திருநங்கைகளின் நலனில் அரசும்; நன்றியும்; மேலும் சில கோரிக்கைகளும்

சமீபத்தில் நக்கீரனில் வந்த கட்டுரையொன்றில் திருநங்கைகளுக்கு பால்மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அரசாணை வெளியாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கூடுதலாக அவ்வாணையின்படி, வேலூரிலுள்ள சில திருநங்கைகள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை அணுகியுள்ளனர். ஆனால், மருத்துவர்கள் இதனை மறுத்துள்ளனர். அதற்குக் காரணமாக, அரசு மருத்துவமணைகள் சுகாதரத் துறையின் கீழ் வருகின்னறன. மேற்படி அரசாணையோ சமூக நலத்துறையிடமிருந்து வந்துள்ளது என்று கூறி கை விரித்துவிட்டனர். இது அக்கட்டுரையிலிருந்து நமக்கு கிடைக்கும் தகவல்.


இதனைத் தொடர்ந்து தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 12-03-2007 வந்த செய்தி குறிப்பில் திருநங்கைகளுக்கு எல்லாத் துறையிலும் சம உரிமை அளிக்க கோரி அரசாணை வெளியாகியுள்ளதாக தகவல்கள் உள்ளது. குறிப்பாக, பால் மாற்று சிகிச்சைக் குறித்து தீவிர பரிசீலனை நடந்து வருவதாக இதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருநங்கைகளின் விடுதலைக்கான முதல் வித்தாக இதனைக் காண்கிறோம். இத்தகையதொரு சீரிய முயற்சியை தமிழ் சூழலில் ஏற்படுத்தியதற்காக தமிழக அரசை நிச்சியம் பாராட்டியே தீரவேண்டும். இந்த முதல் முயற்சி முழுமையாக பரவலாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளோடு திருநங்கைகளுக்கான நலத்திட்டத்தில் எவை எவை இடம்பெற வேண்டும் என்பது குறித்து எனது பார்வையை இங்கே தருகிறேன்.


முதலில் அரசு முன்வந்துள்ள பால் மாற்று சிகிச்சை குறித்து சற்று அறிவோம்.


பால்மாற்று அறுவை சிகிச்சை என்பது மனரீதியாக மட்டுமே பெண்ணாக உணர்பவர்கள் (திருநங்கைகள்) உடல்ரீதியாகவும் முழுப் பெண்ணாவதற்கு மேற்கொள்ளும் அறுவை சிகிச்சை. இந்த அறுவைச் சிகிச்சை இரண்டு வழியாக நடைபெறுகிறது.

மரபுரீதியாக நடைபெறும் பாலின மாற்று தாயம்மா முறை ஆகும். தாயம்மா என்பவர் பூஜை புலஸ்காரங்களில் ஈடுபாடும், தெய்வபக்தியும் உள்ள மூத்த திருநங்கையாவார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இரவில் பால்மாற்றுக்கு முன்வரும் திருநங்கையின் கைகால்கள் மற்ற திருநங்கைகளால் இறுக கட்டப்படும். புதிதாக கொண்டுவரப்பட்ட ஆக்ஸா பிளேடு ஒன்றால் தாயம்மா திருநங்கையின் உறுப்பை அறுத்து விடுவார். உடனே வாயில் அதிக அளவில் சுக்கு, மிளகு வைத்து அடைத்து விடுவார்கள். கண்கள் சொருகி மயக்கம் வரும் போது கண்ணத்தல் பளார் பளார் என அறைந்து மயங்க விடாமல் தடுப்பார்கள். சற்று நேரம் கழித்து ஒரு அறையில் தனியே அவ்விரவு முழுவதும் அப்படியே விட்டு விடுவார்கள். மறுநாள் காலையில் உயிரோடு இருந்தால், திருநங்கை. இல்லாவிட்டால் பிணம்.இம்முறையில் எந்த மயக்கமருந்தும், முறையான மருத்துவ கருவியும் பயன்படுத்தப்படுவதில்லை. உறுப்பு நீக்கப்பட்ட பின் ஏற்படும் காயத்தை ஆற்றுவதற்கு கொதிக்கப்பட்ட நீர் மற்றும் சூடனா எண்ணைய் மட்டுமே பயன்படுத்தப்படும். நாற்பது நாட்கள் களித்து உடல் தேறிய நிலையில் முழுப் பெண்ணாக மற்ற திருநங்கைகளால் நிர்வாணம் (பால் மாற்று) செய்து கொண்ட திருநங்கையாக அழைக்கப்படுகிறார்.


