திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்

த‌ னிப்பட்ட முறையில் எனக்கு திருமணம் என்ற சடங்கில் உடன்பாடு இல்லை என்றபோதும், ஒவ்வொரு தனிநபருக்கும் குறிப்பிட்ட கட்டத்திற்குப்பின் வாழ்க்கையின் அனைத்து சூழ்நிலையிலும் ஆத்மபலமாக நிற்கும் துணையொன்று நிச்சயம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.


பெற்றோர், உடன்பிறந்தோர், உறவுகள், நண்பர்கள் சூழ வாழும் சராசரி ஆண்/பெண்ணுக்கே வாழ்க்கைத் துணை தேவை என்னும் பட்சத்தில் மேற்குறிப்பிட்ட உறவுப்புல‌மும், பொருளாதார பலமும் இன்றி கேள்வியாய் குறுகி நிற்கும் திருநங்கைகளுக்கு வாழ்க்கைத்துணை நிச்சயம் தேவைதானே?
திருநங்கைகள் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, திருநங்கைகள் பொது இடங்களில் சமூக ஒழுங்குகளுக்கு கட்டுப்படாமல் இருக்கிறார்கள் என்பதாகும். இதுவே மற்றவர்களுக்கு அவர்கள் மீது அசூசை ஏற்படுத்தி அவர்களை கண்டால் கலவரப்பட்டு ஒதுங்கி நிற்கவும், அறுவெறுத்து ஒதுக்கவும் காரணமாக அமைவ‌தாக சொல்லப்படுவதுண்டு. சற்று கரிசனையோடு அதன் உளவியல் பிண்ணனியை ஆய்ந்தால், நானறிந்த வரையில் அதற்கு காரணம், தங்களை மனிதர்களாகவே பொருட்படுத்தாத இச்சமூகத்தின் மீது இயலாமையின் இறுதிப்பிடியில் ஏற்படும் காழ்ப்புணர்வு/கலகத்தின் வெளிப்பாடாகும். பிறருடைய கேலி, வன்முறைகளிடமிருந்து தப்பிக்க உதவும் ஆயுதமும் இதுதான்.


மாறாக, ஒருசில திருநங்கைகள் அவ்வாறன்றி மற்ற ஆண்/பெண் பாலினத்தவர்களைப் போன்று இயல்பானவர்களாகவும் இருப்பதைக் காணமுடிகிறது. ( நான் அந்தமாதிரி யாரையும் பாத்ததிலைன்னு சொல்லாதிங்க. ஏன்னா, சராசரி பெண் மாதிரி இயல்பா இருக்கும் திருநங்கைகளை நீங்கள் கடக்கும் போது அவர்கள் திருநங்கை என்பதே உங்களால இனம் காண முடியாது.) அதற்கு காரணம் அவர்கள் குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பெற்றோர் அரவணைப்பில் வாழ்பவர்களாக இருப்பார்கள். அல்லது, சமூக அந்தஸ்துடன், ஓரளவேனும் சமூக அங்கீகாரம் பெற்றவர்களாகவேணும் இருப்பதைக் காணமுடியும். ஆக, தங்களது உடல்மொழி, ஆடை அலங்காரத்தில் கண்ணியம் காக்க தேவையாய் இருப்பது ஏதோவொரு அரவணைப்பும், அனுசரனையான சூழலும் தான். எல்லா பெற்றோர்களும் திருநங்கைகளை ஏற்றுக் கொள்ள முன்வராத இச்சூழலில் எது திருநங்கைகள் சமூக பிரக்ஞையுள்ளவர்களாக, பிறரை கலவரப்படுத்தாதவர்களாக வழிநடத்தும்?

வாழ்க்கைத்துணை?! ஆம், வாழ்க்கைத் துணையாக ஒருவன் வந்தால்! தன்னை முழுதாய் புரிந்து, முழு அன்பையும் கொட்டி அரவணைக்க ஒருவன் வந்தால்! அப்படி ஒருவன் தனக்கென ஒருவன் தன் வாழ்க்கையில் வரமாட்டானா? என ஏங்காத திருநங்கைகள் யாரும் இல்லை. வாழ்க்கைத் துணையென்று வரும் ஒருவனால் திருநங்கைகளில் வாழ்க்கைத்தரம் பல விசயங்களில் மாறும். அவ்வாறு அமையப்பெற்ற சில திருநங்கைகளில் வாழ்க்கை முறை மாறிய உதாரணங்களும் உண்டு.
சரி கேக்க நல்லாதான் இருக்கு, அதுக்காக எவன் போயி.... உங்களையெல்லாம்.. புரியுது... நீங்க‌ வேண்டாம். என்னால‌ ஒரு திருந‌ங்கைய‌ வாழ்க்கைத் துணையா பார்க்க‌ முடியாதுன்னா க‌ண்டிப்பா நீங்க‌ வேண்ட‌வே வேண்டாம். அப்ப யாருதான்...?


