புனைவாக சொல்லும் ஒரு முயற்சி

என்றும் போல் இன்றும், சோலாப்பூர் போய் சேர வேண்டிய பலதரப்பட்ட குடும்பங்களையும், அவரவர் பணி நிமித்தம் ஏறும் இடத்தில் ஏறி இறங்க வேண்டிய இடத்தில் இறங்கப் போகும் வழக்கமான ST Holderகளையும், மதிய வேளைக்காக பல்வேறு உணவுப் பததார்த்தங்களை விற்கும் வியாபாரிகளையும், இதர வடா-பாவ், காபி, சமோசா, ஐஸ் விற்பனையாளர்களையும், பார்வையற்ற ஊனமுற்ற, பாடத்தெரிந்த, தெரியாத பலவித பிச்சைக்காரர்களையும், A/C கோச்சுகளில் ஆங்கில புத்தகங்களை புரட்டிக் கொண்டும்,
தூக்கிங் கொண்டும், செல்போனில் வியாபாரம் பேசிக்
கொண்டுமாக வரும் மேல்தட்டு பணக்காரர்களையும், உயரதிகாரிகளையும் சுமந்து கொண்டு இன்னும் முக்கால் மணிநேரத்தில் பரபரப்பான புனே சந்திப்பை அடையப் போகும் பொறுப்போடும், கவுரவத்தோடும் கம்பிரமாக மும்பை - சோலாப்பூர் புகைவண்டி புனேவை நோக்கி தண்டவாளத்தின் மீது இன்றைய தினத்தின் சாந்தமான மதியநேர பக்குவத்தோடு ஆத்திரமின்றி, அவசரமின்றி பயணம் வளர்த்து வருகிறது.


எஞ்ஜினை ஒட்டி வரும் லேடிஸ் கம்பார்ட்மெண்டிற்கும், தொடர்ந்து வரும் மூன்று ஜென்ரல் கம்பார்ட்மெண்டிற்கும் அடுத்து பின்னாடியிருந்து தொடர்ச்சியாக நான்கு கம்பார்ட்மென்டையும் இணைத்தபடியுள்ள அசத்தலான புளூ நிற இருக்கைகளால் தனி அழகுடனும், வாசலை அடைத்து வேடிக்கை பார்த்து வரும் வாலிபர்களின் இருப்பில் தனித்துவத்தோடும், பிஸியான இயக்கத்தில் வரும் இந்த chair car கம்பார்ட்மெண்டின் இறுதி கம்பார்ட்மெண்டிலுள்ள வெஸ்டர்ன் டைப் கழிப்பறையில் நின்றுவாறு எதிரே தெரியும் வருட கணக்காக முகம் அலம்பும் போது தெரித்து விழுந்த நீர்த்துளிகளாலும், துடைக்கப்படாத தூசிகளாலும் பொலிவு குறைந்த கண்ணாடியில் வெறுமையாக தனது பிம்பத்தையே வெறித்துக் கொண்டிருக்கும் அவளின் முகத்திலிருந்து எதை பிரதிபலிப்பது என்று குழம்பிக் கொண்டிருக்கிறது கண்ணாடி

ஆமாம், அவளுக்கே அது தெரியாமல் தானே இருக்கிறது. பத்து நிமிடத்திற்கு முன்பு எல்லாரிடம் கேட்டதைப் போலவே அவனிடமும் "தே பையா.." என்று பிச்சை கேட்க...

யார் கொடுத்த அனுமதியோ அல்லது யாருடைய அனுமதி வேண்டும் என்ற அவனுக்கான (ஆணாதிக்க?) திமிருடன் பொங்கி வரும் ஆத்திரத்துடன் அவள் வயிற்றில் ஓங்கி உதைத்தும், வலியில் சுருண்டு விழுந்து விட்ட அவளை மேலும் வெறியேறி கையை முறித்து, முதுகை சுற்றி வளைத்து இடுப்பை நோக்கி குறி தவறாமல் விட்ட அடுத்த உதையில் சுர்ர்ர்....ரென உயிர் பற்றியிழுக்க என்ன நேர்ந்தது என்பதை உணரவே அவளுக்கு சற்று நேரம் பிடித்தது, தான் ஒருவனிடம் பிச்சை கேட்டதும், அதற்கு அவன் அடித்துக் கொண்டிருப்பதும் உணர ஆரம்பித்தவளுக்கு அடுத்து தான் என்ன செய்தோம் எப்போது இந்த கழிவறைக்குள் நுழைந்தோம், எது தனக்கு வலிக்கிறது, எவ்வளவு நேரம் இப்படி அழுது கொண்டிருந்தொம் என்பது புரியவே சற்று நேரமானது..

