விழித்தெழு; எழுந்து போராடு உரிமைக்காய் 2

"வேலை தேடி சென்னைக்கு வந்து இன்னையோடு சரியா மூனு மாசமாகுது; போகாத இண்டர்வியூ இல்லை. ஏறாத கம்பெனி இல்லை.. இருந்தும் படிச்சபடிப்புக் கேத்த வேலை இன்ன வரைக்கும் கெடச்சாப்புல இல்லை.. "

"இன்னும் எத்தனை நாளைக்குத் தான் வீட்டுல இருந்து வர காச வச்சும்; ப்ரெண்ட்ஸை நம்பியும் பொழப்ப ஓட்டுறது.. சே!!.... நானெல்லாம் வாழ்றதே வேஸ்ட்..." ஆம், கொஞ்ச நாளாகவே மலைச் சாமி மனதில் இப்படித்தான் தற்கொலை எண்ணம் வளர ஆரம்பிச்சிடுச்சு..

இன்று அது வேராகி வளர்ந்து, விச பாட்டிலெல்லாம் வாங்கி வச்சு, பக்காவா தற்கொலைக்கு ப்ளான் பண்ணி எல்லாம் ரெடி பண்ற அளவுக்கு வளந்துடுச்சு..

ப்ளான் பெரிசா ஒன்னும் இல்ல....

மதியானம் நல்ல சூப்பரா ஒரு லஞ்ச்;

லஞ்ச் முடிச்சிட்டு ஒரு சினிமா;

சினிமா முடிச்சுட்டு அப்பிடியே ஒரு நகர்வலம்;

நகர்வலம் முடிச்சுட்டு நாகலெட்சுமி டீ ஸ்டால்ல இருந்து ஒரு பால் ஆர்டர்..

ஆர்டர் பண்ண பாலில் ஏற்கெனவே வாங்கி வச்ச விசத்தைக் கலந்து.. ஒரே மூச்சா குடிச்சுட்டா(மறக்காம உள்தாழ்பாள் போட்டுறனும்)... கொஞ்ச நேரத்துல சொர்க்கம்...

பளான் படி,

லஞ்ச் ஆச்சு.... சினிமா பாத்தாச்சு(என்ன படம்னு கேக்காதிங்க?!)... நகர்வலம் வந்துட்டே இருக்கப்பத்தான்.. தம்படிக்கனும் போல இருந்து, அப்டியே ஒரு டீக்கும் சொல்லிட்டு கடையில இருந்த பேப்பர பொரட்டிட்டு இருக்கும் போது ஒரு செய்தி... செய்தி தன் கவனத்தை திருப்பவே முழுக்க படிச்சவனுக்கு ஒரு தெளிவு... டோட்டல் பளானில் ஒரு முக்கிய மாற்றம்... உடனே அந்த கட்டுரையில் கொடுத்திருந்த தொலை பேசி நம்பருக்கு ஒரு போன் போட்டு முதல்ல வாழ்த்துக்களும், தொடர்ந்து தான் தற்கொலை செய்ய இருந்ததாகவும், இப்போ அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றிக் கொண்டதையும் நெகிழ்ச்சியாக சொல்லி முடித்தான். அதற்குக் காரணம் அந்த கட்டுரைத் தந்த பாடம் தான். அதற்கு தனி நன்றி கூறி முடித்தான்.

ஒரு பெரு மூச்சோடு மீண்டும் ஆனால், நம்பிக்கையோடு வேலை தேடும் முஸ்தீபில் இரங்கி விட்டான் மலைச் சாமி...


****************

சென்ற வாரம் சனிக்கிழமை (19/08/2006) ஈரோடு அருகே உள்ள அறச்சலூர் என்ற கிராமத்திலுள்ள ஊராட்சி பள்ளி ஒன்றில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

நிகழ்ச்சி குறித்து சில...

நிகழ்ச்சியை நின்னை இலக்கிய மின்னிதழும், ஈரோட்டில் இயங்கி வரும் மனிதர்கள் மட்டும் இலக்கிய வட்டமும் சேர்ந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

சிறப்பம்சம் : 1

ஈரோடை சுற்றியுள்ள 13 வயதிற்கு குறைவான பள்ளி மாணவர்களுக்கான ஓவிய போட்டி நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் (கிட்டதட்ட 1000க்கும் மேற்பட்ட பள்ளி சிறார்கள்) வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு, அனைவருக்கும் பரிசாக புத்தகங்கள் வழங்கப்பட்டது..