இருக்காங்க, சிலர் இருக்காங்க. திருநங்கைகளை சக மனுஷியாக பார்க்கத் தயாரா, நட்புடன் பழகத் தயாரா சிலர் இருக்காங்க. இன்னும் சிலர், மனதால் இணைந்து மணம்புரிய தயாரகவும் இருக்காங்க. ஆனால், அவர்களில் ஒருசிலர் தான் சமூகத்தின் முன்பாக துணிந்து தங்களை ஒரு திருநங்கையின் கணவனாக வெளிப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளனர். அவர்களிடம் மட்டும் தான் வேண்டுகிறேன். மறைவாக திருட்டுக் கணவனாக வாழாமல் மனமுவந்து வெளிப்படையான உண்மையான கணவனாக வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஏனெனில் இவ்வாறு திருநங்கைகளை மறைமுகமாக மணந்துகொண்டுள்ள ஆண்கள் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்துகொண்டு, திருநங்கையை துணைவி போலவே வைத்துக் கொள்கின்றனர். இவர்கள், மனையாள் ஒருத்தி இருக்க குறிப்பிட இடைவெளியில் அல்லது விரும்பும் போதெல்லாம் வந்து போகும் ரெகுலர் கஸ்டமர் போலத்தான் திருநங்கைகளை ஏற்றுக் கொள்கின்றனர்.


சில ஆண்கள், ஆரம்பத்தில் திருநங்கையை மனைவியாக நடத்தினாலும், குடும்ப மற்றும் சமூக வற்புருத்தலின் பேரில் வேறொரு பெண்ணை மணந்து கொள்கின்றனர். இவர்களும் திருநங்கைகளை துணைவியாகவும் நாட்பட அந்த உறவையும் உதறி விட்டுச் செல்கிறார்கள்.


குறைந்தபட்சம் துணைவியாக ஏற்றுக் கொள்பவர்களும், முழுத்துணைவியாகவாவது ஏற்றுக் கொள்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. குறிப்பிட்ட நபருக்கு பெயரளவில் மனைவி/துணைவியாக் இருந்தாலும் அவர்களும் மற்ற திருநங்கைகளைப் போலவே பிச்சையெடுத்தோ / பாலியல் தொழில் செய்த்தோதான் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. கொடுமையிலும் கொடுமை, திருநங்கைளை துணைவியாகக் கொள்ளும் போர்வையில் திருநங்கைகள் பிச்சையெடுத்தோ, பாலிய‌ல் தொழில் செய்தோ கொண்டு வ‌ரும் ப‌ண‌த்தை இதுபோன்ற போலிக் கணவர்கள் த‌ங்க‌ள் சுய‌லாப‌த்திற்கும், த‌ன‌து குடும்ப‌ செல‌விற்கும் பய‌ன்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌ர்.


பெரும்பாலான‌ திருநங்கைகள் தெரிந்தே இந்த ஏய்ப்பிற்கு உடன்படுகின்றனர். பொய்யாகவேனும் ஒருவன் தன்னை காதலித்தால் போதும் , பெயரளவிலாவது தன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டானே அதுவே பொதும் என்று நினைப்பர்களே அதிகம். அத்தகைய திருநங்கைகள் அவர்களே தங்கள் காதல் கணவனுக்கு வேறொரு பெண்ணைத் தானே திருமணமும் செய்துவைப்ப‌து, அவர்களுடைய‌ குடும்ப செல்விற்கு திருநங்கைகள் சம்பாத்தித்து கொடுப்ப‌து என‌தெரிந்தே ஜோக்கர்களாக வாழ்கின்றனர். ஏதோவொரு பெயரளவு அன்பிற்கே இத்தனை இழக்கும் திருநங்கைகளின் மாளாத் தனிமையையும், தீராக் காதலையும் யார் அறிவார்?