வலியை மாறி மாறி தந்து கொண்டிருக்கும் வயிற்றையும், தொடையையும், கீழ் முதுகையும், வலது கையையும் நொந்து கொண்டிருக்கும் அவள் இப்போது அழுது கொண்டிருக்கிறாளா..?


எடுப்பது பிச்சைதான் என்றாலும் நாலு பேர் பார்த்துக்கொண்டிருக்க - உண்மையில் அங்கே இருப்பது நாலே பேர் தானா - எவனோ ஒருவன் அவன் கொழுப்பிற்கு அடித்து சாத்தும்போது தன்மானம் இல்லாமலா போய்விடுகிறது. இதென்ன வாழ்க்கையில் வாய்க்காத ஒரு சோதனை?!, பிச்சையெடுப்பதும் போதாமல் நாலு பேர் முன்னிலையில் அப்பனா..? அண்ணணா..? புருஷனா..? யாரோ எவனோ.. அவன் இஷ்டத்திற்கு அடித்து சாத்துகிறானே... அதனை பொறுமையாக நின்று வேடிக்கை பார்த்த அத்தனை கண்களின் கேள்வியையும் நினைத்துப் பார்க்க உடம்பை கூனிக்குறுகச் செய்யும் அந்த குரூரமான பார்வைகளால் அவள் முகத்தில் படர்ந்திருப்பது அவமானமா..?


என்ன காரணமோ அல்லது காரணம் ஒன்று தேவையா என்ற கேள்வியோடு இங்கே வெட்டி சாய்க்கும் வெறியோடு இவளை குதறிக் கொண்டிருக்கும் இவன் மீதும், சிலையாக நின்று கொண்டு நடக்கும் கூத்தை மட்டும் பொறுப்போடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஏன் எதற்கு என்று கேட்கத்தோனாத இந்த மந்தைகளின் மீதும், (வேடிக்கைப் பார்க்கும் இக்கூட்டத்தில் தினசரி வருவதால் பரஸ்பரம் முகப்பரிச்சயமுள்ள சில ஆன்மாக்களும் உண்டு.) முதல் கம்பார்மெண்டிலிருந்தே தன்னை வேட்கையோடு பின்தொடர்ந்த இவ்விரு இளைஞ்சர்களும் கூட அவன் அடிக்கும் அடியை தடுக்கக்க முயலாமல் நிற்க இவர்கள் எல்லாம் மனிதர்களா மனித கழிவுகளா என்று பற்றியெரியும் ஆவேசத்தில் நிற்கும் அவள் முகத்தில் தெரிவது கோபமா..

இத்தனையையும் நின்று வேடிக்கை பார்த்து விட்ட பழக்கமான இம்மனிதர்களுக்கு மத்தியில் நாளைக்கும் எந்த முகத்தோடு தொடர்ந்து பிச்சையெடுக்கப் போவது, அதுகூட வேண்டாம் இன்னும் எவ்வளவு நேரத்திற்கு வேளியே முகம் காட்ட கூசி நாற்றம் வீசும் இக்கழிப்றையில் பதிங்கிக் கொண்டிருப்பது..? இந்தப் பிறவியில் வெட்கங்கெட்டு பிச்சையெடுக்கும் கேவலத்திற்கே இன்னும் பக்குவம் போதாது இருக்க.. இன்று, பொது இடத்தில் கண்டவனிடமும் உதைவாங்கும் அவமானம் வேறா என்று நொந்து கொண்டிருக்கும் அவள் முகம் வெறுப்பையா காட்டுகிறது...?