சிறப்பம்சம் : 2

வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த சோதனைகளைத் தாண்டி; போராடி சாதனையாளர்களாக சாமான்யமாய் வாழ்ந்து வரும் ஐந்து பேரைத் தேர்வு செய்து அவர்களது சாதனைகளை ஊக்கிவத்து, மற்றவர்களுக்கு அவர்களை முன்னுதாரணமாக காட்டும் வகையில் நெம்புகோல் விருது என்னும் பெயரில் பட்டமளித்து கௌரவம் செய்தனர்.


சிறப்பம்சம் : 4

நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக குழந்தைகளுக்கான நாடகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும், சிறந்த நாடகக்காரருமான வேலு. சரவணன் இயக்கத்தில் பலமுறை அரங்கேறிய கடல் பூதம் என்னும் நாடகம் மாணர்வகளின் பங்களிப்புடன் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. மாணவர்கள் மட்டுமன்றி பார்வையாளர்கள் அனைவரும் தங்களின் வயதை மறந்து நாடக அனுபத்திற்குள் கட்டுண்டு கிடந்தனர். நாடகம் நிகழ்த்தப்ப்பட்ட அரை மணி நேரத்திற்கு அரங்கமே குழந்தைகளின் உலகமாகமாய் மாறிப்போனது கண்முன் நிகழ்ந்த கண்கட்டு வித்தை போல் இருந்தது.

சிறப்பம்சம் : 5

நிகழ்ச்சியின் மிக முக்கிய அம்சமாக சிறப்பு விருந்தினராக ஓவியர் ஜனார்த்தனன் அழைக்கப்பட்டிருந்தார். தனக்கு நேர்ந்த சோதனைகள் அனைத்தையும் தாங்கி, அவற்றைத் தாண்டி சிறந்த ஓவியராக வளர்ந்திருக்கும் அவர் சாதனைகள் பார்வையாளர்கள் அனைவருக்கும் நல்ல பாடமாக இருந்தது.


****************

சிறப்பம்சம் 3ல் குறிப்பிட்டபடி தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் ஒருவர் திருநங்கைத் தொழியான ரேவதி (இவர் குறித்த ஒரு குறிப்பினை முன்பே கூறியுள்ளேன்)யும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், உடல் நிலை சரியில்லாத தன் தாயாரை விட்டு வெளியே வரமுடியாத சூழலில் அவர் இருந்ததால், அவர் சார்பாக அவ்விருதினை பெறும் வாய்ப்பினை நண்பரும், கவிஞரும், தற்போதுர நின்னை மின்னிதழின் ஆசிரியருமான திரு. சிவ்ராஜ் எனக்கு அளித்தார். அந்த சாக்கில் நிகழ்ச்சிக்கு போய் வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.


நிகழ்ச்சி நடைபெற இருக்கும் முந்தைய இரவு தங்குவதற்கு ஈரோடு ஜங்சனில் பயணியர் விடுதியில் அறை ஏற்பாடாகியிருந்தது. அடுத்த நாள் காலையில் ஈரோடிலிருந்து விழா நடக்கும் பள்ளிக்கு அழைத்து வர கார் ஏற்பாடாகியிருந்த போதுதான், அடுத்த அறையில் தான் விழாவின் சிறப்பு விருந்தினர் திரு. ஜனார்த்தனன் தங்கியிருப்பது எனக்கு தெரியவந்தது. கார் வரும் வரை சிறப்பு விருந்தினரிடம் கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாமென அவர் அறைக்குச் சென்றேன்..

ஒரு நிமிடம் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.. ஆமாம், சிறப்பு விருந்தினராக நான் எதிர்பார்த்த ஜனார்த்தனன் வெறும் பதிமூன்று வயது சிறுவன். ஆனால், அதிர்ந்து போனதற்கு காரணம் அவர் வயதல்ல. இரண்டு கைகளும், ஒரு காலும் அற்ற அவரது உடல்.
எட்டு வயதில் ஏற்பட்ட மின் - விபத்தொன்றில் தன் ஆரோக்கியமான கைகளையும், ஒரு காலையும் இழந்த அந்த சிறுவன்.(அந்த நிமிடங்களில் ஏற்பட்டிருக்கக் கூடிய வலி.. ஏற்கனவே அதனை அனுபவத்தவள் என்ற முறையில், நினைத்துப் பார்க்கவே நடுக்கமாய் இருக்கிறது). தனது வேதனைகளை பெற்றோரின் அன்பினாலும், மற்ற நல்லோரின் உறுதுணையினாலும் தாங்கிக் கொண்டு வாயால் அழகிய ஓவியம் கற்கத் துவங்கி இன்று ஜெர்மனியில் உள்ள அகில உலக MOUTH AND FOOT PAINTERS ASSOCIATION ன் உறுப்பினராக பரிந்துறை செய்யப்படும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.