விரல்விட்டு எண்ணக்கூடிய‌ ஒருசிலர் உண்மையான காதலுடன், திருநங்கையை ஏற்றுக் கொண்டு, இருவரும் பரஸ்பர அன்புடன், நேர்மையுடன் வாழ்ந்தாலும், இச்சமூகம் அதாதவது நீங்கள் அந்நபருக்காக தயாரக வைத்திருக்கும் கல்லடிகள் பலப்பல. திருநங்கைகள் பெறும் சராசரி அவமரியாதையைவிட அவர்களின் கணவர்கள் அடையும் அவமரியாதை அதிகம்.

" இவன் ஏன் இதுகூட சுத்துரான் ஒருவேளை இவனும்...."


" அந்த மேட்டர்ல இவன் வீக்கு போல அதான் பொம்பளய கட்டிக்காம இதப் போயி..."


இத்தகைய இழிச்சொற்களை, ஒரு சரசாரி ஆண் சில நாட்கள், சில முறை சகித்துக் கொள்ளலாம். வாழ்க்கை முழுவதும் ?!.இதுதான், இதுமட்டும் தான் குறிப்பாக உங்களிடன் நான் வைக்கும் கோரிக்கை, யாரோ, எவரோ ஒரு திருநங்கையை துணையாக ஏற்று வாழும் போது வாழ்த்த வேண்டாம். வாழ வழிவிடுவோம். ஏனெனில் ஆண்மை என்பது மீசையும், குழந்தைபேறும் அல்ல, பெண்மையை மதிப்பது. அதிலும் தன் பெண்மையை உணர்ந்து அதை அடைய உடலாலும், மனதாலும் காயங்கள் பல சுமந்து, உற்றார் உறவை இழந்து நிற்கும் திருநங்கைகளை மதிப்பது பேராண்மையாகும்.


காதலுடன் திருநங்கைகளை ஏற்பவர்கள் கணவர்களாகட்டும். குறைந்த பட்சம் அத்தம்பதிகளை மதித்து நடக்கும் பேராண்மையுடயவர்களாக நீங்கள் இருப்பீர்களா?


திருநங்கைகள் நலனில் தொடர் அக்கறை காட்டி வரும் தமிழக அரசும், அவ்வழியே இந்திய அரசும், ஆண்கள் திருநங்கைகளை மணந்து கொள்வதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க வேண்டும். இத‌னால், சாத‌க‌ பாத‌க‌ங்க‌ளை ஆராய்ந்து, தெளிவாய் முடிவெடுக்க ‌ ஆண்க‌ளுக்கு உத‌வும். அவ்வாறு துணிந்து ம‌ண‌ம் புரியும் ஆண்க‌ள் மீதும் திருந‌ங்கைக‌ளுக்கு ந‌ம்பிக்கையும், பாதுகாப்பும், நல்ல வாழ்க்கை முறையும் அமையும்.
போலியாக‌ ம‌ண‌முடித்து திருநங்கைகளை சுர‌ண்டிப்பிழைக்கும் ந‌ப‌ர்க‌ளுக்கு த‌ண்டனையை பெற்றுத் தரவும், திருமணம் முடித்து பாதியில் விட்டுச் செல்ல நினைப்பர்களிடம் முறையாக‌ போராடி த‌ங்க‌ள் உரிமையை நிலை நிறுத்தவும் திருநங்கைகள் திருமணச்சட்டம் உதவும்.


இந்தியா‍‍‍ பாகிஸ்தான் பிரிவினையின் போது பல பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர். அப்போது காந்தி இந்திய‌ இளைஞர்களிடம், பாதிக்கப்பட்ட பெண்களை (கணவினை இழந்த பெண்களையும் என்று நினைக்கிறேன்) மணமுடித்துக்கொள்ள முன்வருமாறு வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே, திருநங்கைகளையும் மணமுடிக்கமென காந்தி சொல்லாவிட்டாள் என்ன, வேண்டுகோள் விடுத்தார் என்று எடுத்துக் கொண்டு சமூக மாற்றத்திற்கு முன்வருவோம்.


சமீபத்தில் திருநங்கைகள் மணமுடித்துக்கொள்ள தயாரகவுள்ள ஆண்களுக்கு அழைப்புவிடுத்து தோழி கல்கி ஒரு வலைப்பக்கத்தை அமைத்துள்ளார். வரவேற்போம். அதே சமயம், இவ்வலைப்பக்கம் தவறான நபர்களால் பாதிக்கப்படாத வகையில் கவனமாக கையாள வேண்டும்.