தன்னை சுற்றி எத்தனை மனிதர்கள், எத்தனை பெண்கள், எத்தனை குழந்தைகள், எத்தனை வியாபாரிகள், எத்தனை விலங்குகள் உள்ள போதும் யார் என்ன செய்தாலும் ஏன், எதற்கு என்று தன் சார்பாக கேட்க ஆளிலில்லாமல் என்ன ஆச்சு என்று கெட்கவும் நாதியில்லாமல் நிராதரவாய், நிர்கதியாய் ஓடும் வண்டியுடன் ஓடிக் கொண்டிருக்கும் தான் ஒரு அனாதை என்ற நிதர்சனம் உணர நெஞ்சில் இறங்கிய பாரம் தந்த வேதனையா...?


வாழ்க்கையில் படக்கூடாத அவமானமெல்லாம் பட்டதுக்கும் பின்னால் இன்று வாங்கியதெல்லாம் வெறும் அடி மட்டும்தானோ.? வலியோடு வலியாக, பலப் பல அனுபங்களுக்கு மத்தியில் இதுவும் ஒரு கெட்ட அனுபவம் தானோ.. என்று தனக்குத்தானே சமாதானம் தேடும் முயற்சியில் முகத்தில் படர்ந்து கொண்டிருப்பது சோகம் கலந்த சாந்தமா..?


இத்தனை கலேபரம் நடப்பதற்கு அரைமணி முன்பு வரை ஒத்தை முந்தானையில் அசத்தும் மெல்லிய ரோஸ் கலரும், மெரூன் பாடர் சேலையில் அதற்கு எடுப்பாக வளையலும், தோடும், பொட்டுமாக அவை கூடுதலாக்கிக் காட்டுவதால் தோன்றும் அழகு குறித்த கர்வத்தோடும், குதூகலத்தோடும் தே பேனு, தே பாபா, தே பையா, தே ராஜூ, தே சோனு என்று பிச்சையெடுத்துக் கொண்டும், எதிரே வரும் காபி வியாபாரிடம் கூலாக ஹாய் சொல்லிக் கொண்டும், பின்தொடர்ந்து வரும் இளைஞ்சர்களுக்கு உங்களுக்கு சிக்க மாட்டேன்
என்று பெப்பே காட்டியவாரும், எவ்வளவு மகிழ்ச்சியானதாக இவளின் இன்றைய பொழுது இருந்தது. அப்போது இந்த முகத்தில் இருந்த மலர்ச்சியெல்லாம் எங்கே போனது இப்போது...?!


இதோ ஆரவாரத்துடன் பூனே சந்திப்பும் வந்து ஐந்து நிமிடமும் ஆகிவிட்டதை கழிப்பறையின் ஜன்னல் வழி தானாய் விழும் இரைச்சலால் மூளையில் உரைக்க, தன்னையும், தன் பிறவியையும் இழிவாய் கட்டமைத்துவிட்ட இந்த மூட சமூகத்தின் மீது கோபமும், எல்லா வலியையும் அழுது தீர்த்துவிட்ட ஆசுவாசத்தில் வீங்கிய முகத்துடன் வாங்கிய அடியெல்லாம் மெல்ல மீண்டும் வலிக்க ஆரம்பிக்க நான்காவது நடைமேடையில் கீழே கிடக்கும் வாழைப்பழத் தோலை கவனமாக தாண்டியவாரு நடக்க ஆரம்பிக்கிறாள்..

அவமானமும், மனஉளைச்சலும், விரக்தியுமாக நவரசமும் காட்டும் அந்த முகத்துக்கு சொந்தக்காரி ஒரு அலி, ஒன்பது....

22 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

முத்துகுமரன் said...

சிறப்பாகவே வந்திருக்கிறது. விரிவாக பின்னர் கருத்து சொல்கிறேன். கடைசி இரண்டு வார்த்தைகள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

sooryakumar said...