இம்முறையில் அதீத உதிரபோக்கினாலும், ஜன்னி கண்டும் உயிருக்கு உத்திரவாதமற்ற நிலையுள்ளது. உயிர்; பிழைத்துக் கொண்டாலும் தொடர்ந்து பல சுகாதார சிக்கல் ஏற்படக்கூடிய வாய்ப்பு இம்முறையில் அதிகம் உள்ளது.

இதற்கு மாற்றாக கடந்த 15 வருடங்களாக செல்வாக்கு பெற்று வரும் மற்றொரு பால்மாற்று முறை டாக்டர் கை எனப்படும் மருத்துவரால் செய்யப்படும் பால்மாற்று முறையாகும். இம்முறையில் சிகிக்சையை செய்யும் மருத்துவர்கள் நல்ல திறமையான ஆனால், பால்மாற்று சிகிச்சை செய்வதற்கான அரசு அங்கீகாரமற்றவராக இருக்கிறார்கள். இவ்வாறு அங்கீகாரமற்று சிகிச்சை மேற்கொள்வதால், மருத்துவ வசதியும் முறையாக இருப்பதில்லை.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்த அடுத்த 20 நிமிடங்களில் அறுவை சிகிச்சைக்கான அழைப்பு வந்துவிடுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன், எய்ட்ஸ் தொற்று உள்ளதா என்பதை அறிவதற்கான இரத்த பரிசோதனை மட்டுமே மேற்கொள்ளப்டுகிறது. அவ்வாறு எய்ட்ஸ் தொற்று இருப்பின் கூடுதலாக சில ஆயிரங்கள் வசூலிப்பதற்காகவே இப்பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. மற்றபடி, வேறு எந்த உடற்தகுதி (Phலளiஉயட குவைநௌள) சோதனைகளும் மேற்கொள்வதில்லை.


சிகிச்சையில் லோக்கல் அனஸ்தீசியா மூலம்; அரைமணி நேரத்திற்கு இடுப்பிற்கு கீழ் மறுத்துப் போகச் செய்கின்றனர். பின்னர், ஆணுறுப்பு நீக்கப்பட்டு, சிறுநீர் பாதையை மட்டும் கால் இன்ச் வெளியே வைத்து சுற்றிலும் தையல் போட்டு விடுவார்கள். கற்பனை செய்ய முடியாதபடி உயிர் பிரிந்து செல்லும் அசுர வலியை அடுத்த அரைமணிநேரத்தில் எதிர் கொள்ள நேர்கிறது. முதல் மூன்று நாட்கள் மட்டுமே மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இம்முறையில் ஆறுதலாக இருப்பது சிகிச்சையின் போது மறுத்துப் போவதும், கொதிக்கும் எண்ணெய் வைத்தியம் இல்லை என்பது மட்டுமே. ஆனால், கொதிக்கும் நீர் கண்டிப்பாக உண்டு.

ஆக, தாயம்மாவிற்கு மாற்றாக வந்திருந்தாலும் டாக்டர் கையிலும் முறையான பராமரிப்பு சிகிச்சையும், பராமரிப்பும் இருப்பதில்லை. விழிப்புணர்வின்மையும், அரசின் தடையுமே இதற்கான முழு காரணமாக இதுநாள் வரை இருந்தது.