இவரைப் பற்றிய தகவல்களுக்காக அழகி என்ற இணைய தளத்தில் தனிப் பக்கத்தையே திரு.விஸ்வநாதன் ஒதுக்கியுள்ளார் (இவரைக் குறித்தும் தனிப் பதிவு ஒன்றிட வேண்டும்). இப்போதைக்கு இதைப் பாருங்கள். இவரை சந்தித்தது உரையாடிய அனுபவத்தை அடுத்த ஒரு பதிவில் தருகிறேன்.

பி. கு. முதற் பகுதியில் மலைச்சாமி தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொள்ளக் கொண்டது மேற்படி ஜனார்த்தனன் குறித்த கட்டுரையை படித்த பின்புதான். ஜனார்த்தனனின் தந்தை திரு. கேசவன் அவர்கள் சொன்னது.

8 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

G.Ragavan said...

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலில் தோணி போலே
ஆசை இருந்தால் நீ வா!

அவ்வளவுதாங்க. கவியரசர் தெளிவாச் சொல்லி வெச்சிருக்காரு.

Anitha Pavankumar said...

Really Inspiring

வினையூக்கி said...

I have met this Janarthanan twice in my life.
As G.Raghavan Said,
வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்

ariyavan said...

தன்னம்பிக்கையூட்டும் இந்த பதிவு அழகு, அவருடனான உங்கள் சந்திப்பு குறித்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

துளசி கோபால் said...

ரொம்பத் தன்னம்பிக்கை ஊட்டும் பதிவு வித்யா.
ஜனார்த்தனன் நல்லா இருக்கட்டும்.

லிவிங் ஸ்மைல் said...

அழகி இணைய தளத்தின் நிறுவனர் பெயர் தவறுதலாக, இளங்கோவன் என்று டைப் செய்து விட்டேன்..

விஸ்வநாதன் என்பதே சரியான பெயர்..

இந்த சிறிய தவறை மன்னிக்க வேண்டுகிறேன். சரியான நேரத்தில் பிழைத் திருத்திய அண்ணன் விஸ்வநாதனுக்கு எனது நன்றியும்.

செல்வநாயகி said...

ஈரோட்டிலிருந்து இயங்கும் இந்த நல்ல அமைப்புக்களை ஈரோடு மாவட்டத்துக்காரியாக இருந்தும் இன்று உங்கள் மூலமாகவே அறிந்துகொண்டிருக்கிறேன். நன்றி வித்யா இப்பதிவுக்கு. மகிழ்ச்சியாக இருக்கிறது படிக்க.

பி.கு

அரச்சலூர் உங்களுக்குக் கிராமமாத் தெரியுதா? கண்டனம், கண்டனம்:)) அதை ஒரு சிறு நகரம் என்றல்லவா நாங்கள் அழைத்துக்கொண்டிருக்கிறோம்? ஆனால் கிராமம் போல அழகிய இயற்கைச் சூழல் கொண்டது.

லிவிங் ஸ்மைல் said...

// வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக்கடலில் தோணி போலே
ஆசை இருந்தால் நீ வா! //

:-)


// ஜனார்த்தனன் நல்லா இருக்கட்டும்.//

நிச்சயமாக

//அரச்சலூர் உங்களுக்குக் கிராமமாத் தெரியுதா? கண்டனம், கண்டனம்:)) அதை ஒரு சிறு நகரம் என்றல்லவா நாங்கள் அழைத்துக் கொண்டிருக்கிறோம்?//

:-(

// ஆனால் கிராமம் போல அழகிய இயற்கைச் சூழல் கொண்டது. //

:-)))

பின்னூட்டமிட்ட ராகவன், அனிதா பவன்குமார், வினையூக்கி, அரியவன், துளசி கோபால், செல்வநாயகி அனைவருக்கும் நன்றி..