தமிழ் சினிமாவின் கலாப்பார்வையில் திருநங்கைகளின் நிர்வாணம்

இந்தியாவில் அனைத்து தரப்பு பொது மக்களுக்கான முக்கிய பொழுதுபோக்கு சாதனமாக இருப்பது வெகுஐன சினிமா. அத்தகைய பெருமை வாய்ந்த சினிமா மக்கள் மீதும், மக்களின் கலாச்சார கருத்தாக்கத்தின் மீதும் செலுத்தும் ஆதிக்கம் நாம் அனைவரும் நன்கறிந்ததே. இன்று பெருமாண்மை வெகுஐன மக்களுக்கு அவர்களது வாழ்க்கையில் நேரடி அனுபவமற்ற அனைத்தும் வெள்ளித்திரையின் மூலமாகவே அதிகளவில் சென்றடைகிறது. உதாரணமாக தன் வாழ்நாளில் ஒருமுறையேனும் நீதிமன்றத்தின் படி கூட ஏறியிறாதவர்க்கு அந்நீதி மன்றம் குறித்த பிம்பத்தை தருவது சினிமாவாகவே உள்ளது. இவ்வாறாகவே அரசியல் துறை, காவல் துறை, மருத்துவ துறை சார்ந்த பலவற்றையும் நாம் சொல்ல முடியும். அதுபோலவே, பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், திருநங்கைகள் குறித்த அறிமுகமும், அறிவும் சினிமா மூலமாகவே தவறான கண்ணோட்டத்தில் சென்றடைகிறது.


ஒட்டுமொத்த தமிழ்சினிமா வரலாற்றில் மிக அரிதாகவே திருநங்கைகள் திரைப்படங்களில் கண்ணியமான முறையில் காண்பிக்கப்படுகிறார்கள். அந்த விதத்தில் பம்பாய் இயக்குநர் மணிரத்னம் பாராட்டப்பட வேண்டியவராகிறார். கதைப்படி,கலவரச் சூழலில் பிரிந்துவிடும் இரட்டைச் சகோதரர்களில் ஒருவன் நிர்கததியாக திகைத்து நிற்கும வேளையில் எதிர் பாராத திருப்பமாக வந்து அச்சிறுவனை பாதுகாப்பது தெருவோரத்தில் வசிக்கும் ஒரு திருநங்கையாவார். தொடர்ந்து வரும் காட்சியிலும் உயிரின் மதிப்பு குறித்து கலவரக்காரர்களிடம் வீராவேசத்துடன் ஒரு வசனம் பேசி முடிப்பார்.


நிச்சயமாக மனித உயிரின் மதிப்பு குறித்தும், அதனால் ஏற்படும் உறவுகளின் இழப்பு குறித்தும் திருநங்கையொருவர் விளக்குவது மற்ற யாரையும் விட பொருத்தமாகவே இருக்கும். தனக்குள்ள பாலின அடையாள சிக்கல் ஒன்றின் காரணமாக மட்டுமே குடும்பம் உள்ளிட்ட எல்லா தளங்களிலும் விளக்கப்பட்டவர்க்குதான் உயிர், உறவின் மதிப்பும் வலியும் தெரியும். அதனை தக்க இடத்தில் பயன்படுத்திய பம்பாய் படம் போல் வேறு படம் கூட தமிழ் சினிமாவில் வந்திருக்கவில்லை.


சமீபத்தில் வந்த “சித்திரம் பேசுதடி”யில் ஒரு சிறு காட்சியில் நற்குணமுள்ள திருநங்கையாக ஒருவர் காட்டப்பட்டிருந்தார். அதே படத்திலும் பிரபலமான “வாழமீனுக்கும், விளங்கு மீனுக்கும்” பாடலில் ஆபாசமில்லாத வகையில் திருநங்கைகள் காட்டப்பட்டிருந்தனர். கதாநாயகனைத் தேடி நாயகி வருகிறாள். அங்கே அயர்ன் பண்ணுபவனிடம் சிறிய சண்டையிட்டபடி நிற்கும் திருநங்கையிடம் கதாநயாகன் எந்த வழியாக சென்றான் என்று கேட்கிறாள். கதைப்படி நாயகன் சென்ற இடம் ஒரு விபச்சார விடுதி என்பதாலும், அங்கே ஒரு குடும்பப் பெண் செல்வது சரியாகாது என்பதாலும் தனக்கு தெரியாதென்று கூறிவிடுகிறாள். இதுபோக, மருத்துவத்துறையின் நடக்கும் திரைமறைவு பொருளாதார-அரசியலை முதன்முறையாக பேசிய “ஈ” இயக்குநர் கூட பாடலில் ஓரமாக ஆடிவிட்டு போகும்படி காட்டியுள்ளார். அறுவெறுப்பாக காட்டிடவில்லை என்றாலும். அவரால் முடிந்தது அவ்வளவு தான்.

சமீபத்தில் அமீரின் இயக்கத்தில் வந்து சிறந்த எதார்த்த சினிமாவாக புகழ்பெற்று வரும் பருத்தி வீரன் திரைப்படத்தில் வரும் ஆரம்ப மற்றும் இறுதி பாடல் காட்சிகளில் திருநங்கைகள் நிதர்சனம் என்ற பெயரில் குத்தாட்ட வேடதாரிகளாக பயன்படுத்தப்பட்டுளனர். அதில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல் ஒன்றில் காட்டப்பட்டிற்கும் ஆறு திருநங்கைகளில் இரண்டு பேர் மட்டும் உண்மையான திருநங்கைகள் மீதமுள்ள நான்கு பேரும் அலிகளாக வேடமேற்றிருக்கும் மீசை மளித்த ஆண்களே. அசத்தலான கிராமிய பாடலான இதில் அவ்வேடதாரிகள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வசனங்களும் குத்தாட்டமும் திருநங்கைகளின் மீதான தமிழ் சினிமாவின் பழைமையான மதிப்பீட்டினையே இப்படத்திலும் பதிவு செய்கிறது. படத்தில் இரண்டு காட்சிகளில் வரும் பாலியில் தொழிலாளி முதல் திருநங்கைகள் வரை விளிம்புகள் மீதான இவர்களின் எதார்த்தம் என்பது ஆதிக்கத்தின் பார்வையிலான கேளிக்கை சார்ந்த எதார்த்தமாக மட்டுமே இருக்கிறது. அதன் நவீன பதிப்பே பருத்தி வீரன்.