தொடர்ந்து இச்சிகிச்சைக்கு அரசு அங்கீகாரம் கோரி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கோரிக்கை வலியுறுத்தி வருகிறது. இதில் எனது பங்காக, கடந்த டிசம்பர்-2006ல் எனது பெயரையும், பாலினத்தையும் மாற்றித்தரக் கோரி உரிய துறையிடம் விண்ணப்பத்திருந்தேன். ஆனால், எனது அறுவை சிகிச்சை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரால் மேற்கொள்ளப்படவில்லை என்ற காரணத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வந்தது.

அரசின் அங்கீகாரமே இல்லாத நிலையில் அங்கீகாரம் பெற்ற மருத்துவருக்கு எங்கே செல்வது? எனவே, இதனை விசாரித்து தக்க தீர்வு அளிக்கக் கோரி பொது நல வழக்கு ஒன்றினை மதுரை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தேன். அதற்கு தற்போது விடை வந்துள்ளது. உயர்நீதி மன்ற தீர்ப்பில் சம்மந்தப்பட்ட துறை எனது கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி (ஆனால், இன்ன, இன்ன கோரிக்கைகள் என்பதை தெளிவாக இல்லாமல்) தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பின் படி நான் லிவிங் ஸ்மைல் என்று எனது பெயரை மட்டுமே மாற்றிக் கொள்ளலாம். ஆனால், பாலினத்தை மாற்ற முடியாது.


என் கோரிக்கையோ பெயர் மாற்றம் பெறுவதோடு, பாலினத்தையும் மாறிய பாலினம் - பெண் (Transgender – Female) என்று மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான். பெயர் மாற்றத்திற்கென்று அரசின் சில வழி முறைகள் நடைமுறையில் உண்டு. ஆனால், பாலின மாற்றம் குறித்த முறையான விண்ணப்பப்படிவமோ, முறையான அரசாணையோ இன்றுவரை இல்லை. அதனால், எனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினால் எந்தவித பயனும் இல்லை.


இந்த நிலையில் தான், முதலிரண்டு பத்தியில் குறிப்பிட்டபடி கூறப்படும் அரசாணையை வரவேற்கிறோம். அரசாணை தற்போது எனது கைவசம் இல்லாததால் கிடைத்துள்ள தகவல்களைக் கொண்டு பார்க்கையில், இவ்வரசாணையில் இன்னும் சில விசயங்களை சேர்க்க வேண்டியுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது.


மேற்சொல்லப்பட்டுள்ள பால்மாற்று சிகிச்சை தொடர்பான அரசாணையில், பால்மாற்று சிகிச்சை மேற்கொள்ளும் நபருக்கு முறையான ஆலோசனை (Counsiling) வழங்கப்பட வேண்டும் என்று கருத்து மட்டுமே வலியுறுத்தப்படுகிறது. ஆனால், இதனோடு சம்பந்தபட்ட நபரின் குடும்பத்தாருக்கும் முறையான மருத்துவ ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அதாவது, அவர்களுடைய பிள்ளைக்கு உள்ள பிரச்சனை என்ன..? ஏன் இப்படி உள்ளது..? என்ற சரியான புரிதலை ஏற்படுத்தி, இத்தகைய குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும். அல்லது அவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக இது தனிப்பட்ட நபரின் விருப்பமோ, தவறோ கிடையாது. இது இயற்கையானது என்பதை புரியும் வகை செய்ய வேண்டும். குடும்பம் இவர்களை ஒதுக்குவதால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளை எடுத்துக் கூறி,சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில், குடும்பம் திருநங்கையை ஏற்றுக் கொண்டாலே அவர்களுக்குள்ள பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்.ஆக, அவ்வாறு அந்நபருக்கும், குடும்பத்திற்கும் ஆலோசனை வழங்கி பின் அறுவை சிகிச்சையும் மேற்கொண்ட பின், அனைத்து சான்றிதழ்களிலும் அவர்களுக்கு மாறிய பாலினம் - பெண் என்ற பாலின அடையாளத்தையும் நிர்ணயித்துத் தரவேண்டும். அதற்கான விதிமுறைகளை தெளிவான செயல்திட்டத்தோடு நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் ஏற்கனவே பால் மாற்று (தாயம்மா/டாக்டர் கை) மேற்கொண்டவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும்.