மிக நன்றாக இருக்கிறது. நடை நன்றாகவே உள்ளது. படித்து முடித்ததும் ஒரு பெருமூச்சு வலியுடன் வந்தது.

செந்தழல் ரவி said...

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க...ஒரு எழுத்தாளினி கிளம்பிட்டாங்க...

ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதுங்க..ஒரே ஒரு முறை படிச்சு பார்த்தா போதுமே !!!

நாமக்கல் சிபி said...

சொல்ல வந்த கருத்தும், எழுத்துக்களும் நன்றாக வந்துள்ளன.

பாராட்டுக்கள்.

சொல்ல வந்த வேதனையும் புரிகிறது.
:(

அரபிக்கடலோரம் said...

can you pls contact me.. at
one email address mani@techopt.com
actually they are researching mumbai based tamilians.. in that.thirunangai.. are integral part of the city.. they look for some little educated person from community to represent the status, data or other details in mumbai.. your help will help them register better.. pls. contact them immediate..

இராம் said...

//எடுப்பது பிச்சைதான் என்றாலும் நாலு பேர் பார்த்துக்கொண்டிருக்க - உண்மையில் அங்கே இருப்பது நாலே பேர் தானா - எவனோ ஒருவன் அவன் கொழுப்பிற்கு அடித்து சாத்தும்போது தன்மானம் இல்லாமலா போய்விடுகிறது. இதென்ன வாழ்க்கையில் வாய்க்காத ஒரு சோதனை?!, பிச்சையெடுப்பதும் போதாமல் நாலு பேர் முன்னிலையில் அப்பனா..? அண்ணணா..? புருஷனா..? யாரோ எவனோ.. அவன் இஷ்டத்திற்கு அடித்து சாத்துகிறானே... அதனை பொறுமையாக நின்று வேடிக்கை பார்த்த அத்தனை கண்களின் கேள்வியையும் நினைத்துப் பார்க்க உடம்பை கூனிக்குறுகச் செய்யும் அந்த குரூரமான பார்வைகளால் அவள் முகத்தில் படர்ந்திருப்பது அவமானமா..? //

இவ்வற்றே படித்தவுடன் சொல்ல முடியாத ஒரு வேதனை தோன்றியது சகோதரி.

ச.சங்கர் said...

படித்து விட்டு பின்னூட்டம் போடலாம் என நினைத்த போது இதைப் பார்த்தேன்

""(குறிப்பா பாபா., பொடிச்சி, ஜிரா., முத்து தமிழினி, சுனா தினா (சுகுணா திவாகர், வனவரையான், தமிழச்சி, ராஜ் வனஜ், பொன்ஸ், முத்து குமரன், ப்ரியன் and the one and only லக்கி லுக்,)"""

சரி...தவறான அட்ரஸுக்கு வந்துட்டோம் போல ...சரி பின்னூட்டத் தகுதி வந்ததும் வரலாம் அப்படீன்னு இப்போதைக்கு :)

ச.சங்கர் said...

படித்து முடித்தபின் பின்னூட்டம் எழுத ஆரம்பித்து பின் இதைப் பார்த்தேன்.

"""விமர்சனங்கள் எதிர்பார்க்கிறேன் (குறிப்பா பாபா., பொடிச்சி, ஜிரா., முத்து தமிழினி, சுனா தினா (சுகுணா திவாகர், வனவரையான், தமிழச்சி, ராஜ் வனஜ், பொன்ஸ், முத்து குமரன், ப்ரியன் and the one and only லக்கி லுக்,)
""""
விமர்சனம் செய்ய தகுதி வளர்த்துக் கொண்டு பிறகு வர வேண்டும் போல..இப்போதைக்கு :)

G.Ragavan said...

வலி........மிகக் கொடுமையானது. உடலுக்கு வலித்தாலும் மனதுக்கு வலித்தாலும் அது கொடுமைதான். அதைப் பெரும்பாலானோர் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார்கள் என்ற நிலையில் வலியை மறைப்பது என்பது காகிதத்தில் நெருப்பைப் பொட்டலம் கட்டுவது போல. காகிதத்தையும் பொசுக்கிக் காட்டிக் கொடுத்து விடும்.

