சாதனை நங்கைகள், இன்னும் இன்னும்

திருநங்கைகளில் (அரவாணிகள்) சிலர் பலப்பல சாதனைகளை சப்தமின்றி செய்த வண்ணம் உள்ளனர். எனக்கு தெரிந்த சிலர் உங்கள் முன்... சுருக்கமாக.... ஏனெனில், பல செய்திகளை என்னால் சரியான புள்ளி விவரமாக பெற இயலவில்லை.. இப்பதிவிற்கு பிறகு தகவல் ஏதேனும் கிடைத்தால் அதையும் இணைத்துக் கொள்ளும் எண்ணத்துடனே இப்போதைக்கு இதை எழுதுகிறேன்.. எனவே, உங்களுக்கும் யாரைப்பற்றியாவது, எதாவது சிறப்பு செய்திகள் தெரிந்தால் எனக்கு தெரிவிக்கலாம்.


ஆஷா பாரதி : பல வருடங்களுக்கு முன்பு (எப்பன்னு தெரியலை)கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் முதல்முறையாக, முழுக்க முழுக்க திருநங்கைகளுக்கென, அவர்களின் உரிமைகளுக்கென போராடக்கூடிய THAA என்ற NGO ஒன்றினை துவக்கினார்.. இதன் மூலம் பல படித்த மற்றும் படிக்காத திருநங்கைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு அளித்ததோடு அவர்களின் மூலமாக பிற திருநங்கைகளுக்கும் நடத்தையியல் மாற்றமும்(Behaviour Change) அளித்து வருகிறார்...

இந்த சமூகத்தில் எங்களாலும் மற்றவர்களைப் போலவே கெளரவத்தோடு வாழமுடியும் என்பதை வாழ்ந்தும் வாழ்வித்தும் நிரூபித்து வருகிறார்..

திருநங்கைகளில் HIV கிருமியால் பாதிக்கப்பட்ட, AIDS-உடன் வாழ்ந்து வரும் மக்களுக்கு அன்பும், ஆதரவும் அளித்து அவர்களை தன்னம்பிக்கையுடன் வாழ வழிவகுத்து வருகிறார். மேலும், அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளையும் தமது தொண்டு நிறுவனத்தின் மூலம் செய்து வருகிறார்...

தவிர்க்கவியலாமல், பாலியல் தொழில் புரிந்து வரும் திருநங்கைகளிடையே STD, AIDS போன்ற பால்வினை நோய்களின் ஆபத்து குறித்தும், அவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் குறித்த சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்...


ப்ரியா பாபு : தன்னைப் போன்ற 15 திருநங்கைகளை சேர்த்து Sudar Foundation என்ற சுய உதவி குழுவொன்றினை நிறுவி அதன் மூலம் மேற்படி திருநங்கைகளுக்கு காஞ்சிபுரத்தில் சொந்த நிலம் பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும், தனது சுயஉதவிக் குழுவின் மூலமாகவே அவர்களுக்கு வீடுகட்ட மானியத்துடன் கூடிய கடனுதவியும் பெற்றுத் தந்து.. (ஆம் மக்களே இன்று மேய்யாகவே அத்திருநங்கைகள் தங்கள் சொந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்..) இந்நூற்றாண்டின் முக்கியமான சாதனையை பல கடினமான சோதனைகளுக்கும் மத்தியில் சட்டத்துடன் போராடி பெற்றுத் தந்துள்ளார்...சட்டத்துடன் போராடி என்னும் போது அவரின் மற்றுமொரு முக்கிய சாதனையொன்றினையும் கூறியாக வேண்டும்.. திருநங்கைகள் தங்களின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் வகையில் வாக்காளர் அடையாள அட்டை, ரேசன் கார்டு போன்றவற்றையும் இந்திய அரசியல் சாசனத்துடன் போரிட்டு பெற்றுத் தந்துள்ளார்.