திருநங்கைகளை ஏற்றுக் கொள்வதினால் குடும்பம் பாதிக்கபடாமல் இருக்க திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வினை அரசு அனைத்து ஊடகங்கள் வழியாகவும் ஏற்படுத்த வேண்டும்.

மரம் வளர்ப்போம். வளம் கொளிப்போம்..

டீசல் சிக்கனம் தேவை இக்கனம்,

பெண்ணுக்கேற்ற திருமண வயது-21
போன்ற பொது விளம்பரங்களைப் போல திருநங்கைகளும் இயல்பான மனிதர்களே என்பதை வலியுறுத்தும் வாசகங்களை தீவிரமாக விளம்பரப்படுத்த வேண்டும்.

தொலைக்காட்சி, நாளிதழ்கள், வானொலி, சுவரொட்டி என அனைத்து ஊடகத்திலும் அரசு இந்த விழிப்புணர்வினை தீவிரப்படுத்த வேண்டும். இவற்றோடு பள்ளிப் பாடங்களில் அறிவியல், சமூகவியல் பாடத்திட்டத்தில் அந்தந்த பார்வையில் திருநங்கைகள் குறித்த நேர்மறையான அறிவை வளர்க்க வேண்டும். கல்லூரிகளில் மனித உரிமை சார்ந்த, பெண்ணியம் சார்ந்த பாடத்திட்டங்களைப் போல திருநங்கைகள் குறித்த தனி பாடத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.


சாதியின் பெயரால் ஒருவருக்கு ஏற்படும் சமூக வன்முறையை தடுக்க வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருப்பதைப் போல, திருநங்கைகளை கேலி செய்பவர்களை சட்டத்தின் முன் குற்றவாளிகளாக்கி தகுந்த தண்டனை வழங்க வேண்டும். மனைவியை வதைக்கும் கணவணையும், முதிய பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளையும் தண்டிக்கும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் போல, திருநங்கைகளை ஏற்றுக் கொள்ளாத குடும்பத்தை அரசு கேள்வி கேட்க வேண்டும். எத்தகைய உடல் குறைபாடு உள்ளவர்களைக் கூட ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலில் இத்தகைய சட்டம் தான் திருநங்கைகளை பாதுகாப்பதோடு, விரும்பத்தகாத தொழிலில் அவர்கள் ஈடுபடுவதையும் தடுக்க முடியும்.இவற்றோடு மிக முக்கியமாக, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் இடஒதுக்கீடு ஏற்படுத்தித் தரவேண்டும். வேலை வாய்ப்பு என்னும் போது உள்ள ஒரு சிக்கலை கவனிக்க வேண்டும். பெரும்பாலான திருநங்கைகள் தங்களது கற்கும் வயதில் வீட்டை, குடும்பத்தை, சமூகத்தை விட்டே ஒதுக்கப்பட்டதால் அவர்களுக்கு கல்வி, தொழிற் பயிற்சி என்பது மிகக் குறைவாகவே இருக்கும். எனவே, அவர்களுக்கேற்ப விழிப்புணர்வும், பயிற்சியும் முறையாக அளித்து தகுதியின் அடிப்படையில் ஒதுக்கீட்டினை பெற்றுத்தர வேண்டும்.


அரசும், குடும்பமும், அதனைத் தொடர்ந்து சமூகமும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இன்னும் சில வருடங்களுக்குள் முழு அளவில் திருநங்கைகள் இச்சமூகத்திற்குள் இயல்பானவர்களாக ஊடட முடியும். அதற்கு உடனடி தேவையாக இருப்பது அரசுக்கும், சமூகத்திற்கும் திருநங்கைகள் குறித்த தெளிவும், விழிப்புணர்வுமே..