மற்றபடி, இன்று தமிழ்சினிமாவை ஆளும் அனைத்து பெரிய ஹீரோக்களும், தாங்களோ தங்கள் படத்தல் வரும் காட்சியிலோ திருநங்கைகளை கேவலப்படுத்தியே வருகின்றனர். அமராவதி, போக்கிரி, சிவகாசி, கட்டபொம்மன், துள்ளாத மனமும் துள்ளும், திருடா திருடி, பருத்தி வீரன், கில்லி, உள்ளம் கொள்ளை போகுதே, வேட்டையாடு விளையாடு, சில்லுன்னு ஒரு காதல், வரலாறு, ஈரமான ரோஐhவே, ..... இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத, நினைவில் வராத படங்கள் கணக்கில்லாமல் உள்ளன.

பொதுவாக, தமிழ் சினிமாவில் சித்திரிக்கப்படும் திருநங்கைகள் ஒன்றாகவோ, நான்கைந்து கூட்டமாகவோ அடர்த்தியான மேக்கப்பில் டோப்பா மாட்டிக் கொண்டு, கதையின் நாயகன் ஃ நகைச்சுவை நடிகரை பாலுறவுக்கு விழையும் தோரணையில் அழைப்பர். பெரும்பாலும் பாடல்காட்சிகளின் மத்தியிலேயே அதிகம் பயன்படுத்தப்படுவர். பொழுது போக்கு சாதனமாகிய படத்தின் முக்கிய பொழுது போக்கான பகுதியான பாடல்களில் இவ்வாறு காட்டப்படுவது திருநங்கைகளும் பொழுது போக்கு உடைமையாக பாவிக்கப்படுகின்றனர்.

பத்து பத்து பத்துல நீ ஒன்ன நீக்கு...

எட்டு எட்டு எட்டுல நீ ஒன்ன கூட்டு... 9ஒன்பது என்பதை கவிநயமாக சொல்கிறார் கவிஞர்)


தலைப்புச் செய்தி வாசிப்பது கிரிஐhக்கா, கோமளம்......
.... ........ .......
.... ........ .......
ஒரேயொரு கீரவடைக்கு ஒம்பது பேர் போட்டி

அந்த ஒம்பது பேரும் அடிச்சிகிட்டதுல அவுந்து போச்சு வேட்டி...


இத்தகைய தெரு பொருக்கி பாடல்களுக்கு ஆண்களுக்கு மீசையை மளித்து அலிவேசமிட்டு அழகுபார்த்து மகிழ்கின்றனர். எதிர்பார்த்தபடியே பாடலும் ஹிட்....

இதுமட்டுமன்றி, ஒரு குடும்ப நிகழ்வாக அமையக்கூடிய பாடல்களிலும் கூட திருநங்கைகளை போகிற போக்கில் நிர்வாணப்படுத்தி மகிழ்கின்றனர் தமிழ் சினிமாவினர். இதற்கு உதாரணமாக சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வரும் கும்மியடி கும்மியடி பாடலைக் கூறலாம். இதில், கும்மியடி என்ற வரி வரும் இடத்திலெல்லாம் வடிவேலு அலிகளை நினைவு கூர்ந்து கிண்டலடிக்க தக்கதாய் கையடிப்பார். திருநங்கைகள் கைதட்டுவதற்கான, காரணம் தேவை, முறை என்பதே வேறு. ஆனால், ஒரு அலியை சித்திரிப்பதற்கான எளிய வடிவமாக இந்த கையடிக்கும் பழக்கத்தை தமிழ் சினிமா கர்த்தாக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவது கவனிக்கத்தக்கது.


நகைச்சுவைக்கென்ற தனி நடிகரற்ற வேட்டையாடு விளையாடு போன்ற படத்திலும் வில்லன்களான அவ்விரண்டு இளைஞர்களையும் நோக்கி கமல் கேட்டும் “நீங்க என்ன ஹோமோ செக்சுவலா?” என்று கேடபதும் ஒரு வில்லனிடம் பிடிபட்ட மற்ற வில்லனை “உன் பொண்டாட்டி இப்ப என்கிட்ட...” என்பதுமே மிகப் பெரிய நகைச்சுவை காட்சியாக காட்டப்படுகிறது.


இத்தகைய காட்சியமைப்புகள் ஹீரோக்களின் எடுபிடி பார்வையாளர்களுக்கும், மற்ற பார்வையாளர்களுக்கும் திருநங்கைகள் யாவருமே கேலிக்குறிய எளிய பிறவிகள், அவர்களை கேலி செய்வதென்பது வாழ்க்கையில் ஒரு ரசமான அனுபவம் என்ற அறிவை பதித்து விடுகிறது. இதனால், திருநங்கைகளை கேலி செய்வதோ, அவ்வாறு கேலி செய்யப்படுவதை வேடிக்கை பார்த்து களிகொள்வது தவறில்லை. அதுகுறித்து குற்றவுணர்வும் தேவையில்லை என்ற தளத்திலேயே அவர்களை கொண்டு செல்கிறது.


கட்டபொம்மன் என்ற படத்தில் கவுண்டமனி பெண்களை வேலைக்கு ஆள் எடுப்பதாக ஒரு நகைச்சுவை காட்சி வரும். இதில் வழக்கமான நகைச்சுவை போலன்றி ஒரு நுட்பமான விசயத்தையும் பதிவு செய்திருப்பார்கள். காட்சிப்படி இரண்டு திருநங்கைகள் (போல வேடமிட்ட ஆண்கள்) பணி தேர்வுக்காக காத்திருப்பார்கள். அவர்களை கண்ட கவுண்டமணி “யே. போ.... யே.. போ.....” என்று தொரத்துவார். அதற்கு அவர்கள் “ஏன் நாங்க வேலை செய்யமாட்டமா?” என்று கேட்க, பதிலாக கவுண்டமனி “ங்கூம், அப்பிடியே நீங்க வேலை செஞ்சுட்டாலும்...” (அதாவது, அலிகள் பொதுத் தளங்களில் பணி புரிவதற்கு லாயக்கற்றவர்கள்) என்று துரத்துவார். இங்கே, இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். வேலைக்காக அவர் தெரிவு செய்யும் ஆட்கள் இளைய, அழகான பெண்களை மட்டுமே. வயதான பாட்டிகளையோ அழகற்றவர்களையோ அல்ல. வேலைக்கு ஆளெடெக்கும் இடத்தில், அதுவும் பாலியில் இச்சையோடு அழகிய இளம்பெண்மளை தேர்வு செய்பவன் கூட திருநங்கைகளை மட்டமான மதிப்பீட்டுடன் வெளியேற்றுவதை முரணை காண்கிறோம். எரிச்சலூட்டும் இக்காட்சி ஒரு விதத்தில் திருநங்கைகளின் வேலை வாய்ப்பு குறித்தான நிதர்சனத்தை கூறுவதாகவும் உள்ளது.