மட்டுமன்றி, திருநங்கைகளின் உள்ளத்தில் உள்ள கலையாளுமையை வெளிக்கொணரும்படிக்கு, கண்ணாடி கலைக் குழு என்ற கலைக் குழுவினை தமிழகத்தின் முக்கிய பெண்ணிய படைப்பாளியான அ.மங்கையுடன் இணைந்து உறையாத நினைவுகள், மனதின் அழைப்பு என்னும் இரண்டு சிறப்பான நாடகங்களை சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், பல கல்லூரிகளிலும் இப்போதும் அரங்கேற்றி வருகிறார். இது கலையார்வமுள்ள திருநங்கைகளுக்கு நல்லதொரு வாய்ப்பாக உள்ளதோடு காலங்காலமாக திருநங்கைளின் மீது உமிழப்பட்டு வந்த ஆபாச படிமத்தையும் உடைத்தெறிந்துள்ளது.

கொசுறு :
ப்ரியா பாபு ஆகஸ்ட் 15 கொடியேற்ற நான் வசிக்கும் TTSக்கு வருகிறார்.

ரேவதி : பெங்களூரில் உள்ள SANGAMA என்ற NGO வில் கடந்த ஆறு வருடங்களாக Sexual Minorities(Trans women, Homo sexualities, Lesbians, Bi-sexualities)களிடையே அவர்களின் உரிமைக்காவும், பாலியல் சுதந்திரத்திற்காகவும் பணியாற்றியவர்.. சட்ட ரீதியாக போராடி தனக்கான சொத்துரிமையைப் பெற்றவர்...தற்போது உடல் நலமில்லாத தன் தாயாரை உடனிருந்து கவனித்து வரும் இவர், சமீபத்தில் பல திருநங்கைகளின் வாழ்க்கையை நேரடியாக பதிவு செய்து, பொது தளத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளூம் வகையில் உணர்வும் உருவமும் என்ற பெயரில் திருநங்கைகளின் வாழ்வு குறித்த சிறந்த பதிவாக புத்தகம் ஒன்றினை எழுதியுள்ளார். (வெளியிட்ட அடையாளம் பதிப்பகத்தாருக்கு நன்றி... )

நர்த்தகி நடராஜ் :


திருநங்கைகளிலேயே தனித்தவொரு அடையாளமாக இருப்பர் நர்த்தகி நடராஜ். இந்தியாவிற்கும், பரதக்கலைக்கும் பெருமை சேர்த்து வரும் இவர் தனது தனித்திறமையினால் பரிசுகள் பல பெற்றவர். மேலும், பல அயல்நாடுகளிலும் சென்று பரதக்கலையின் அருமையையும், இந்தியக் கலையின் பாரம்பரியத்தையும் புகழ் பரப்பி வருகிறார்...


இந்தியாவில் திருநங்கைகளிலிலேயே முதன்முறையாக பாஸ்போர்ட் பெற்றவர் என்ற பெருமையும் இவரையே சேரும். திருநங்கை என்ற பதத்தை இலக்கியத்திலிருந்து அறிந்து, அவை பொது தளத்தில் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்ற முதலில் கூறியவரும் இவரே.

கல்கி : எனக்கு தெரிந்து இந்தியாவில், தமிழ்நாட்டில் முதன்முறையாக, தனக்கென, சொந்தமாக வலைப்பக்கம் ஏற்படுத்திய திருநங்கையாக கல்கியை அறிகிறேன். மேலதிக தகவலுக்கு இங்கே கிளிக்கவும்.. ஏனென்றால், எனக்கு கல்கி குறித்து தெரிந்தவை எல்லாம் இப்பக்கங்களில் இருப்பது மட்டுமே... நீங்களும் ஒருமுறை சென்று பாருங்கள்.., ஆதரவு தெரிவியுங்கள்...

