சந்திக்க வேண்டிய கோமாளி “ஜுஜூஃபி”

மது தமிழ் நாடகவெளியில் கோமாளி அரங்க ( Clown Theatre) வடிவம் வெகு குறைவாகவே நிகழ்த்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ப்ரான்ஸிலிருந்து வந்திருந்த Clowns without border நாடக்குழுவில் லில்லி என்ற கோமாளிப் பெண்ணாக தொடர்ந்து 12 முறை, சென்னை மற்றும் புதுச்சேரியில் குழந்தைகளுக்காக குதூகலகமூட்டும் நாடகம் நடித்த அனுபவத்திலிருந்து கோமாளி நாடகத்தின் மீது தனி இச்சை கூடியிருந்த்து. தற்போது அ.மங்கையின் நெறியாளுகையில் வ.கீதாவின் பனுவல் “ஆண்மையோ ஆண்மை” கோமாளி வடிவத்தில் தொடர் ஒத்திகை நிகழ்ந்து வருகிறது. மார்ச் 3 & 4, பெசன்ட் நகர், ஸ்பேசஸில் நிகழ்த்த உள்ளது. இந்த வருடம் எனக்கு கோமாளியாக துவங்கியதோடு, தொடர்ந்து மற்றொரு கோமாளி நாடகத்தில் நடிப்பதில் இரட்டை மகிழ்ச்சி. அதோடு, ஆண்மையோ ஆண்மைக்காக அமெரிக்க கோமாளிப் பெண் எம்மாரின் 5 நாட்கள் காமெடியா டெலார்த்தே நாடக வடிவ பயிற்சி பெற்றது முத்தாய்ப்பான வாய்ப்பு.

இன்று எமது “ஆண்மையோ ஆண்மை” ஒத்திகை முடிந்தபிறகு. நாங்கள் ஒத்திகை செய்த அதே சென்னை ஸ்பேசஸில் அரங்க இயக்குநர் ராஜீவின் இயக்கத்தில் “ஜுஜூஃபி” நாடகம் நிகழ்த்தப்படுவதாக எதார்த்தமாக அறிந்து, பதார்த்தமாக போய் சேர்ந்தேன். ஒத்திகை முடிந்து சென்றதால் பாதி நிகழ்வில் தான் பார்வையாளராக இணைந்து கொள்ளமுடிந்த்து.

நுழையும் போதே அதன் அரங்க வடிமைப்பும், நடிகர்களின் ஆடையும் கண்டு இது கோமாளி நாடகம் (clown Performance) என்பதை உணர்ந்து குதூகளமாக நுழைந்தேன்.

அரங்க இயக்குநர் ராஜீவ் அவர்களின் நாடகங்கள் நகைச்சுவை வடிவில் வெகு சிறப்பாக இருக்கும் என்பது கேள்வி ஞானத்தில் நானறிந்தது. இதற்கு முன் இவரது நாடகமென நான் பார்த்தது புரிசை -2010 நாடகவிழாவின் போது பார்த்த “கி.ரா. கொளம்பு”. கரிசல் எழுத்து மன்னன் கி.ராஜ நாரயணன் அவர்களின் நகைச்சுவை சிறுகதைகள் சிலவற்றை தொகுத்து நாடகமாக்கியிருந்தார்கள். அதன் நடிகர்கள் ஆனந்த் சாமி, ஈஸ்வர் மற்றும் மாளவிகாவின் சிறப்பான நடிப்பில் விடாத வெடிச்சிரிப்புடன் நாடகத்தை கண்டுரசித்தேன். குறிப்பாக மாளவிகாவின் நடிப்பை பார்த்து இதற்கு இணையாக ஒரு நகைச்சுவை நாடகத்திலாவது நானும் நடிக்க வேண்டுமென்று விரும்பினேன். ஆனால் மாளவிகாவை நகைச்சுவை நடிப்பில் கடக்கமுடியுமா என்று பயந்த்தும் உண்மை...

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என மும்மொழியில் நடிக்கப்பட்ட அந்நாடகத்தில் கி.ரா.வின் எழுத்திலிருந்து கிடைக்கும் சொல்லாடலும், அவரது கரிசல் மனிதர்களையும் சந்திக்கமுடிந்த அளவில் கணமான கதையோ/அரசியலோ இல்லாமல் இருந்த்து சிறு குறையாக நான் உணர்ந்தேன்.

ஆனால், இந்த “ஜுஜூஃபி” அவ்வாறன்றி ஆனந்த் சாமி, கருணா, தயாளன் போன்ற தேர்ந்த நடிகர்களின் சிறப்பான நடிப்பு, சிறப்பான அரங்க அமைப்பு(ஆர்த்தி), இசை(கிஷோர்)யோடு மட்டுமன்றி சமகால அரசியல் எதேச்சிகாரத்தையும் காட்டமாகவும், நகைச்சுவையாகவும் விமர்சித்திருந்தார். பார்வையாளர்களிடம் அரசியல் விழிப்புணர்வையும், சமகால அரசியல் மீதான விமர்சனத்தை, சிரித்தவாறே வாழைப்பழத்தில் ஏற்றும் ஊசிபோல நாசுக்காக சேர்க்க கோமாளி வடிவமே சிறந்த்து என்பதை மீண்டும் வலுவாக கூறும் நாடகமாக “ஜுஜூஃபி” இருந்த்து.
சிறப்பான நடிப்பு மற்றும் வடிவம் போக, இந்த நாடகத்தில் நான் மிகவும் நேசித்தது ஆடை மற்றும் அரங்க பொருட்கள். முன்பு பார்த்த “கி.ரா. கொளம்பு” வில் ஆடை மிக எளிதாக பார்வையாளர்களில் இருந்து மூன்று திடுமென அரங்கம் வந்து நடிக்கத்துவங்கியது போலிருந்த்து. அரங்க பொருட்கள் சிறு மேஜை மட்டுமே இருந்த்தாக ஞாபகம். பையில் பேனா கொண்டுசெல்வது போல் எளிதாகவே இருந்த்து. இந்த முறை ஜுஜூபியிலோ ஆர்த்தியின் வண்ணமயமான அரங்க பொருட்களும், விதவிதமான முகமூடிகளுமாக மேடையிலிருந்து கட்புலன் விலகமுடியாதபடி உறுதியாக இருந்த்து. அதற்கு இணையாக அழகான ஆடை வடிவமைப்பு மற்றும் இசையும். மேற்கத்திய இசையும், மிருதங்கம், உறுமி, மற்றும் புல்லாங்குழல் என அனைத்தும் கச்சிதமாக இருந்த்து. சில இடங்களில் வசனத்தை பின்பற்ற முடியாதபடி இசை உரக்க இருந்ததை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மொத்தத்தில், பார்க்க பார்க்க இப்படி ஒரு நாடகத்தில் நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை தரக்கூடிய அனுபவமாக இருந்தது. நாளை (26 பிப்ரவரி) மாலை, பெசன் ட் நகர், ஸ்பேசஸில் இதே நாடகம் நிகழ்த்தப்படுகிறது. வாய்ப்புள்ள அன்பர்கள் தவறாமல் கட்டாயம் பார்க்க வேண்டிய நாடகம். குறிப்பாக குழந்தைகளுக்கு அவ்வாய்ப்பை தர மறந்து/மறுத்துவிடாதீர்கள்.

சுபம்

1 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Unknown said...

தொடர்ந்து உங்கள் நாடகப்பணி முன்னேறட்டும் வாழ்த்துக்கள் ஸ்மைலி