படங்களில் திருநங்கைளாக ஆண்களே வேசமிடப்படுவதற்கு சிறந்த உதாராணமாக, “துள்ளாத மனமும் துள்ளும்" படத்தை கூறலாம். இப்படத்தில், வையாபுரி முதலில் பெண்தன்மையுள்ள ஆணாக விஐயின் நண்பர் வட்டத்தில வலம்வருபார்;. இடையில் காணமல் போகும் அவர் பெண்ணாக (கல்யாண சுந்தரம் - கல்யாணியாக) கல்லூரி மாணவியாக வருவார். திருநங்கைகளுக்கு சட்டரீதியாக பாலின அடையாள சிக்கல் இருக்கும் இந்திய சூழலில் எளிதாக பெண்ணாக மாறிவிட்டாதகும், கல்லூரி செல்வதாகவும் எதார்த்தமாக இல்லாததோடு பார்வையாளர்களிடம் இதுவும் நகைச்சுவையாகவே சேர்கிறது.


இவ்வாறு ஆண்கள் திருநங்கைகளாக நடிக்கும் படங்களில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய படம், வசந்த் இயக்கத்தில் வெளிவந்து நடிகர் பிரகாஷ் ராஐpன் சிறப்பான நடிப்பில் வெளிவந்த “அப்பு”. இதில் பிரகாஷ் ராஜ் மகாராணி என்ற அலிவேடத்தில் நடித்திருப்பார். படத்தில் பிராகஷ் ராஜ் அறிமுகமாகும் முதல் காட்சியே மீஅபத்தமாக படத்தின் தரத்தை காட்டும். அதாவது முதல் காட்சியே அமைந்துருக்கும். அதாவது பிரகாஷ் ராஜ் தனது மீசையை சேவிங் செய்து கொண்டிருப்பார். உண்மையில், திருநங்கைகள் தங்களது தாடை ரோமங்களை நீக்க கிடிக்கி போன்ற சிம்;டா என்னும் பாதுகாப்பற்ற (ஏனெனில் பாதுகாப்பான ஆயுதம் வேறில்லை) கருவியால் ஒவ்வொரு முடியாக வேரோடு பிடிங்கி எறிவர். அதன் வலியறிய ஒரேயொரு முறை தங்களது ஒரு முடியை பிடிங்கி பாருங்கள். பின்னர் அது முகத்தின் மென்மையான தோலில் எத்தகைய வலியைத் தரும் என்பதையும் நினைத்துப் பாருங்கள்.


இங்கேயும் கதைப்படி மகாராணி என்னும் திருநங்கை பெண்களை அடக்கி வைத்து விபச்சாரம் செய்யும் ஒரு பிம்ப். இதுவரை சிறிய சிறிய காட்சிகளாக திருநங்கைகளை கேலி பொருளாக மட்டுமே முன்வைத்த தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக நேர்மறையாக காட்டப்பட்ட பம்பமாய் இயக்குநரின் வழி;த் தோன்றலாலேயே முழு நீள கிரிமினலாக திருநங்கைகள் சித்தரிக்கப்படுகின்றனர்.


திருநங்கைகள், கிரிமினல்களாக காட்டப்படுவதன் இன்றைய நவீன பதிப்பாக நாம் காணக்கிடைக்கும் மற்றொரு படம் “சில்லென ஒரு காதல்”. இப்படத்தில் மும்பைக்கு செல்லுமிடத்தில் அங்கு பிரபலமாகவுள்ள விபச்சார விடுதிக்கு நண்பர் ஒருவருடன் ஆர்வத்துடன் செல்கிறார் அப்பாவி வடிவேல். அங்கோ, திருநங்கை இருக்க கண்ட அவர் தப்பித்து ஓட முயல்வார். அப்போது அவர் கூறும் வசனம் “ டே இங்க பூரா அவிங்களாத்தான் இருக்காய்ங்க” என்பதாக இருக்கும். அவ்வாறு தப்பித்து ஓட முயலும் வடிவேலுவை அங்கிருக்கும் மற்ற திருநங்கைகள் வலைத்துப் பிடித்து விடுவார்கள். தொடர்ந்து வடிவேலு “யெப்பா தெரியாம வந்துட்டேன் மன்னிச்சு விட்டுடுங்கப்பா” என்பார்.


மற்றபடங்களிலாவது அலிகள் அது, இது என்று அஃறிணையிலாவது குறிக்கபடும் நிலையில் இப்படத்தில் அவிங்க, இவிங்க என்று ஆண்பாலில் குறிக்கப்படுகின்றனர். அதாவது இவர்களெல்லாம் ஆண்கள் தான், கொழுப்பின் காரணமாக பெண்களைப் போல புடவை அணிந்து ஊரை ஏமாற்றுகின்றனர் என்று மிக எளிதாக வரையரை செய்துவிடுகின்றனர்.


இவ்வாறு மாட்டிக் கொண்ட வடிவேலை அங்குள்ள அலிகள் பணம் தருமாறு மிரட்டுகின்றனர். மட்டுமன்றி, பணம் இல்லை என்று கதறும் வடிவேலுவை “அப்படியில்லைனா, எங்கள மாதிரி நீயும் ஆப்ரேசன் பண்ணி எங்களை மாதிரி சம்பாதிச்சு குடுத்துட்டு அப்புறம் போ”...என்று கூறி துரத்துகின்றனர்.

ஒரு அப்பாவி பல அலிகளால் துன்புறுவதைப் போல காட்டப்படும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு திருநங்கைக்கு சமுகத்தின் பொது இடத்தில் உள்ள பாதுகாப்பின்மை குறித்து எத்தனை காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன....?