மேலும், முக்கியமான நபர்களாக ஸப்னா முதன்முறையாக M.Phil படிப்பதற்கு அனுமதி பெற்ற திருநங்கை தற்போது ஒரு NGO வில் பணிபுரிந்து வருகிறார். ப்ரியங்கா என்று கரூரில் வசிக்கும் திருநங்கையொருவர் IAS பரிச்சைக்கு முயற்சி செய்வதாக கேள்விபட்டேன், உண்மையாக இருந்தால் சந்தோசம் தானே..

இன்னும் இன்னும் இளைய சமுதாயத்திடமிருந்து பல நல்ல உதாரணங்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்போம்.. தோழமையோடு அவர்களுக்கு நம் ஆதரவையும் தருவோம்.

15 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

துளசி கோபால் said...

லி.ஸ்.வித்யா,

ரொம்ப நாளைக்கு முன்னே ஒருத்தர் கல்யாணம் செஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னும் படிச்சேன்.
அவுங்க பிரியா பாபு தானோன்னு ஒரு சந்தேகம்.

நர்த்தகி நடராஜ் அவர்களைப் பற்றியும் முன்பே படிச்சிருக்கேன்.

தகவல்களுக்கு நன்றி.

மனதின் ஓசை said...

போற்றப்பட வேண்டியவர்கள்.. அனைவருக்கும் என் மரியாதை கலந்த வாழ்த்துக்கள்.

செந்தழல் ரவி said...

ஏங்க நீங்க செய்யறாது உங்களுக்கே ஓவரா தெரியல்லியா....

லிவிங் ஸ்மைல் said...

// ஏங்க நீங்க செய்யறாது உங்களுக்கே ஓவரா தெரியல்லியா.... // செந்தழல் ரவி...

சத்யமா ஓவரா தெரியலை.. நான் என்ன ஓவரா செஞ்சேன்னும், எதுக்கு இப்பிடி சொல்றீங்கன்னும்....

G.Ragavan said...

செந்தழல் ரவி, நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதைத் தெளிவாக நேரடியாகச் சொன்னால் நன்றாக இருக்கும்.

சமூகத்தில் சாதி பார்த்து யாரும் ஒதுக்கப்படக் கூடாது என்று மட்டும் சொல்லிக் கொண்டு பாலால் ஒதுக்கப்பட்டு இருக்கிறவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் சிறப்பா?

திருநங்கைகளும் சமூகத்தின் ஒரு அங்கம். அவர்கள் ரயில் பெட்டிகளையும் தெருவோரங்களையும் விட்டு சமூகத்தில் ஒருத்தராகி நல்ல வாழ்க்கை வாழ நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட மதத்தவரோ நாட்டவரோ தங்கள் மதத்தவரும் நாட்டவரும் செய்த சாதனைகளைச் சொன்னால்....அது சரி. ஆனால் இது தவறா?

செந்தழல் ரவி said...

உங்களுக்கு உண்மையிலேயே புரியல்லியா நான் என்ன சொல்ல வர்ரேன்னு..

paarvai said...

வாழும் புன்னகை வித்யா!
நர்த்தகி நடராஜ் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்.ஏனையோர் பற்றிக் கேள்விப்பட சந்தோசமாக உள்ளது. நிச்சயம் எதிர்காலத்தில் பலர் வருவார்கள்; குடும்பத்தவரும்;சமுதாயமும் இவர்கள் அனைவரையும் ஏற்றிப் போற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை.
அடுத்து ரவி!
உங்கள் பின்னூட்டம் தெளிவில்லை. என்ன?? சொல்ல வருகிறீர்கள். தெளிவுபடுத்தவும்.
யோகன் பாரிஸ்

ariyavan said...

Fighting against majority is not such a easything.what these peoples acheived is great. Iam with u vidhya.

திரு said...