குழந்தைகள் சொல்லும். "அம்மா கீழ விழுந்துட்டேன்." கீழே விழுகையில் அது அவமானமாகக் கருதி அதைத் தனக்குள்ளே பூட்டி வைத்திராமல் எப்படியாவது சொல்லி விட வேண்டும் என்று அம்மாவிடம் சொல்லும். சொல்லி முடித்த பிறகு ஒரு சின்ன நிம்மதி. அந்த சமயத்தில் குழந்தைக்குக் காது குடுத்துக் கேட்டாலே நல்லது.

அந்த வலியைத்தான் உங்கள் எழுத்தில் காண்கிறேன். தாங்கிக்கொண்ட முட்களை ஒவ்வொன்றாக எடுத்து எறிகின்றீர்கள். நல்லது. முட்களை எடுத்தெறியுங்கள் முதலில். முட்களாகப் போடுகிறாயே என்று கேள்வி எழுவதால் முட்களை எடுக்காமல் இருந்து விடாதீர்கள். தைத்த முட்களைப் பிடுங்காவிடில் சீழ்தான் கோர்க்கும். ஆகையால் முட்கள் தீரும் வரையில் காத்திருக்கிறோம்.

முத்துக்குமரன் சொல்வதும் சரிதான். சொல்லாமல் சொல்வதும் ஒரு கலை. அதுவும் விரைவில் உங்களுக்குப் பழகும் என்று நம்புகிறேன். என்னுடைய வாழ்த்துகள்.

முத்து(தமிழினி) said...

வித்யா,

மீண்டும் படிக்க வேண்டும்.சுருக்கமாக சொன்னால் முத்துகுமரன் சொன்னதை போல் கடைசி இரண்டு வார்த்தைகள் துருத்திக்கொண்டு இருக்கின்றன.

மீண்டும் வருகிறேன்.

( அவர் வனவரையான் அல்ல.வரவணையான்.அதே போல ரோஜா வசந்த அல்ல ரோசா வசந்த்)

லிவிங் ஸ்மைல் said...

//// அன்புடன்...ச.சங்கர் said...
படித்து விட்டு பின்னூட்டம் போடலாம் என நினைத்த போது இதைப் பார்த்தேன்

""(குறிப்பா பாபா., பொடிச்சி, ஜிரா., முத்து தமிழினி, சுனா தினா (சுகுணா திவாகர், வனவரையான், தமிழச்சி, ராஜ் வனஜ், பொன்ஸ், முத்து குமரன், ப்ரியன் and the one and only லக்கி லுக்,)"""

சரி...தவறான அட்ரஸுக்கு வந்துட்டோம் போல ...சரி பின்னூட்டத் தகுதி வந்ததும் வரலாம் அப்படீன்னு இப்போதைக்கு :) /////


முதல் முறை புனைவில் சொல்ல முயன்றிருந்தேன்.. அதை சரி செய்ய விமர்சனங்கள் தேவைப்பட்டது.

எல்லோரையும் விமர்சனம் பண்ணுங்கன்னு சொன்னாக்க அது பின்னூட்டக் கயமைத்தனமாயிடும்..

அதான், எனக்கு அறிமுகமான நலம் விரும்பிகள் சிலரின் பெயரைப் பொட்டிருந்தேன்.. குறிப்பா உஷா ராமசந்திரன், துளசி கோபால், ராசா வசந்த், கௌதம். ஜி. ஆழியூரன், மயூரன், சிறில் அலெக்ஸ், அருள் குமார்னு நிறைய பேர் மிஸ்ஸாயிடுச்சு வேற....

itz ok.,

plz give your comments..

பொன்ஸ்~~Poorna said...

நல்லா வந்திருக்கு ஸ்மைலி..
1. எழுத்துப் பிழைகள். ரவி சொல்வது போல் ஒரு முறை படித்துப் பார்த்தாலே களைந்து விடலாம்
2. நீள நீளமான வாக்கியங்கள்.. எங்கே ஆரம்பித்தோம் என்பதே மறந்து போகிறது இந்த நீள வாக்கியங்களால்..
3. "அவள் ஒரு அலி, ஒன்பது" என்பதை விட அப்படிச் சொல்லி யாரோ அழைத்தார்கள் என்பது போல் முடித்திருக்கலாமோ? - தன்னைத் தானே ஏன் அப்படிச் சொல்ல வேண்டும் அவள்!

rajavanaj said...

