ஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்

என் சுரணையை சுண்டியெழுப்பிய சகோதரன் முத்துக்குமாருக்கு கண்ணீர் அஞ்சலி!


1970, 80களில் இருந்த மாணவர்களிடையேயான தன்னெழுச்சி ஒரு சிறு அலையாக இப்போது மீண்டும் ஈழத்தில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக எழுந்துள்ளது. இது நாம் எதிர்பார்க்காத நல்ல ஆரம்பம். விடலை விளையாட்டிலும், பொழுதுபோக்கு களியாட்டத்திலும் இளமையை வீணடித்துக் கொண்டிருந்த இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இம்மாற்றம் காலத்தில் கட்டாயம் ஏற்படுத்திய நல்மாற்றம். ஆனால், அதையும் வளரவிடாமல் தடுக்க காலவரையற்ற விடுமுறையளித்து, விடுதி மாணவர்களை கட்டாயமாக ஊருக்கு அடித்துத் துரத்தி தன் ஜனநாயக அத்துமீறலை நடத்துகிறது தமிழக அரசு.


மனசாட்சியால் உந்தப்பட்ட மானமுள்ள பெருவாரி மனிதக்கூட்டம் நேற்று முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் அணி திரண்டது. அது குறித்த செய்தியோ பெரும்பான்மை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து தன் பாசிச முகத்தை பள்ளிளுத்து காட்டியது. தமிழகம் அல்லாத வேறு எந்த மாநிலத்திலும் இம்மக்கள் எழுச்சி ஊடக கவினம் பெறாமல் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகிறது. (விதிவிலக்கு ஆஜ்தக்)


போதாக்குறைக்கு, மாணவர்களின் ஒற்றுமையை போர்க்குணத்தை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சியாய் கல்லூரிகளுக்கு, காலவரையற்ற கட்டாய விடுமுறையும், விடுதி வெளியேற்றமும் செய்துள்ளது தமிழக அரசு. இங்கே நாம் யோசிக்கவேண்டியது உங்களையும் என்னையும் போன்ற மனிதர்கள் மீது அவர்கள் தமிழர்கள் என்பதையும் விட, சகமனிதர்கள் என்ற நிலையில் அவர்கள் சந்திக்கும் அல்லல்களில் ஒரு சதவீதம் எமக்கு ஏற்பட்டால் என்ன செய்வோம்? தப்பு, வேண்டாம் அதுகுறித்து நான் எந்தக் கேள்வியும் கேக்கப்போவதில்லை. எனக்கும் உங்களுக்கும் அது தெரியாமல் இல்லை. தெரிந்தேதான் கையறு நிலையில் வெறும் அமைதி காக்கிறோம்.


நான் கேட்க விரும்புவது சுரணை, கோபம், இயலாமை மிஞ்ச நம் கற்பனைக்கு மீறி தன் உடலை பொசுக்கிக் கொண்ட சகோதரன் முத்துக்குமாரனின் மரணவாக்குமூலம் நம் மீது காறி உமிழ்வது எதனை? முத்துக்குமாரின் சுரணையில் ஒரு துளி, கோபத்தில் ஒரேயொரு புள்ளி அளவாவது நம்மிடம் இருக்குமானால் நாம் என்ன செய்யலாம்...?

********

என்ன செய்வது என்று யோசித்த சில படைப்பாளிகள், மனித உரிமைப் போராளிகள், மாணவர்கள், உழைப்பாளிகள் என்று பலதரப்பட்ட அன்பர்கள் ஒன்றுகூடி நாடுதளுவிய எழுச்சிப் போராட்டத்தை இந்தியத் தலைநகரத்தில், நாடாளுமன்றத்தின் முன்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.


ஏன் நாடாளுமன்றம் முன்பு?

நாடாளுமன்ற இறுதிக் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி துவங்கவுள்ளது. தமிழக அரசு கள்ள மௌனம் சாதிப்பதை நாம் அனைவரும் வெளிப்படையாக அறிந்திருக்கையில், தமிழகத்தில் நமது போராட்டம் புல்லுக்கு இறைக்கும் நீராய் வீணாகிக் கொண்டிருக்கிறது. நமது இலக்கு நாமே மத்திய அரசின் கவனத்தை நேரடியாக பெறுவது. மாநில அளவில் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே தன்னெழுச்சி அலை தீவிரமாக இருக்கும் இந்நிலையில் நாடு தழுவிய தீவிர போராட்டம் மத்திய அரசின் கவனத்தையும், அயல்நாடுகளின் கவனத்தையும் பெறவேண்டியது அவசியமாகும்.