ஆக, வேலையின்றி வெட்டியாகத் திரியும் ஒருவர், மும்பை வந்ததும் விபச்சார விடுதிக்கு செல்ல ஆர்வமாய் உள்ள திருமணமான ஒரு நபர் அப்பாவியாகவும், அப்படி வரும் அப்பாவிகளை ஏமாற்றி வயிறு வளர்க்கும் கொள்ளைக் கூட்டமாக திருநங்கைகளையும் சித்தரிக்கின்றனர். மேலும், திருநங்கைகள் சிறவர்களை கடத்தி சென்று ஆபரேசன் செய்து அலிகளாக மாற்றிவிடுவதாக அபத்த செய்திகள் நிலவுகிற நிலையில், இக்காட்சியல் திருநங்கைகள் அத்தகையவர்களாக காண்பிக்கபடுவதன் மூலம் ஒரு சமூக விரோகிகளாகஃகொள்ளையர்களாக பார்வையாளர்களுக்கு பாடம் புகுட்டப்படுகின்றனர்.


சென்ற ஆண்டில் அதிக பொருட் செலவில் தயாராகி கௌதம் இயக்கத்தில் வெளிவந்த படம் "வேட்டையாடுஇ விளையாடு" சென்ற ஆண்டில் டாப் டென் தரவரிசையிலும் முதல் இடம் பெற்ற சிறப்பும் இதற்குண்டு. தொடர்ந்து தனது படங்களில் வித்தியாசமான குற்றவாளிகளை காண்பித்து வரும் கௌதம் இதில் வித்தாயசமான குற்றக் காட்சி ஒன்றினை பாலியல் வெறி பிடித்த அலியின் மூலம் காட்சிப்படுத்துகிறார். படத்தில் வரும் ஒரு காட்சி
கதைப்படி அந்த போலிஸ் ஸ்டேசனுக்கு ஒரு அலி வாரந்தோறும் தன் காமஇச்சையை தீர்த்துக் கொள்ள வருவார். இதில் அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டருக்கும் பங்குண்டு. அதன்படி அந்த வாரமும் வருகிறார். அவரைக் கண்டதும் அதிகாரிக்கு ஒரு விபரீதமான யோசனை வருகிறது. லாக்க்ப்பி;ல் இருக்கும் இரண்டு கல்லூரி இளைஞர்களையும் வித்தாயாசமான முறையில் தண்டிப்பதற்காக இவரை அவர்களது அறைக்குள் அடைக்கிறார். அந்த திருநங்கைக்கோ அவ்விரு இளைஞர்களும் லட்டாக அமைகின்றனர். இளைஞர்கள் இருவரும் திருநங்கையை கண்டு அலறு , அவரோ அய் இந்த பக்கம் சிகப்பு, இந்த பக்கம் கருப்பு" முத்தாய்ப்பாய காட்சியை இளைஞர்களின் அலறலோடு முடிப்பார்.

தொடர்ந்து வரும் காட்சியில் அந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் உயர் அதிகாரி(கமல்) கைதிகளை குறித்து எந்த குறிப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்று மட்டும் தான் கடிந்து கொள்கிறார். அலியைக் கூட்டிட்டு வந்து அந்த கசமுசா-வெல்லாம், மூச்! அதப்பத்தி ஒரு வார்த்தை கிடையாது!
வேறொரு காட்சியில் இது குறித்து கொலைவெறியோடு பேசும் பாதிக்கப்பட்ட (?!) கைதிகளில் ஒருவர் ~கோத்தாத... அந்த அலியமொத கொல்லனும்னு நெனைச்Nசுன்....) என்பதாக ஒரு வசனம் .


இப்படத்தில் இரண்டு மருத்துவ மாணவர்கள் வில்லன்களாக காட்டப்பட்டிருந்தாலும், மருத்துவ அதிகாரியொருவர் (நல்லவர்) இத்தகைய மாணவர்களால் தான் மருத்துவவர்களுக்கே அவமானம் என்று வருத்தப்படுவார். கூடNவு அம்மாணவர்குளின் மருத்துவ பட்டத்தையும் இந்தியன் ;மெடிக்கல் கவுன்சில் நிராகரிப்புதாகவும் தெரிவிப்பார், இந்த நல்லவன் ஏள கெட்டவன் எல்லாத் துறையிலுமே இருப்பதாகNவு அனைத்து தமிழ் சினிமாவிலும் காட்டப்டுவர். படத்தில் ஒர போலிஸ் வில்லன் (கெட்டவன்) என்றால் இன்னொரு போலிஸ் நல்லவனாக நிச்சயம் வருவான். ஆனால், திருநங்கைகள் மட்டும் இதுநாள் வரை இப்படியொரு மட்டமானவர்களாகவே சித்தரிக்கபடுவதன் அவசியம் என்ன...?


குடும்பத்தாலும், ஒட்டு மொத்த சமூகத்தாலும் பொது வாழ்க்கையிலிருந்து புறக்கணிக்கப்பட்டு சகமனித அங்கீகாரமின்றி பொதுத் தளத்தில் வாழ வழியுமின்றி (சோத்துக்கு வழியில்லாமல் என்று புரிந்து கொள்ளவும்) கடைக்Nகுhடியில் நின்று பிச்சையெடுத்தும், விபச்சாரம் செய்தும் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்களின் திருநங்கைகள், அப்படிப்பட்வர்களின் பிரச்சனை என்ன..? அவர்களின் தேவை என்ன? என்பது குறித்த எந்தவொரு அக்கரையுமின்றி கேலிக்காக மட்டுமா பயன்படுத்தி வருகிறது தமிழ் சினிமா. இன்று வெள்ளித் திரையிலும், நாளை தொலைக்காட்சியிலுமாக இத்தகைய படங்களில் வரும் நங்கைகளை மட்டுமே கண்டு வளரும் தலைமுறையும் அத்தகைய சிந்தையோடே வளர்ந்து திருநங்கைகள் மீதான தனது வன்முறையையும் நிலைநாட்டுகிறது.


கீதை என்று விஐய் படம் அது பகவத் கீதையை குறிக்கிறதென. அப்படம் வெளிவர தடைவிதிக்க கோரின இந்துத்துவ அமைப்புகள், அதன்படி, புதிய கீதை என பெயரும் மாற்றப்பட்டது. டாவின்சி கோட் திரைப்படம் கிருஸ்துவர்களின் நம்பிக்கையை அவமானப்படுத்துகிறதென அப்படம் வெளிவருவதற்கே தடை விதிக்கப்பட்டது. ஆனால், திருநங்கைகள் மீதான இத்தகைய அறைவேக்காட்டு கற்பிதங்களை எப்போது நிறுத்துவார்கள்..?