//அவளின் முகத்திலிருந்து எதை பிரதிபலிப்பது என்று குழம்பிக் கொண்டிருக்கிறது கண்ணாடி//

//இன்று வாங்கியதெல்லாம் வெறும் அடி மட்டும்தானோ.?//

For sure, no one can understand the pain better than those who lives through it..

comments for this posts or just encouraging words or patting on the soulder cannot be a medicine for the injustice.

All I can say is - "keep fighting"
(sorry for english)

-RajaVanaj

ramachandranusha said...

வித்யா, எல்லாரும் நன்றாக இருக்கிறதுஎ என்று சொல்லும்பொழுது என் நேர்மறையான விமர்சனம். கவிதை தரும் தாக்கத்தை கட்டுரை தரவில்லை. ஏறக்குறைய அனைத்தும் தெரிந்த சம்பவங்கள், வரிகள், வார்த்தைகள். புதுமையாக இல்லை.
உங்கள் வலி, வேதனை என்று புரிந்தாலும், கவிதைதான் நெத்தியடியாய் வலியை உணர்த்தியது. உதாரணம் உங்கள் மரணம் என்ற கவிதை.

யாரும் கூப்பிட்டத்தான் வரணும் என்றெல்லாம் பார்க்க மாட்டேன், ஏதாவது சொல்லணும் என்று இருந்தால் ஆஜர்தான் :-)

Dharumi said...

ஜிராவின் பின்னூட்டம் மிகவும் பிடித்திருக்கிறது. நான் ஒவ்வொரு வார்த்தையையும் வழிமொழிகிறேன்.

உங்கள் எழுத்துக்கு என் வாழ்த்துக்கள்

சுல்தான் said...

அவள் படும் வலியையையும் வேதனையையும் படிக்க படிக்க, அந்த வேதனைகள் நமக்குள்ளும் இறங்குவதுபோல் இருக்கிறது.

மற்றவர்கள் பாரா முகமாயிருப்பது அவளுக்கு மட்டும் நேர்ந்ததல்ல சகோதரி..
எத்தனை பேர் விபத்துகளில் அடிபட்டு துடிதுடிக்கும் போது சகஉயிர் ஒன்று துடிப்பதாக உணர்ந்து ஓடி வருகிறார்கள்? மனிதன் மனிதத்தை இழந்து கூட்டுக்குள் உள்வாங்கும் ஆமையாய் தனித்து ஒடுங்கி விட்டான். அவன் கூட்டுக்குள் ஒளிந்ததால் அவன் கண்களும் பார்ப்பதில்லை காதுகளும் கேட்பதில்லை.

மனிதன் மனிதத்ததை திரும்பப் பெறச் செய்ய வேண்டும். இது நடந்து விட்டால் அதைப் போன்றவைகள் நடக்காதென்று உறுதியாகச் சொல்லலாம்.

இப்போதைக்கு அடி பட்டவள் வலிக்கு ஆறுதல்தான் தரமுடியும் சகோதரி.
இனியும் அதுபோன்று நடவாதிருக்க ஒவ்வொருவருடைய விழியும் செவியும் திறக்க வேண்டும்.

சுல்தான் said...

அவள் படும் வலியையையும் வேதனையையும் படிக்க படிக்க, அந்த வேதனைகள் நமக்குள்ளும் இறங்குவதுபோல் இருக்கிறது.

