திருநங்கைகள் தினம்

திருநங்கைகள் தின விழாவிற்கு ஆதரவுகரம் வேண்டி

வணக்கம்

நாகரீக சமூகத்தில் நம்மிடையே காலகாலமாக சமூக மையநீரோட்டத்தில் கண்டுணரப்படாமல், மதிக்கப்படாமல், நசுக்கப்பட்டு வரும் சகமனிதர்கள் திருநங்கைகள். சாதி, மத, இன வேறுபாடின்றி பாலினத்தால் ஒடுக்கப்பட்டவர்களாக ஒன்றினைத்து திருநங்கைகள் கடந்த 20 வருடங்களாக வெவ்வேறு வகையில் சகமனிதர்களாலும், அரசாலும் அங்கீகரிக்கப்பட வேண்டி இடைவிடாது போராடி வருகிறார்கள். அதன் பயனாக திருநங்கைகள் குறித்த குறைந்தபட்ச அக்கரையை பெற்று வருகிறது இன்றைய சமூகம்.

முழு அங்கீகாரம் கிடைக்காத நிலையிலும் சில திருநங்கைகள் கலைத்துறையிலும், எழுத்திலும், ஊடகங்களிலும் மேலும் பல தளங்களில் தங்களுக்கான இடத்தை படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக அடைந்து வருகின்றனர். ஆயினும், பெரும்பான்மையான திருநங்கைகளின் இன்றைய நிலை என்ன? குடும்ப ஆதரவின்றி, சமூக அந்தஸ்து மறுக்கப்பட்டு, புகலிடமும் இன்றி இறுதியாக பாலியல் தொழில் அல்லது கடைகேட்டல் (பிச்சையெடுத்தல்) என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

தமது பாலியல் அடையாள சிக்கல் காரணமாக ஒரு இந்திய பிரஜையாக இருந்தும் எந்த சமூகப்பயனும் பெறமுடியாதவர்களாக திருநங்கைகள் பொதுவெளியிலுருந்து விலக்கப்பட்டவர்களாக இருப்பது நாகரீக சமூகத்திற்கு முறையாகுமா? இந்நிலை மாற, போராட்டம் வலுப்பெற கடந்த இரண்டு வருடங்களாக ஏப்ரல் 15 திருநங்கைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

திருநங்கைகள் தங்களுக்கான உரிமைகளை அடைய குறிப்பாக, கல்வி/வேலைவாய்ப்பு/சட்ட அங்கீகாரம்/சமூக அந்தஸ்து ஆகியவற்றை மீட்டெடுக்க வரும் ஏப்ரல்-15 அன்று மாபெரும் விழாவாக கொண்டாடவிருக்கிறோம். திருநங்கைகளின் சமூக அங்கீகாரத்தேடலுக்கு உரமூட்டும் தினமாக ஏப்ரல் 15ஐ தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) திருநங்கையர் சமூகப் போராளிகளும் இணைந்து மாபெரும் விழாவாக கொண்டாடவிருக்கிறோம்.

விழாவில் ஓவியக் காட்சி, வரலாறு சொல்லும் புகைப்படக் காட்சி, புத்தக்க்காட்சி, கைவினைப் பொருட் கண்காட்சி, நாட்டுப்புறக் கலைகள், நாடகங்கள் இவற்றுடன் கவிதை, பேச்சு என திருநங்கைகள் தங்களது திறன்களை வெளிக்காட்ட உள்ளனர்.

வெறும் கலை நிகழ்வோடன்றி திருநங்கைகள் குறித்த புரிதலை, அவர்களின் தனித்துவிடப்பட்ட உணர்வுகளை வெகுஜனங்களோடு பகிர்ந்து கொள்ள உதவும் பாலமாக இத்திருநங்கைகள் தினம் விளங்கும். மேலும், அரசிற்கும், சமூகத்திற்கும் தங்களின் கோரிக்கையை காத்திரமாக முன்னிறுத்தவும் இத்தினம் தொடர்ந்து ஒலிக்கும்.

சாதனை படைத்த திருநங்கையர்களுக்கும் திருநங்கையர் மேம்பாட்டுக்கு உறுதுணையாய் இருந்தோருக்கும் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளோம். அறிவியல், அரசியல், சமூக, சட்ட விளக்க கருத்துக்களோடு தகுதியான ஆளுமைகள் திருநங்கைகள் குறித்து உரை நிகழ்த்த உள்ளனர்.

இம்மாபெரும் அங்கீகார மற்றும் கலை போராட்ட நிகழ்வை சாத்தியப்படுத்த உங்களின் ஆதரவாக....
நிறைய அன்பும் உங்களால் இயன்ற பொருளும் தந்து உதவுமாறு தமுஎகச மற்றும் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பாக தோழமையோடு கேட்டுகொள்கிறோம்.

மனிதர்களாக ஒன்றிணைவோம்!
போராடுவோம்!
மானுடத்தின் உதாரணமாக நின்றிடுவோம்!!

நன்றி!!

தொடர்புக்கு : 99944 36973, 99413 13000, 94440 85385, 95001 00630.

3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Unknown said...

வணக்கம் ஸ்மைலி திருநங்கைகள் தினம் என்று கேள்விப்பட்டு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை, ஆனால் என் ஆதரவை என் வலைப் பூ மூலம் தெரிவித்துள்ளேன். தங்கள் பிறந்த தினத்தில் நான் உங்களுக்கு அலைபேசி ஏற்படுத்தினேன்....

kumaresan said...

அருமையான, அவசியமான ஏற்பாடு. நிச்சயமாக இந்த விழாவில் நான் உங்களோடு.

-அ. குமரேசன்

mopatnsf said...

வாழ்த்துக்கள் ஸ்மைல்