(ஆண் மன) சப்தங்கள்

கடந்த சனி, ஞாயிறு மரியாதைக்குரிய நாடக இயக்குநர் கருணாபிரசாத அவர்களின் இயக்கத்தில் எங்களது "சத்தியலீலா" நாடகம் கலாசேத்ராவில் நிகழ்ந்தது. பொதுவாக நாடகம் முடிந்தவுடன் நண்பர்கள் மேடையிலேயே வந்து வாழ்த்துவது எனக்கு சற்று கூச்சமாக இருக்கும். அதைவிட நாடகம் முடிந்தவுடன் சற்று தனிமையில் இருக்கவே விரும்புவேன்.

அன்றும் நாடகம் முடிந்ததும் நண்பர்களுக்கு தென்படாமல் விரைந்து உடைமாற்றும் அறைக்கு சென்றுவிட்டேன். அப்போது என்னைத் தேடி வந்து வாழ்த்தினார் திருநங்கையொருவர். பெயர் ரம்யா. பொதுவாக நாடக நிகழ்வுகளுக்கு திருநங்கைகள் வருவது அரிதினும் அரிது என்பதால் எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், அதேநேரம் திருநங்கையொருவர் நாடகம் காண வந்து எனக்கு சந்தோசமாகவும் இருந்தது. கூடுதலாக அடுத்த ஞாயிறு 16/10 ( நேற்று) ஜெயராவ் அவர்களின் நாடக நிகழ்வு இருப்பதாகவும் அதில் தான் நடித்திருப்பதாகவும் சொன்னபோது மேலும் உற்சாகமாக இருந்தது.

நவீன நாடகத்தில் ஒரு திருநங்கை பங்கேற்பதை காணும் ஆவலுடன் நேற்று மாலை -ல் வைக்கம் முகம்மது பசீரின் "சப்தங்கள்"கதையை, நாடக இயக்குநர் ஜெயராவ் அவர்களின் இயக்கத்தில் பார்த்தேன்.

நிகழ்வு துவங்கும் சற்றைக்கு முன் சிறுமழை பெய்து நிகழ்வை மேலும் தாமதப்படுத்தியது. நிகழ்வு துவங்கி சில நிமிடத்தில் பெருமழை வந்து நிகழ்வை தொந்தரவு செய்தது. (அப்பவே எச்சரிக்கை செஞ்ரிருக்கு!)

"சப்தங்கள்" பல வருடங்களுக்கு முன்பே ஏற்கனவே படித்த கதைதான். அப்போதே, அதில் திருநங்கையை குறித்த சொல்லாடல் சற்று வருத்தப்படச்செய்தது. ஆனாலும், மொழிபெயர்ப்பு என்பதாலும், பலருக்கும் அப்போது திருநங்கைகள் குறித்த புரிதல் இல்லாததாலும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

இன்ன்றைய இந்நவீன நாடகத்தில் கண்ணியமாகக் கையாளப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்த்த எனக்கு திருநங்கை ரம்யாவின் அறிமுகமே முகம்சுழிக்கும்படி செய்தது. Mid night masala அளவிற்கு அருவெறுப்பான ஒரு பாலியல் நடனம். நிலம்-ரத்தம் என கதைநாயகன் புலம்புவது, மற்ற பிறவற்றிக்கு பந்து, கைக்குட்டை, பலூன் போன்றவற்றை உருவகமாக வைத்து நாடகம் செய்தவற்கு, திருநங்கை தொடர்பான பாலியல் காட்சிக்கு அரைகுறை ஆடை, அருவெறுப்பான நடனம் சரியென பட்டது வருத்ததிற்குரியது.

திருநங்கைகளின் தேவை, அரசியல் குறித்த பார்வை, திருநங்கை ரம்யாவிற்கும் இல்லை, இயக்குநர் ஜெயராவிற்கும் இல்லை என்பது அந்நடனக்காட்சிக்குப் பிறகு ரம்யா பேசிய நீண்ட வழக்கான திருநங்கைகள் இன்று மீடியாக்களுக்கு தரும் வழக்கமான வசனத்திலேயே தெரிகிறது.


அதுவரைக்கும் கூட பொறுத்துக் கொள்ள முடிந்த எனக்கு, அதன் பிறகு வந்த வசனங்கள் என்னால் தாங்கிக்கொள்ள முடியாதவையாக இருந்தது. சற்று முன்பு வரையான நீண்ட வசனத்தில் ரம்யா தன்னை மாய்ந்து, மாய்ந்து திருநங்கை என்று சொல்லிக்கொள்ள, அவரது காட்சி முடிந்து தொடர்ந்து வரும் காட்சியில் திருநங்கை ரம்யாவை ஆண் விபச்சாரி என்றே அழுத்தம் திருத்தமாக பலமுறை சொல்லி கொச்சிப்படுத்திக்கொன்டிருந்தனர் இரு முக்கிய கதாப்பாத்திரங்களும். அதிலும் பெண், இல்லை, ஆண் இல்லை அது என்று அநாகரீகமான வார்த்தை விளையாட்டும் கூட...


போதாதற்கு அத்திருநங்கையுடன் உடலுறவு கொன்டதாலேயே தனக்கு கொனேரியா என்ற பால்வினை நோய் வந்ததாகவும், அதானால் தான் மிகவும் மூச்சாப் போகப் படும் அவஸ்தையையும் விளக்குகிறார். அந்த ஒருநாளைக்கே அவர் அப்படி ஒருநோயாளியானரென்றால்.. ஏற்கனவே பாதிக்கப்பட்ட திருநங்கை மட்டும் எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும்.