மற்றவர்கள் பாரா முகமாயிருப்பது அவளுக்கு மட்டும் நேர்ந்ததல்ல சகோதரி..
எத்தனை பேர் விபத்துகளில் அடிபட்டு துடிதுடிக்கும் போது சகஉயிர் ஒன்று துடிப்பதாக உணர்ந்து ஓடி வருகிறார்கள்? மனிதன் மனிதத்தை இழந்து கூட்டுக்குள் உள்வாங்கும் ஆமையாய் தனித்து ஒடுங்கி விட்டான். அவன் கூட்டுக்குள் ஒளிந்ததால் அவன் கண்களும் பார்ப்பதில்லை காதுகளும் கேட்பதில்லை.

மனிதன் மனிதத்ததை திரும்பப் பெறச் செய்ய வேண்டும். இது நடந்து விட்டால் அதைப் போன்றவைகள் நடக்காதென்று உறுதியாகச் சொல்லலாம்.

இப்போதைக்கு அடி பட்டவள் வலிக்கு ஆறுதல்தான் தரமுடியும் சகோதரி.
இனியும் அதுபோன்று நடவாதிருக்க ஒவ்வொருவருடைய விழியும் செவியும் திறக்க வேண்டும்.

ச.சங்கர் said...

பொன்ஸ் சொன்ன இரண்டாவது மூன்றாவது கமெண்ட்டுகள் என் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறது....
ஆரம்பத்தில் மிக நீளமான வரிகள்..சின்னச் சின்னதாக ஆக்கியிருக்கலாம்.

நான் இப்படியிருந்தால் நல்லாயிருக்கும் என்று யோசித்து வைத்திருந்த முடிவு வரிகள் கீழே

"""மெதுவாக இறங்கி நடக்க , எதிரே வந்த புத்தக வண்டியின் மீது இடிக்காமல் ஒதுங்கும் போது பக்கத்திலிருந்த ஒரு ஆளின் மீது கை லேசாக உரச அவன் " ஏ..சக்கா...அந்தா ஹை க்யா...? தேக்கே ஜானா...." என்ற போது வலி முற்றிலும் மறத்துப் போனவளாக அவனை வெறுமையாக பார்த்துக் கொண்டே நடக்கலானாள்."""

Dr. R. Valavan said...

Nandru

|||Romeo Boy||| said...

Really Superb LIVING SMILE... Y u not try to right a story about you peoples in some weekly tamil magazine ?? If u get a good story more magazines are always welcome ..

Cheer up , looking up your next story soon ..

ரவிசங்கர் said...

தனித்துவத்துடன் எழுதுகிறீர்கள். பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். ஒரே ஒரு வேண்டுகோள். கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்களை படிக்க கடினமாக இருக்கிறது. அதை மாற்றுவீர்களா? வேட்டையாடு விளையாடு குறித்தும் திரைப்படங்களில் திருநங்கைகளை சித்தரிக்கும்போக்கு குறித்தும் நீங்கள் எழுதி இருப்பது முற்றிலும் சரி. இருப்பதிலே மட்டமான ரசனையாக இதை கருதுகிறேன்.

//எதை இழக்கிறோம் என்ற மயக்கத்தில்,

அனஸ்தீஸ்யா இல்லாமலேயே

அறுத்துக் கதறும் நொடியிலும்...

செருப்புக்கு அடியில் தன்மானத்தை

மலமென்றே மிதித்தபடி,

கைநீட்டி கேவலப்பட்டு நிற்கும் நாட்களிலும்...

வன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட,

நுரையீரல் திணறி நிற்கும் நாட்களிலும்...

எதற்கென்றே புரியாமல் எங்களை நோக்கி உமிழப்படும்

வீச்சமடிக்கும் எச்சில்களைக் கேட்கிறேன்...

மரணம் மட்டுமா மரணம்..?//

மேற்கண்ட கவிதை நீங்கள் எழுதியதா? இப்படி ஒரு நெஞ்சில் தைக்கும் கவிதையை படித்து பல நாள் ஆகி விட்டது

லிவிங் ஸ்மைல் said...

/// ரவிசங்கர் said...

ஒரே ஒரு வேண்டுகோள். கருப்பு பின்னணியில் வெள்ளை எழுத்துக்களை படிக்க கடினமாக இருக்கிறது. அதை மாற்றுவீர்களா? ////

மாத்தனும்னு தான் ஆசை தெரியலையே!!