18 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Raveendran Chinnasamy said...

உங்கள் கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறது . . ஒரு முறை ஜெயா TV லக்ஷ்மி ப்ரோக்ராம்ல் ஒரு திரு நங்கை பற்றி பார்த்த பின் நான் என்னுடைய திரு நங்கைகள் மீது ஆன கருத்துகளை மார்த்தினேன் .

குறிப்பு : வையாபுரி விஜய் யுடன் நடித்தது " துள்ளத மனமும் துள்ளும்"

ramachandranusha said...

வித்யா, கருத்துக்களை மிக நன்றாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். ஆனால் வெகு ஜன பத்திரிக்கைகளில் வந்தால் இன்னும் பலரின் பார்வையில் படும். அது முடியுமா என்று தெரியவில்லை. திண்ணை போன்ற இணையத் தளத்திற்காவது அனுப்புங்களேன்.

G.Ragavan said...

ம்ம்ம்ம்ம். இதற்குக் காரணம் என்னவென்று யோசித்துப் பார்க்கிறேன் லிவிங் ஸ்மைல். எனக்கு ஒரு காரணம்தான் தோன்றுகிறது. மனிதன் தான் செய்வது போல இன்னொருவர் செய்யாவிடில் அது தவறென்பான். அதைக் கிண்டல் செய்வான். அப்படியிருக்கையில் பெரும்பான்மையானோர் ஒரு மாதிரி இருக்கையில் வேறு விதமாக இருக்கும் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் கிண்டல் செய்வதுதான் நீங்கள் குறிப்பிடுவதும் என்று நினைக்கிறேன்.

நேற்று பேருந்தில்...தூத்துக்குடியிலிருந்து சென்னை வருகையில்....ஒரு வயதானவர்...திருநங்கை என்றுதான் நினைக்கிறேன். உறுதியாகச் சொல்ல முடியவில்லை. வேட்டி சட்டை உடுத்தியிருந்தார். கூந்தலை முடித்துக் கொண்டை போட்டிருந்தார். நெற்றியில் நாமம். ஆனால் நடையிலும் பேச்சிலும் ஒரு அதிகப்படியான குழைவு. அவருக்குத் தெரிந்தவர் ஒருவரும் பஸ்சில் ஏறியிருந்தார். குடும்பத்தோடு. நாமக்காரரிடம் ஏதோ பேசினார். கேட்டார். பின்னால் இருந்த எனக்குச் சரியாகக் கேட்கவில்லை. ஆனால் அடுத்து வாயை ஒருமாதிரிக் கொணித்து அந்த நாமக்காரர் செய்வது போலக் கிண்டலாகச் செய்து காட்டினார். அப்படிச் செய்தது தவறு என்று எனக்குத் தோன்றியது. அப்படிச் செய்தவர் உயரத்தில் மிகவும் குறைந்தவர். அதை வைத்து அவரைக் கிண்டல் செய்திருப்பார்கள் அல்லவா? அப்பொழுது அவருக்கு வருத்தமாக இருந்திருக்குமே....அது போலத்தானே நாமக்காரருக்கும் இருந்திருக்கும் என்று நினைத்தேன். ம்ம்ம்..அவர் நினைக்கவில்லையே! பொதுவில் அடுத்தவரைக் கிண்டல் செய்வது எனக்குப் பிடிக்காது. நண்பர்களுக்குள் இருக்கும் கிண்டல் பேச்சுகளை நான் குறிப்பிடவில்லை.

வேதா said...

நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்திலும் நான் ஒத்துப்போகிறேன். சமூக பார்வையில் திருநங்கைகள் அவமானப்படுவதற்கு சினிமா போன்ற ஊடகங்கள் மிக தீவிரமான ஒரு காரணமே.பருத்தி வீரனில் நீங்க குறிப்பிட்டிருந்த பாடலை நான் பார்க்கும் ஒவ்வொரு முறையும் அமீரின் மீது நான் கொண்டிருந்த மதிப்பு குறைந்து விட்டதென்றே சொல்ல வேண்டும்.

சீனு said...

நல்ல பதிவு.

//அசத்தலான கிராமிய பாடலான இதில் அவ்வேடதாரிகள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வசனங்களும் குத்தாட்டமும் திருநங்கைகளின் மீதான தமிழ் சினிமாவின் பழைமையான மதிப்பீட்டினையே இப்படத்திலும் பதிவு செய்கிறது.//

நான் அப்படி நினைக்கவில்லை. விஜய் நடிக்கும் படங்களில் பாடல்களுக்கு இடையில் காட்டப்படும் காட்சிகளில் இருக்கும் கேலியும் கிண்டலும் திணிக்கப்படும். ஆனால், இந்த படத்தில் அது யதார்த்தத்தை பிரதிபலிப்பதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். அதாவது, விஜய் படங்களை விட இது எவ்வளவோ தேவலை என்பதே...

//இத்தகைய தெரு பொருக்கி பாடல்களுக்கு ஆண்களுக்கு மீசையை மளித்து அலிவேசமிட்டு அழகுபார்த்து மகிழ்கின்றனர். எதிர்பார்த்தபடியே பாடலும் ஹிட்....//

அது எப்படிங்க! ஹிட் ஆகும் பாடலில் இப்படி இருக்கிறது. அவ்வளவே!!

Sree's Views said...

Hello Vidya..
Naan "vettai Aadu Villaiyadu" la andha dialogues kekum podhey..I was not too happy..I mean, he may be a villain but adhukaaga "avan un ponndaati yaa" nnu kekarapodhu..I felt "ya..so what..adhu avan personal taste..now come to the point" nnu dhaan thonichu.
Good Post ,Vidya !!!

Ravi said...

Vidya, though I agree with you on the potrayal of eunuchs in movies, not all in completely false. Pala peyarukku road-il aligalai paarthaal bayam dhaan varum. Aen? Palar nadandhu koLLum vidham appadi.

