை மருத்துரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் புரிந்து கொள்ள அரசு மக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, புகை பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து, தண்ணீர்/ பெர்ரோல் போன்ற இயற்கை வளங்கைகளை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்த, வரதட்சணை, ஈவ்டீசிங் போன்ற குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்தெல்லாம் பொது நலன் கருதிய விளம்பரங்களை தொலைக்காட்சி, பத்திரிக்கைகளில் அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போல், திருநங்கைகள் குறித்தும், அவர்களையும் சகமனிதர்களாக பார்க்கவேண்டும் என்ற பொது நலன் விளம்பரங்களை அரசு செய்ய வேண்டும்.


திரைப்படங்களில் திருநங்கைகளை தவறாக சித்தரிப்பதை தணிக்கை துறை தடை செய்யவேண்டும். இவ்வாறு முறையான அடையாள அட்டை பெறுவதோடு மேலும் எத்தனையோ பல ஆக்கப்பூர்வமான காரியங்கள் திருநங்கைகள் நலனுக்காக செய்ய வேண்டியுள்ளது.


தற்போதுள்ள அரசு திருநங்கைகளின் நலனில் அக்கறையும், கனிவும் கொண்டுள்ளது. அதை சரியாக பயன்படுத்தி முன்னேறுவது நம் கையில்தான் உள்ளது. எனவே, ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் அரசு நிர்வாகத்தை நெருங்கும் இடத்தில் உள்ள திருநங்கைகள் வெறும் இனாம்களையும், சலுகைகளையும் பெறுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படாமல், மாறாக சராசரி குடிமகனுக்குள்ள அனைத்து உரிமைகளையும் திருநங்கைகளுக்கு வழங்க வேண்டும் எனபதை அரசிற்கு புரியவைத்து அவற்றை அடைவதற்கான சீரிய முயற்சியில் ஈடுபட வேண்டும். இதுவே, இதுநாள் வரை உரிமைகள் மறுக்கப்பட்ட, சமூக ஒருங்கிலிருந்து விலகப்பட்ட திருநங்கைகளுக்கு சரியான வலிநிவாரணியாகும். இனிவரும் தலைமுறைகள் தன்னம்பிக்கையோடும், சுயகௌரவத்தோடு தலைநிமிர்ந்து வாழ உதவும்.


திருநங்கைகள் மைய நீரோட்டத்தில் கலக்க தேவையான அனைத்து முயற்சிகளும் அரசால் எடுக்கப்பட வேண்டும். தன் குழந்தை ஒரு திருநங்கை என்பதை எண்ணி பெற்றோரும், உடன்பிறப்புகளும் வருந்தும் நிலை இனி மாற வேண்டும். சமூகமும் திருநங்கைகளை ஒரு வேடிக்கை பொருளாக அன்றி சக மனிதர்களாக பார்க்கும் நிலை வரவேண்டும். அதற்காக அரசின் உதவியோடு மனம் திறந்து ஒன்றாகப் போராடுவோம்.

10 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

துளசி கோபால் said...

முயற்சி வெற்றியடைய வாழ்த்து(க்)கள் வித்யா.

ரொம்ப நாளா இந்தப் பக்கம் காணோமே!

நலமா வித்யா?

விஷ்ணுபுரம் சரவணன் said...

இனிய தோழமை லிவிங் ஸ்மைல்..

உங்களின் வலைப்பக்களை நான் தொடர்ந்து வாசிப்பேன் என்றாலும் உங்களின் புத்தகம் வாசித்தபிறகு எனக்கு இங்குள்ளவைகள் வேறு நிறமாக தோன்றுகின்றன.

திருநங்கைகளின் சமூக வாழ்வியலில் அடையாள அட்டை வழங்குவது ஒரு பகுதிதான் ஆனாலும் முக்கியமான பகுதி. அதனை தொடர்ந்த உரிமைகளும்[ சலுகைகள் அல்ல] வழங்கிட வேண்டுமென்பதே என் விருப்பமும் கூட,
அதற்கான உங்களின் முயற்சிகளுக்கு என்னாலான உதவிகளை செய்வேன் என நட்போடு தெரிவித்துகொள்கிறேன்

அன்புடன்
விஷ்ணுபுரம் சரவனன்

புருனோ Bruno said...

அடையாள அட்டையில் தேவைப்படும் மாற்றங்கள் என்று பட்டியல் போட்டு நீங்கள் உங்கள் ஆணையத்திற்கு ஒரு தபால் அனுப்புங்கள்

அனுப்பிய அடுத்த நாளே மாற்றி விடுவார்களா என்று கேட்காதீர்கள்

அனுப்ப வில்லை என்றால் எப்பொழுதும் மாற்ற மாட்டார்கள்

யாராவது எடுத்து சொல்வார்கள் என்று அனைவரும் நினைப்பதால் தான் பல விஷயங்களில் முன்னேற்றம் வருவதில்லை

நீங்கள் அனுப்புங்களேன்

Sabarinathan Arthanari said...

உங்களது கருத்துக்கள் வரவேற்க பட வேண்டியவை

சிங்கக்குட்டி said...

"தமிழ்மணம் 2009 விருது" போட்டியில் வெற்றி பெற்று விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்,
சிங்கக்குட்டி.

PPattian said...

வணக்கம் வித்யா. இரண்டு வாரங்களுக்கு முன் உங்கள் புத்தகத்தை படித்தேன். புரிதல் இன்னும் அதிகமாகியது. மைய நீரோட்டத்தில் கலக்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

கிழக்குப்பதிப்பகத்துல உங்க குரல்ல பதிவான உங்க வாழ்க்கை வரலாறை கேட்டுட்டு கண்ணீர் வழிய,வழிய இந்த அஞ்சல்.உங்க தன்னம்பிக்கை,உழைப்பிற்கு தலைவணங்குகிறேன்.வேறென்ன செய்ய தெரியவில்லை.உங்களுடன் சரளமாக உரையாடும் நேர்முகம் காண்பவரை யோசித்து வியந்தேன்.உங்க வலிகளை உணர்ந்த போது மனம் கனமாகிவிட்டது.மன்னியுங்கள் வித்யா

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

வித்யா! உங்க மின்னஞ்சல் முகவரி எனக்கு தெரியாதும்மா! அதுனால இதுல தொடர்பு கொள்ள வேண்டியாகிவிட்டது! இது என் வலை முகவரி.முடிந்தபோது பாருங்கம்மா!
நன்றி
அன்புடன்,
க.நா.சாந்தி
http://andamantamizhosai.blogspot.com/

Unknown said...

HI,
I am bless you your struggle and
goodwill of of life in future very good
god bless you.

vadimustin said...

*Hi, Smile vidya,*


*I am a Russian.*

*Attracted by Indian culture and epics.*
*came to Madurai , Tamil nadu once.*
*Stayed in Chennai for six months and learned tamil .*

*As a media person, i use to do research about new things.*

*Recently i took as my research topic (Gay ,lesbian, Transgeders all overthe world).*

*I found your books and writings in your blogspot.*
*Its very fine.*

*But i came to know that you are acting in a movie named as "KARUVARAI POOKKAL".*
*I searched and found the movie trailor and songs.Those things are very nice.*
*But i found you are discussing some one else movies and keep on blowing some one trumphet.....*
**
*Why don't you link those trailors and songs in your websites and blogspot.*

*Why are u not talking even a single word about that movie until this time.*

*What it means*

*What to say*

and

*What it shows*


*Whether it shows your

pious

humility

or

Thanklessness.

Define it madam , please.

*Thank u *

*With warm love*

*vadimustin*


*Hope you will put this mail in your blogspot.*