இந்நாடகம் குறித்து சொல்ல பல இருந்தாலும் நேரமின்மையால் இம்மனவேதனையை மட்டும் தற்போது பகிர்ந்துகொள்கிறேன்..


கடைசியாக...

ஒருகாலத்தில் திருநங்கைகளின் உரிமை குறித்த விழிப்புணர்வு வலுவாக எழுந்த காலத்தில் அ.மங்கையின் "உறையாத நினைவுகள்" மு.இராமசாமியின் "வலியறுப்பு" போன்ற நாடகங்கள் அவசியமாய் இருந்தன. அவை போதுமான அளவிற்கு திருநங்கைகளின் உலகத்தை அரசியல், விழிப்புணர்வு கண்ணோட்டத்தோடு பேசின.


இன்று இந்த நாடகம் அதற்கு எதிர்மாறான போலித்தனமான அக்கறையுடன் ஆண்திமிருடனேயே இதை அனுகியுள்ளது.

வன்மையாக கண்டிக்கிறேன்.

7 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

என்.ஆர்.சிபி said...

ம்ஹூம். பகிர்விற்கு நன்றி வித்யா!

மதுரை சரவணன் said...

//போதாதற்கு அத்திருநங்கையுடன் உடலுறவு கொன்டதாலேயே தனக்கு கொனேரியா என்ற பால்வினை நோய் வந்ததாகவும், அதானால் தான் மிகவும் மூச்சாப் போகப் படும் அவஸ்தையையும் விளக்குகிறார். அந்த ஒருநாளைக்கே அவர் அப்படி ஒருநோயாளியானரென்றால்.. ஏற்கனவே பாதிக்கப்பட்ட திருநங்கை மட்டும் எப்படி ஆரோக்கியமாக இருக்கமுடியும்.

இந்நாடகம் குறித்து சொல்ல பல இருந்தாலும் நேரமின்மையால் இம்மனவேதனையை மட்டும் தற்போது பகிர்ந்துகொள்கிறேன்.. // thanks for sharing such bitter experience.

கொற்றவை said...

அவசியமான பதிவு வித்யா..

கொற்றவை said...

அவசியமான பதிவு வித்யா

வல்லவன் said...

உங்களோடு சேர்ந்து நானும் எனது கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறேன் தோழி.

நானும் இந்த நாடகத்தை காண வந்திருந்தேன், நீங்கள் கூறுவது போலவே ரம்யாவை நாடகத்தில் அறிமுகப்படுத்திய விதம் கேவலமாக இருந்தது, அதை விட நடிகராக அவரை அறிமுகப்படுத்திய விதம் இன்னும் அருவெறுப்பாக இருந்தது, 'எனக்கு 'அரவாணி' என்றால் 'த்ச்' அப்படியிருக்க வேண்டும் என்று 'இயக்குநர் ஜெயராவ்' நாக்கை சொட்டான் போட்டு பேசிய போது நரகலை மிதித்தது போல உணர்ந்தேன், அடுத்த வரியில் 'அரவாணி' என்ற சொல்லை திருத்திக்கொண்டு 'திருநங்கை' என்ற பதத்தை பயன்படுத்திய ஜெயராவ், ரம்யா ஒரு 'ஜைஜேன்டிக் ஃபிகரா' இருந்தாங்க பார்த்தவுடன் ஓக்கே சொல்லிட்டேன் என்றார். எவ்வளவு கேவலம்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'மிட் நைட் மசாலா' காட்சியில் எஃபக்டை அதிகமாக்க ஒருவரை விட்டு ரூம் ஸ்ப்ரே அடிக்க செய்திருந்தார்கள். நல்ல காமெடி, கரகாட்டகாரன் திரைப்படத்தில் வரும் 'மாரியம்மா, மாரியம்மா' பாடலுக்கு எங்கள் ஊர் தியேட்டரில் 'சாம்பிராணி புகையும், திருநீறும் தூவிவிட்டு பக்தி நெடியை கிளப்பிவிட்டார்கள் அது போல் இருந்தது இந்த டெக்னிக்., திருநங்கைகளை பற்றி இழிவாக சித்தரித்த காட்சிகளில் கடுப்பேறி போய் உங்களை பார்த்தேன், நீங்கள் செம கடுப்பில் பையிலிருந்து ஒரு டைரியை எடுத்து புரட்டினீர்கள், குறிப்பெடுத்தீர்கள். காட்டமான பதிவு வருமென எதிர்பார்த்திருந்தேன்.

தோழமையுடன்
வல்லவன்

பாரத் ராஜ் குணசேகரன் said...

இப்படி ஒரு நடையுடன் உள்ள நாடகத்தில் நடிக்க எப்படி தான் ரம்யா ஒத்துகொண்டரோ...? வருத்தமாக உள்ளது... நானும் இந்த நாடகதை வன்மையாக கண்டிக்கிறேன்...

விஷ்ணுபுரம் சரவணன் said...

வித்யா... திருநங்கைகளின் வலியை மு,ராவின் வலியறுப்பு நாடகம் மிகநேர்மையாக பதிவுசெய்திருக்கிறது. அந்நாடகத்தை கண்களில் நீர்கோர்க்க கண்ணகனோடு பார்த்தேன். அதற்கு முன் உங்களின் சுயசரிதை நூலை வாசித்திருந்ததால் இன்னும் கனத்துப்போனது.

ரம்யா நடித்த மோசமான அந்நாடகத்தை பஷீர் எழுதியிருக்கிறார் எனும் தகவல் ஆச்சரியமாக இருக்கிறது.