I dont know if this is because of the way they are treated or if others treat them because of their behaviour but whatever be it, I think you should stay strong and fight against it and not give up your self-respect. Like, you are a good role model. Would you, any day, do the way these people do on the roads? No right?

So many of the thirunangais lack is education and therefore resort to such cheap tactics. They should come out of such conventions - only then will they gain respect in the society and because of such people, all eunuchs are stereo-typed the same way.

So I would not blame the movie makers entirely, the cause also lies - to a large extent - with the Thirunangais.

அசுரன் said...

//சமீபத்தில் அமீரின் இயக்கத்தில் வந்து சிறந்த எதார்த்த சினிமாவாக புகழ்பெற்று வரும் பருத்தி வீரன் திரைப்படத்தில் வரும் ஆரம்ப மற்றும் இறுதி பாடல் காட்சிகளில் திருநங்கைகள் நிதர்சனம் என்ற பெயரில் குத்தாட்ட வேடதாரிகளாக பயன்படுத்தப்பட்டுளனர். அதில் இடைவேளைக்குப் பிறகு வரும் பாடல் ஒன்றில் காட்டப்பட்டிற்கும் ஆறு திருநங்கைகளில் இரண்டு பேர் மட்டும் உண்மையான திருநங்கைகள் மீதமுள்ள நான்கு பேரும் அலிகளாக வேடமேற்றிருக்கும் மீசை மளித்த ஆண்களே. அசத்தலான கிராமிய பாடலான இதில் அவ்வேடதாரிகள் பயன்படுத்தும் இரட்டை அர்த்த வசனங்களும் குத்தாட்டமும் திருநங்கைகளின் மீதான தமிழ் சினிமாவின் பழைமையான மதிப்பீட்டினையே இப்படத்திலும் பதிவு செய்கிறது. படத்தில் இரண்டு காட்சிகளில் வரும் பாலியில் தொழிலாளி முதல் திருநங்கைகள் வரை விளிம்புகள் மீதான இவர்களின் எதார்த்தம் என்பது ஆதிக்கத்தின் பார்வையிலான கேளிக்கை சார்ந்த எதார்த்தமாக மட்டுமே இருக்கிறது. அதன் நவீன பதிப்பே பருத்தி வீரன்.//

இன்றுதான் ஒரு நண்பன் இந்த பாடல் குறித்து சொல்லி நல்ல நாட்டுப்புற மெட்டில் சூப்பராக இருக்கு என்றான். காட்சிகளை மேலும் விவரித்தவுட்ன எனக்கு உஙக்ள் நினைவுதான் வந்தது. லிவிங் ஸ்மைல் இது குறித்து பதிவிட்டிருக்க வேண்டுமே என்று பார்த்தால் தமிழ் மணத்தில் உங்கள் பெயர் தெரிந்தது.

வக்கிரமான பார்வை. தட்டிக் கேட்க்க ஆளில்லை என்பதாலேயே இது போல கருத்துக்களை எனது நண்பர்களும், இந்த இயக்குனர்களும், முன்பு நானும் வெளிப்படுத்தியிருக்கிறேன்.


///ஒரு அப்பாவி பல அலிகளால் துன்புறுவதைப் போல காட்டப்படும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு திருநங்கைக்கு சமுகத்தின் பொது இடத்தில் உள்ள பாதுகாப்பின்மை குறித்து எத்தனை காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன....?//

எப்போதுமே ஒடுக்கப்பட்டவ்ர்கள் முன் வைக்கும் இந்த கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொன்னதில்லை.


//ஆனால், திருநங்கைகள் மட்டும் இதுநாள் வரை இப்படியொரு மட்டமானவர்களாகவே சித்தரிக்கபடுவதன் அவசியம் என்ன...?///

ஏனேனில் திருநங்கைகள் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் கிடையாது. ஆனால். போலிசும், அரசியல்வாதியும், பணக்கார முதலாளியும், பெரும் வர்த்தக மருத்துவமனைகளும் அப்படியல்ல என்பதால் அவற்றில் இருக்கும் பெருவரியான சீர்கேடுகளை ஏதோ சொற்பமானது என்பது போல காட்டும் தேவை அவர்களுக்கு உள்ளது.//ஆனால், திருநங்கைகள் மீதான இத்தகைய அறைவேக்காட்டு கற்பிதங்களை எப்போது நிறுத்துவார்கள்..?
//

திருநங்கைகளின் விடுதலை என்பது தனித்த விடுதலையா? இல்லையென்றே நினைக்கிறேன். அனைத்து ஒடுக்கப்பட்டவர்களுடனும் இணைந்து, தலித்துக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என எல்லாருடனும் இணைந்து பொது எதிரியை துவம்சம் செய்யும் நாள்தான் திருநங்கைகளுக்கும் விடுதலை நாள்.

அசுரன்

கார்த்திக் பிரபு said...

தொடர்ந்து வரும் காட்சியில் அந்த இன்ஸ்பெக்டரை விசாரிக்கும் உயர் அதிகாரி(கமல்) கைதிகளை குறித்து எந்த குறிப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்று மட்டும் தான் கடிந்து கொள்கிறார். அலியைக் கூட்டிட்டு வந்து அந்த கசமுசா-வெல்லாம், மூச்! அதப்பத்தி ஒரு வார்த்தை கிடையாது//


illainga adhu parri kamal sollum podhu "neenga annaiku senjaadhu romba peruya thappu ..adhu than iavnagalai indha kolaigalai seyya vacrukudhu nnu soluvaru"

neenga sariya kavanikkalainu ninaikirane

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

பருத்தி வீரன் படம் பார்த்த போது.., எனக்கு நீங்கள் குறிப்பிடும் பாடல்காட்சியில் இப்படியான ஒரு கேள்வி எழுந்தது.

கரகாட்டம் ஆடும் பெண்கள் மூவர் சும்மா நின்ற இடத்திலேயே கையை,காலை ஆட்டியபடி இருக்கு திருநங்களைகள் மட்டும் கூட்டமாக கும்பி அடிக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அந்த அறுவரில் இருவரைத் தவிர மற்றவர்கள் ஆண்கள் என்பது அதிர்ச்சியான செய்தி. :(

லிவிங் ஸ்மைல் said...

(http://nanbanshaji.blogspot.com/)நண்பன் என்பவர் அனுப்பிய பின்னூட்டம் சில தொழில் நுட்ப சிக்கல் காரணமாக, அதனை இங்கு வெளியிடுகிறேன்.