13 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

பங்காளி... said...

பதிவை படித்ததும்....பாரமாய் உணர்கிறேன் லிஸ்.அது சக மனிதன் மீதான அக்கறை இல்லாமால் இருந்த குற்ற உணர்ச்சியினால் கூட இருக்கலாம்.

தமிழக அரசின் உத்தரவு நல்ல ஆரம்பமாய் அமையவும், வரும் நாட்களில் உங்களின் நியாயமான கோரிக்க்கைகள் நிறைவேற இந்த சகோதரனின் உளப்பூர்வமான வாழ்த்தும் ஆதரவும் என்றும் உண்டு.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா தெளிவா, ஆழ்ந்து எழுதி இருக்கீங்க ஸ்மைலி.. நியாயமான கோரிக்கைகள்..

ramachandranusha said...

கல்வியும், வேலை வாய்ப்புகள் தரும் அங்கிகாரமுமே நல்ல பயனைத்தரும். அனைத்து ஊடகங்களில்
அசிங்கப்படுத்துவதை முதலில் சட்டப்படி தடை செய்ய வேண்டும். வித்யா, விஜய்காந்தின் கட்சியும்
இதே போல சில திட்டங்களை போட்டு இருப்பதாய் தினமலரில் படித்தேன். நீங்களும் பார்த்தீர்களா?

ஆனந்த சித்தன் said...

வணக்கம்,

தங்களின் பதிவு படித்தேன்.

இதுவரை எல்லாத்தையுமே சந்தோசமாக அனுபவித்த எனக்கு. இப்படியும் கஷ்டபடுகின்ற உங்களை பற்றி யோசித்ததே கிடையாது.

வடநாட்டுக்கு செல்லும் போது, சிலர் அனுபவித்ததாய் சொல்லும் கதைகளை கேட்டு இருக்கிறேன்.

இந்த பதிவு எனக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் அது உண்மை

நண்பன்
ஆனந்தசித்தன்

G.Ragavan said...

பதிவைப் படிக்கையிலேயே பயமாய் இருக்கிறது. ஏனென்றால் உடலின் ஒரு பாகமாகக் கருதப்படும் ஒரு உறுப்பை இழப்பது என்பது....அப்பப்பா! முடியை வெட்டுவதற்கே இவ்வளவு யோசிக்கிறோம். அப்படியிருக்கையில் பிறப்புறுப்பை வெட்டிக்கொள்ள வேண்டுமென்றால்...எந்த அளவிற்கு அது வேண்டாம் என்று தோன்றியிருக்க வேண்டும்.

சமீபத்தில் ஒரு ஆங்கிலப்படம் வந்தது. அதன் விமர்சனத்தைக் கூட வலைப்பூவில் யாரோ எழுதியிருந்தார்கள். அந்தப்படம் இந்தியாவில் வந்ததா என்று தெரியவில்லை. அதில் ஒருவர் இந்த அறுவை சிகிச்சை செய்ய விரும்புவார். ஆனால் அமெரிக்காவில் அதற்கு ஏதோ கட்டுப்பாடுகள் இருக்கிறதாம். அதை வைத்து ஏதோ கதை. அங்கே வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கட்டுப்பாடும் இருக்கிறது. இங்கு கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் முறையான வாய்ப்பு இல்லை. ஒரு அரசாங்கம் மக்களை எப்படி அணுகுகிறது என்பதற்கு எவ்வளவு வித்தியாசம்.

arunagiri said...