14 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அக்கறையுள்ள ஒருவர் வாழ்நாளில்கூட வருவதை எதிர்பார்ப்பது தவறே இல்லை..

கல்கியின் முயற்சிகள் வெற்றியடைந்து பலர்வாழ்வில் இனிமை வர வாழ்த்துக்கள்.

டவுசர் பாண்டி... said...

ஆரம்பம் முதல் உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறவனென்கிற முறையில் சொல்கிறேன்...

எழுத்தில் நிறைய மாற்றமும் பக்குவமும் மிளிர்கிறது...வாழ்த்துகள்.

இம்மாதிரியான தளங்களை அறிமுகம் செய்யும் போது, ஏற்கனவே திருமண பந்தத்தில் மகிழ்ச்சியுடன் மனமொத்து வாழ்ந்துவரும் தம்பதியர்களை அறிமுகம் செய்யலாம்.

Sahodari said...

நன்றி ஸ்மைலி. உங்கள் கட்டுரை அருமை. திருநங்கை.நெட் திருமண வலைத்தளம் குறித்த உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

வால்பையன் said...

விரைவில் நல்ல துணை அமைய வாழ்த்துக்கள்!

Godson said...

நேர்த்தியான பதிவு இது!திருநங்கைகள் குறித்த திருவிவிலியப் பார்வையை எனது வலைப்பூ www.pastorgodson.wordpress.com ல் பதித்திருக்கிறேன். ஒரு போதகராக நான் எடுத்த முதல் முயற்சி இது.

அருட்திரு காட்சன் சாமுவேல்

ஸ்ரீ said...

நல்ல பதிவு.பத்திரிக்கையிலும் படித்தேன்.தெளிவான அழகான நடை.வாழ்த்துகள்.

christianbrahmin said...

வாழ்த்துக்கள்,Smily..!

அருண்சங்கர் said...

சமூகத்தினரால் புறக்கணிக்கபட்டிருக்கும் திருநங்கைகளை தங்களை போன்றவர்களின் பெரு முயற்சியால், சமுதாயத்தில் அவர்களுக்கும் இப்பொழுது ஒரு இடம் உருவாகி வருவதை கண் கூடாக காண்கிறோம். தங்கள் முயற்சி முழு வெற்றி அடைந்து திருநங்கைகள் சமூகம் தற்பொழுது சந்தித்து வரும் நடைமுறை இன்னல்கள் எதுவும் இன்றி பீடு நடை போட்டு முன்னேற எனது வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

திருமணம் என்பது பலகாரணங்களுக்காக என்றாலும் அந்த 'கம்பேனியன் ஷிப்' தான் ரொம்ப முக்கியமான காரணமுன்னு நான் நினைக்கிறேன். என்ன ஒன்னு..... மறுபாதி நம் மனசுக்குப் பொருத்தமானவரா முக்கியமா நல்லவரா இருக்கணும்.

நமக்குன்னு ஒருத்தர் இருக்கார்ன்னு நினைப்பதே ஒரு மனோ பலம்.

கல்கியின் முயற்சிகளால் பலருக்கு இனிமையா வாழ்க்கை அமையட்டும் என்று வாழ்த்துகின்றேன்.

சிலநாட்களுக்கு முன் நர்த்தகியிடம் உரையாடிக்கொண்டிருந்த போது உங்களைப் பற்றிப் பேச்சு வந்தது. உங்கள் புத்தகம் பற்றிச் சொன்னேன்.

நீங்கள் சென்னையிலா இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

நலமா வித்யா?

KARMA said...

உன்னையே நீ எண்ணிப்பாரு
இந்த உலகத்தில் சொந்தம் ஏதென்று கூறு.....!!!
உன்னையே நீ எண்ணிப்பாரு.

மணிப்பக்கம் said...

will Pray for this society!
Hope for the best :)

shiyamala said...

ungaladhu karuthu miga sariyanadhu..indha ulagathil anbodu aravanaipodu vaazhvadharku ella uyirgalukkum urimai undu..adhai seyalpadutha kalki eduthu irukum muyarchi paratathakadhu

VISCOM KINGS said...

s.vasuki
good valthukal..........

VISCOM KINGS said...

ungal valvi vetti pera valthukal..........