லிவிங்க் ஸ்மைல்,

நன்றாகச் சொன்னீர்கள்.

திரைப்படங்கள் தரும் கற்பிதங்கள், வெகு எளிதாக மக்களைச் சென்றடைகின்றன. அதிலும் குறிப்பாக. இத்தகைய திரைப்படங்கள் அல்லது காட்சியகப்படுத்தப்பட்ட செய்திகள் (தொலைக்காட்சி வழியாக) தரும் செய்தியை வெகுவாக உள்வாங்கிக் கொள்வது குழந்தைகள் தான்.

சத்தாம் ஹுசைன் தூக்கில் தொங்குவதை இமிடேட் செய்ய முயன்று, உலகம் முழுக்க 16 குழந்தைகள் செத்துள்ளனர். இதே போல், தங்கள் அபிமான காமிக் பாத்திரங்கள் செய்யும் வீர தீர செயல்களை பின்பற்ற முனைந்து, இறந்த / காயம்பட்ட குழந்தைகள் பலர் உண்டு.

இவைகளையெல்லாம் விட, திரைப்படம் தரும் செய்திகள் மிக வலுவானது. இங்கே புனையப்படும் கதைகளை, உத்திகள் கொண்டு, நடைமுறையில் நிகழ்வதாகவே காட்சிப்படுத்துகின்றனர்.

பாடல் காட்சிகளில், தரப்படும் தவறான நடன அமைப்புகள் - படம் பார்க்காதவர்களைக் கூடப் போய் சேரும் வாய்ப்புகள் அதிகம். இப்பொழுது இருபத்து நான்கு மணி நேரமும் ஓடிக் கொண்டே இருக்கும், ம்யூசிக் சேனல்களை எல்லோரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்க இயன்று விடுகிறது. குழந்தைகளிடமிருந்து, இவற்றை மறைப்பதென்பது இயலாத காரியம்.

சில திரை உலக படைப்பாளிகள், எப்பொழுதும் புகார் ஒன்று சொல்வார்கள். சென்சார் போர்ட் என்று ஒன்று கூடவே கூடாது. ஒவ்வொரு படைப்பாளியும் தன் மனசாட்சியின் துணை கொண்டு, தானே தணிக்கை செய்து, படத்தை வெளியிட வேண்டும். அப்பொழுது தான் கருத்து சுதந்திரம் ஒரு படைப்பாளிக்கு முழுதாகக் கிடைக்கும் என்றெல்லாம் கதை விட்டார்கள்.

தவறான காட்சிகளைத் தன் படத்தில் வைக்க மாட்டேன் என்ற கட்டுப்பாட்டை தணிக்கை இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, வைக்க மாட்டேன் என்ற உறுதியற்ற இந்த படைப்பாளிகளுக்கு இன்னமும் அதிக சுதந்திரம் கொடுத்து விட்டால், என்ன ஆகும் என்று கற்பனை கூட செய்ய இயலாது.

இவர்களின் கருத்து சுதந்திரம், தமிழ்த் தலைப்பு வைத்தால், வரி விலக்கு என்றதும், எங்கே போய் நின்றது என்று அனைவருக்கும் தெரியும். இனி திருநங்கைகளைத் தவறாகக் காண்பித்தால், வரிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது என்று ஒரு சட்டம் கொண்டு வரட்டும், பார்ப்போம், இவர்கள் இந்த யதார்த்தம் என்று செய்யும் பித்தலாட்டத்தை அப்படியே தூக்கிப் போட்டு விட்டு, திருநங்கைகளை உயர்வாகக் காட்டத் தயங்க மாட்டார்கள்,

அரசின் காதுகளுக்கு, இத்தகைய அறிவுரையை எடுத்துச் சென்று யாராவது போட்டால் மிக்க நலம்.

நல்ல பதிவு ஒன்றிற்கு நன்றி.

நண்பன்

லிவிங் ஸ்மைல் said...

நண்பர் கோவி. கண்ணனின் பின்னூட்டம் இது.

//சமீபத்தில் அமீரின் இயக்கத்தில வந்துள்ள் பருத்திவீரன் படத்தில் வரும் பாடல் காட்சியிலும் திருநங்கைள் நிதர்சனம் என்ற பெயரில் குத்தாட்ட வேடதாரிகளாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். காட்சியில் பயன்படுத்தப்பட்ட ஆறு அலிகளில் இரண்டு பேர் மட்டுமே உண்மையான திருநங்கைகள் மற்ற நான்கு பேரும் அலிகளாக வேடமேற்ற மீசை மளித்த ஆண்களே. பாலியல் தொழிலாளிகள் முதல் திருநங்கைகள் வரை விளிம்புகளின் மீதான இவர்களின் எதார்த்தம் என்பது ஆதிக்கத்தின் பார்வையிலான கேளிக்கை சார்ந்த எதார்த்தமாக மட்டுமே இருக்கிறது என்பதற்கு தக்க சான்று பருத்தி வீரன்.//

லிவிங் ஸ்மைல்,
நீங்கள் சொல்வது மிகச் சரிதான்.

Voice on Wings said...

சந்தோஷ் சிவன் இயக்கிய நவரசான்னு ஒரு திரைப்படம் - முற்றும் முழுவதுமா ஒரு திருநங்கையைப் பற்றிய கதை, மற்றும் அவர்களைப் பற்றிய கண்ணியமான காட்சிப்படுத்தல்ன்னு எனக்கு தோணிச்சு. அதுல எதுவும் ஆட்சேபிக்கற மாதிரியான காட்சிகளைப் பார்த்ததா நினைவில்லை. அரவாணிகளைப் பற்றிய பொதுமக்களின் பார்வையைக் காட்டும் விதத்தில் அமையும் ஒரு சில வசனங்கள் புண்படுத்தும் விதமாக இருக்கலாம், ஆனால் அது உண்மை நிலையை வெளிப்படுத்தும்போது தவிர்க்க இயலாததே.

பி.கு. - இப்படத்தைப் பற்றிய நாராயண்ணின் இடுகையைத் தேடுகையில், அதில் உங்கள் பின்னூட்டதைக் கண்டேன். இப்படத்தைப் பற்றி இந்தப் பதிவில் ஒரு வரி குறிப்பிட்டிருக்கலாம்.

லிவிங் ஸ்மைல் said...