முழுமையாக ஒப்புக்கொள்கிறேன். இந்த அரசாணைகள் சரியான திசையைநோக்கி உள்ளன என்பதில் ஐயமில்லை. குடும்ப ஆதரவும் சமூக ஆதரவும் பெருகும் வண்ணம் விழிப்புணர்வு பிரசாரம் அவசியம்தான். குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவதும் சமூகத்தில் ஏளனமாகப் பார்க்கப்படும் நிலையும் மாறினாலே திருநங்கைகளின் நிலை முன்னேற்றம் காணும். அர்ஜூனன் கதையும் சிகண்டியும் உமையொரு பாகனும் இப்படி நம் மண் சார் விழுமியங்கள் எவையும் திருநங்கை அம்சங்களை ஒதுக்கவோ ஏளனப்படுத்தவோ ஒடுக்கவோ இல்லை. நமது பாரத தொல்லியல் மரபில் சமூகத்தின் ஓர் அங்கமாகத்தான் அவர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். இன்றைய அவல நிலை இடையில் வந்த கேடு என்பதை எடுத்துச்சொல்லி அவர்களுக்கு சமூகத்தில் உரிய மரியாதையைப் பெற்றுத் தர வேண்டும்.

நண்பன் said...

Seems to be a good news...

Watch out for the follow-up news...

சிறில் அலெக்ஸ் said...

nice to see you back.

murali said...

அன்பு லிவிங் ஸ்மைல் வித்யா,
தாயம்மா
முறையை படிக்கும்போது உடல் நடுங்கியது.வட நாட்டில் ரயில் பயணத்தில் நிறைய திருநங்கைகளை கண்டிருக்கிறேன். ஆனால் அவர்களின் உணர்வும், வேதனையும் என்றுமே தெரிய வந்ததில்லை.உங்கள் மூலமாகத்தான் அவை அனைத்தும் தெரியப் பெற்றேன்.

உங்கள் குரல் இதே போல ஓங்கி ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

ஒப்பாரி said...

நியாயமான கோரிக்கைகள். நிறைவேற வாழ்த்துக்கள், தொடர்ந்து போரடுங்கள்.

கவிதா|Kavitha said...

நல்ல பதிவு, தெளிவா, நிதானமா எழுதி இருக்கீங்க..

பாராட்டுக்குள், தொடர்ந்து நீங்களே எல்லா மீடியாக்களிலும் அனைவரும் அறியும் படியாக இது போன்ற தொகுப்புகளை வரசெய்யலாம்.

செல்வநாயகி said...

என்ன சொல்வதெனத் தெரியவில்லை வித்யா. இப்போதுதான் உங்களின் கோபமான வார்த்தைகளைக் குறைக்கவேண்டுமெனக் கோரிக்கைவைத்து எழுதப்பட்ட பதிவுகளைப் படித்துமுடித்துவிட்டு இங்குவந்து நிற்கிறேன்.

"நல்ல பதிவு, நிதானமாக எழுதியிருக்கீங்க" என்று சம்பிரதாயமாய் ஒரு பின்னூட்டம்போட்டுவிட்டுப் போய்விடமுடியாமல் ஏதோ ஒன்று அழுத்துகிறது. உடல் அளவிலும், மன அளவிலும் இவ்வளவு வலிகளைத் தாங்கி வாழநேரிடும் உங்களுக்கு எதிராய் ஈவுஇரக்கமின்றி நடந்துகொண்ட, நடந்துகொள்ளும் சமூகத்தின் நாகரீகப் பிரதிகளான நாங்கள் உங்களுக்கு நாகரீகம் கற்பிப்பது நாங்கள் வெட்கப்படவேண்டிய ஒன்று

அன்புத்தோழி said...

வித்யா, உங்கள் பதிவுகளை படித்தப்பின் தான் நீங்கள் படும் கஷ்டம் எனக்கு தெரிகிறது. கடவுள் ஏன் தான் இப்படி பாரபட்சமாக இருக்கிறார்? உங்கள் வேண்டுகோள் அத்தனையும் நியாயமானதுதான். அவை கண்டிப்பாக நிறைவேற வேண்டும். கடவுளை பிராத்தனை செய்கிறேன்.

அன்புத்தோழி