தோழீ,

சமூக அடையாளங்களை, உரிமைகளை மறுக்கப்பட்ட திருநங்கைகளுக்காக போராடுகிற, வழிகாட்டுதலை ஏற்படுத்துகிற இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

திருநங்கைகளை கடவுளின் வடிவம் என சொல்கிற மதத்தை பின்பற்றும் இந்தியர்கள் திருநங்கைகளுக்கான உரிமைகளை, உணர்வுகளை மதித்து நடக்காமல் போனது வேதனையான முரண்பாடு. கல்வி, வேலை, அடிப்படை உரிமைகளில் திருநங்கைகளுக்கு பிற பாலினரை போல சம வாய்ப்புகளிம் உரிமைகளும் வழங்கப்படல் வேண்டும் என்ற குரலில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.

ஜனவரி 2004ல் மும்பையில் நடந்த World Social Forum நிகழ்வுகளின் போது பல திருநங்கைகளுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பலர் சமூக உரிமைகளுக்கான அமைப்புகளில் பங்காற்றுவதை எண்ணி பூரிப்படைந்தேன். தொடரட்டும் இந்த பணிகள். இவை அவசிய, அவசர தேவை.

tamilmagani said...

ரொம்ப சந்தோஷமா இருக்கு வித்யா! உண்மையில் இன்றைய திருநங்கையர்கள் புதுபொலிவுடன் திகழ்கிறார்கள். அவர்களும் மென்மேலும் வளர்வதைப் பார்த்து எனக்கு நிஜமாகவே ஆனந்தமாக இருக்கிறது. முன்னேற துடிக்கும் அனைவருக்கும் என் பிராத்தனைகள், வாழ்த்துகள்!

tamilmagani said...

அப்பரம்..இந்த செந்தழல் ரவி என்னதான் சொல்ல வராரு? தெளிவா பேசமாட்டீங்களா ரவி??

சந்தோஷ் aka Santhosh said...

//ஏங்க நீங்க செய்யறாது உங்களுக்கே ஓவரா தெரியல்லியா.... //

ரவி இது லி.ஸ்.வித்யாவின் வலைத்தளம் அவர்களது உரிமை அவர்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் முடுந்தால் படியுங்கள் முடியாவிட்டால் ******* உங்களை யாரும் அழைக்கவில்லை வந்து படித்து பின்னூட்டம் இட. ஒரு ஒடுக்கப்பட்ட சமுகத்தில் இருந்து வந்து எழுதுகிறார்கள் வாழ்த்தி வரவேற்கா விட்டாலும் சும்மா வீண் விளம்பரத்திற்காக இப்படி எதையாவது பின்னூட்டம் என்ற பெயரில் உளரிக்கொட்ட வேண்டாம்.

செந்தில் குமரன் said...

இந்த லிஸ்டில் உங்க பெயரை எப்போ எதிர் பார்க்கலாம்? ;-)

Dharumi said...

A light - a very bright one - at the end of the tunnel.
keep going.
all the best.

லிவிங் ஸ்மைல் said...

// ஜனவரி 2004ல் மும்பையில் நடந்த World Social Forum நிகழ்வுகளின் போது பல திருநங்கைகளுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களில் பலர் சமூக உரிமைகளுக்கான அமைப்புகளில் பங்காற்றுவதை எண்ணி பூரிப்படைந்தேன். தொடரட்டும் இந்த பணிகள். இவை அவசிய, அவசர தேவை. // ..... திரு

//இன்றைய திருநங்கையர்கள் புதுபொலிவுடன் திகழ்கிறார்கள். அவர்களும் மென்மேலும் வளர்வதைப் பார்த்து எனக்கு நிஜமாகவே ஆனந்தமாக இருக்கிறது. முன்னேற துடிக்கும் அனைவருக்கும் என் பிராத்தனைகள், வாழ்த்துகள்! //....தமிழ்மாங்கனி


பின்னூட்டமிட்ட நண்பர்கள்
துளசி கோபால், மனதின் ஓசை, ராகவன், பார்வை, அரியவன், திரு, தமிழ்மாங்கனி, சந்தோஷ், குமரன், தருமி அனைவருக்கும் நன்றிகள்.