/// Voice on Wings said...
சந்தோஷ் சிவன் இயக்கிய நவரசான்னு ஒரு திரைப்படம் - முற்றும் முழுவதுமா ஒரு திருநங்கையைப் பற்றிய கதை, மற்றும் அவர்களைப் பற்றிய கண்ணியமான காட்சிப்படுத்தல்ன்னு எனக்கு தோணிச்சு ////

ஆம்,

தாங்கள் குறிப்பிட்டதைப் போல நவரசா, நவரசா மட்டுமன்றி செகண்ட் பெர்த், அச்சுப்பிழை என சில படங்களும் உள்ளன. இவையெல்லாம் வெகுஜனங்கள் பார்க்கக்கூடிய திரைப்படங்கள் அல்ல.. கலைப்படங்கள் என்னும் வரிசையில் சேரக்கூடிய படங்களே..


இவற்றில் நவரசாவின் சிறப்பு திரையில் வெளிவந்தது மட்டும் தான். ஆனால், மற்ற படங்களில் இருந்த உழைப்பும், தீவிரமும் இதில் இல்லை. ஒரு சிறுமி வழியில் ஆரம்பிக்கும் கதை கூவாகம் சார்ந்த டாக்குமெண்டாக மட்டுமே உள்ளது.

திருநங்கைகள் குறித்தான மேம்போக்கான கரிசனம் மட்டுமே மேலோட்டமாக காண்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பின்னணியும், தேர்ந்த கலைநுட்பமும் வாய்ந்த இயக்குநர் தன்னுடைய ப்ரொபைலை நிரப்பிக் கொள்ளப் பயன்படுத்தியதாகவே நவரசா உள்ளது. அதற்கு உதாரணம் இந்தப்படத்திற்காக வரிவிலக்கு பெற முயற்சி எடுத்துக்கொள்ளாமையை கூறலாம். குறைந்த பட்சம் இப்படம் மூலம் பெற்ற பரிசுத்தொகையைக் கூட அவர் மட்டுமே பயன்படுத்தி கொண்டார். (வாடாமல்லிக்காக பரிசு பெற்ற சு. சமுத்திரம் 50% பரிசுத்தொகையை நாவலுக்கு தகவல் அளித்த திருநங்கைகளுக்கு பகிர்ந்தளித்திருந்தார் என்பதை நினைவிற் கொள்ளவும்.)


யோசித்துப் பாருங்கள், அந்த படம் முழுக்க முழுக்க ஒரு தொண்டு நிறுவனத்தின் அறிவுரைப்படி அத்தொண்டு நிறுவனம் சார்ந்தே எடுத்திருப்பதை படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தால் புரியும்.

வெகுஜன சினிமா அளவிற்கு ஒரு சிறு சலனத்தை கூட ஏற்படுத்த வில்லை. இதனால் பயனடைந்தவர்கள் மேற்படி தொண்டு நிறுவனமும், சந்தோஸ் சிவன் மட்டும் தான்.

/// இப்படத்தைப் பற்றி இந்தப் பதிவில் ஒரு வரி குறிப்பிட்டிருக்கலாம். ////

குறிப்பிட்டாச்சு!!

உண்மைத் தமிழன் said...

அன்பு வித்யா, திருநங்கைகள் என்ற பெயரே தமிழ்நாட்டு ஜனங்களுக்கு அறிமுகமானது சென்ற ஆண்டுதான். அதாவது என்னுடைய 38வது வயதில். இணையத்தில் வலைத்தளம் ஒன்றை ஆரம்பித்து அதனுள் தமிழில் தட்டச்சு செய்யலாம் என்கிற அளவுக்கு கொஞ்சுண்டு அறிவை வளர்த்து வைத்திருக்கும் எனக்கே சென்ற ஆண்டுதான் இந்த வார்த்தை அறிமுகம் என்றால் கோடிக்கணக்கான இந்த ஜனங்களை நினைத்துப் பாருங்கள். இதற்கெல்லாம் மூல காரணம் திருநங்கைகள் பற்றிய ஒரு தகவலை இந்த அரசுகள் திட்டமிட்டே மறைத்து வருகின்றன. மேலை நாடுகளில் மூன்றாவது பாலினம் பற்றிய படிப்புகள் ஐந்தாம் வகுப்பிலிருந்தே இருப்பதாகச் செய்திகள். ஆனால் இங்கே அவனாகவோ, அல்லது அவளாகவோ வெளியில் பார்த்து தெரிந்து கொண்டு, அல்லது கேட்டுத் தெரிந்து கொண்டால்தான்.. இப்படியொரு சமுதாய வளர்ச்சியில் திருநங்கைகளுக்கு என்ன மரியாதை கிடைக்கும் சொல்லுங்கள்? அரசு நினைத்தால் மட்டுமே இந்த அறிவிலித்தனத்தை போக்க முடியும். நம் அரசுகளுக்குத்தான் ஆட்சிக்கு வந்தவுடன் யார் முதலில் நிறைய பணம் சம்பாதிப்பது என்ற கவலைதானே இருக்கிறது. இவர்களைப் பற்றி யார் கவலைப்பட்டது..? கொஞ்ச காலமாகும் வித்யா.. நம்பிக்கையுடன் இருங்கள்.. நம்பிக்கைதானே வாழ்க்கை.. சினிமாவைப் பொறுத்தமட்டில் திருநங்கைகளே தங்களைத் தரக்குறைவாக சித்தரிப்பது போல் காட்சி இருக்கும் சினிமாவில் நடிக்கவே மாட்டோம் என்று சொல்லும்பட்சத்தில்தான் இந்தக் குறை குறையத் தொடங்கும். அதுவரைக்கும் நான் முன்பே சொன்னதைப் போல் நிறைய வலியோடு கொஞ்சம் காத்திருக்கத்தான் வேண்டும்..

லிவிங் ஸ்மைல் said...

பி.க.த : 1

அம்பிகா said...

மிக அருமையான பகிர்வும், தலைப்பும்.
திருநங்கைகள் குறித்த எனது பதிவு, பிறப்பின் பிறழ்வு...திருநங்கைகள்.. லும் இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

பார்வையாளன் said...

நான் கடவுள் படத்தில், திரு நங்கை ஒருவரை நல்ல முறையில் காட்டி இருந்தார்கள்..அதை பாராட்டி இருந்திருக்கலாம்