ஈழமக்கள் மீதான இனப்படுகொலைக்கு (சிங்கள ராணுவத்திற்கு) இந்திய அரசு அளித்துவரும் ஆதரவையும், ஆயுதங்களையும் திரும்பிப்பெற வேண்டும். தடைசெய்யப்பட்ட இயக்கமான விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீக்கி அங்கீகரிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறித்தி இப்போராட்டம் நடைபெறவுள்ளது. தனித்தனி இயக்கங்கள் ஏதோவொரு நாளில் தங்கள் கண்டனத்தை தெரிவிப்பதாக அல்லாமல் அனைவரும் ஒன்று கூடி பெருந்திரளாக அணிதிரண்டு தில்லியிலுள்ள மாணவர்கள், மனித உரிமை போராளிகள் அனைவருடன் ஒன்றுகூடி இந்திய அரசிடம் நேரடியாக கோரிக்கை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இப்பேரணியில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்பமுள்ள அன்பர்கள்

பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்

+91 98410 43438

+91 97897 12488


அயல்நாடுகளில் அல்லது கலந்து கொள்ள வாய்ப்பில்லாத ஆர்வமுள்ள நண்பர்கள் இப்பேரணி சென்றுவர, சில தினங்கள் அங்கே தங்க தேவைப்படும் பொருளாதார உதவியும், இம்முயற்சி வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளும் அளித்து உதவ வேண்டுகிறோம்.


தன் மரணம் நிச்சயமாக ஒரு அதிர்வை, முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்க்கமாக அறிந்தே தன் இன்னுயிரையும், தன் கனவுகளையும், தன் உறவுகளையும் தீயிடம் அர்ப்பணித்தான் நம் சகோதரன் முத்துக்குமாரன். அவனது மரண வாடை கருகித் தீர்வதற்குள் மேலும் மரணங்கள் ஈழத்தில் நிகழாமல் தடுப்போம். மனிதர்களாய் சகமனிதர்களை நேசிப்போம்... மனிதம் காப்போம். நன்றி!!

10 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

"ஈழவிடுதலை வேண்டி இணைந்து போராடுவோம்"
தமிழர்களின் ஒற்றுமை எதுவென உலகி்ற்கு தெரிவிப்போம்

வெற்றி said...

புது டெல்லியில் நடக்கவுள்ள பேரணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

YUVA said...

I can see your point. But my suggestion is, people are very less informed. Spread public awareness. would appreciate if you see my blog http://srinimirrors.blogspot.com

Jagan said...

முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!

ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...

முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!

அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?

முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...

நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!

பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!

வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.

Unknown said...

நண்பர்களே! தமிழ் ஆதரவு கருத்துக்களை நமது அண்டை(Telugu, Malayalam, Kannada) மொழிகளிலும் வெளியிடலாமே! இது ஒருவேளை கை கொடுக்கலாம்.

Unknown said...

நன்றிகள் வித்யா

ஈழத்திலிருந்து
எஸ்.சத்யன்

ஆதவா said...

வணக்கம் வித்யா,

உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்.... நலமறிய ஆவல்..

ஈழ விடுதலைக்கு இணைந்து போராடலாம்.... ஆனால் எப்படி எவ்வகையில் என்பதில்தான் இருக்கிறது...

தேவன் மாயம் said...

உங்கள் படைப்பை
வலைச்சரத்தில்
பதிவு செய்து
உள்ளேன்.
கருத்துரை தருக..
தேவா..

தேவன் மாயம் said...

உங்கள் படைப்பை
வலைச்சரத்தில்
பதிவு செய்து
உள்ளேன்.
கருத்துரை தருக..
தேவா..

maayan said...

ஈழவிடுதலை வெற்றி பெற வாழ்த்துக்கள்....................