பாலியல் சிறுபான்மையினர் திரைப்பட விழா : நிகழ்வுப் பதிவு

இந்திய சூழலில் குறிப்பாக தமிழ் சூழலில் திருநங்கைகள்(அரவானிகள்) குறித்த போதிய விழிப்புணர்வு மிக மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. பொதுவாக, திருநங்கைகள் தங்களது இளம் வயதில் பெண்தன்மையோடு மென்மையானவர்களாக, பெண்ணுடை தரித்து அலங்கரித்துக் கொள்வதிலும், சிறுமிகளோடு விளையாடுவதில் அணுக்கமாகவும் உணர்கின்றனர். நாட்பட, இத்தகைய குணாதிசயங்களால் உறவினர்கள், அண்டை வீட்டார் மற்றும் நண்பர்கள் அனைவராலும் இவர்கள் கேலிக்கும், வன்முறைக்கும் உள்ளாகின்றனர். குறிப்பாக, எல்லா திருநங்கைகளும் தங்களது 13 வயதிற்குள்ளாக உறவினர், அண்டைவீட்டார், ஆசிரியர் என யாரோ ஒருவரால் பாலியல் வன்முறைக்குள்ளாவதே நிதர்சனம்.

தனது பிரச்சனை இன்னதென்று தனக்கே புரியாத திருநங்கைகள் 17 முதல் 22 வயது வரை குடும்பத்தோடு பல இன்னல்களுடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அதற்குப் பின்னர் தான் யார்? என்னவாக இருக்கிறோம்? என்று தெளிவாக உணரும் கட்டத்தில் திருநங்கைகள் குடும்பத்திலிருந்து வெளியே(ற்)ற நேர்கிறது. குடும்பத்திடமிருந்தும் தொடர்ந்து சமூகத்திடமிருந்து விலகி தன்னைப் போன்ற திருநங்கைகளுடன் சேர்ந்து தனியொரு உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர். பொது சமூகத்திலேயே ஆனால், அவர்களின் கண்களில் தென்படாமல் புரிதலின்மை என்ற பனித்திரையால் மறைக்கப்பட்டே வாழ்ந்து வருகின்றனர். இதனாலேயே இன்றுவரை, திருநங்கைகள் வெகுஜனத்திற்கு புரியாத புதிராகவும், கேலிப் பொருளாகவும் இருந்து வருகின்றனர்.

பெண்ணியம், பெண் விடுதலை, தலித்தியம் குறித்து விவாதிக்கக் கூடிய சமூக ஆர்வலர்கள், இலக்கிய சிந்தனாவாதிகளிடமும் அவர்களைக் குறித்த கரிசனம் உள்ள அளவிற்கு போதிய புரிதல் இன்றி, முயற்சியும் இன்றி மௌனம் சாதிக்கின்றனர்.

குறைந்தபட்சம் திருநங்கைகள் குறித்து மக்கள் அறிய வகை செய்யக்கூடிய செய்தி, காட்சி ஊடகங்களும் அவர்களை கேலிப் பொருளாக, குற்றவாளிகளாக, பாலியல் வெறியர்களாக மட்டுமே சித்திரித்து வருகின்றன. திருநங்கைகளோடு நேரடி தொடர்பு அற்ற மக்களும் அவர்களின் அங்கீகாரமின்மை, பாதுகாப்பின்மை, வேலைவாய்ப்பின்மை குறித்து அக்கறையின்றி இதற்கெல்லாம் தாங்களே காரணமாயிருப்பதையும் வசதியாக மறந்து திரைப்பட, தொலைக்காட்சி அபத்தங்களில் மனம் லயித்து வருகின்றனர்.


உலக அளவில் முதன்முதலாக பாலியல் சிறுபாண்மையினருக்கான மாற்று சிந்தனைக் கொண்ட திரைப்படங்களைக் கொண்ட திரைப்பட விழா 1997 ஆம் ஆண்டு நெர்லாந்து நாட்டில் துவங்கியதாக இணையம் வழி தேடலில் அறியப்படுகிறது. அதன் பின்னர், பல நாடுகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய அளவில் பல உலக திரைப்பட விழாக்கள், குறும்பட/விவரண திரையிடல்கள் நடைபெற்ற போதும் பாலியல் சிறுபாண்மையினர் குறித்த பிரத்தியேக திரையிடல் இதுநாள் வரை நடைபெற்றிருக்க வில்லை.


இந்நிலையில் ஏப்ரல் 22(ஞாயிறு), 2007 அன்று மதுரை, அரசரடியில் உள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி வளாக துரைராஜ் பீட்டர் அரங்கத்தில் பாலியல் சிறுபான்மையினர் குறித்த திரைப்பட விழா நடைபெற்றது. திருநங்கைகளின் வாழ்வாதார பிரச்சனைகளை, அங்கீகாரமற்ற தன்மையை, பாலின அடையாளச் சிக்கலை விளக்கக்கூடிய படங்களைத் தேர்வு அவற்றை கருவிகளாகக் கொண்டு பொதுமக்கள் மத்தியில் திருநங்கைகளை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.


சுடர் தன்னார்வ அமைப்பு (பன்னாட்டு நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனம் அல்ல) ஏற்படுத்திய இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் திருநங்கை தோழி லிவிங் ஸ்மைல் வித்யா. நிகழ்ச்சி காலை 9.30க்கு சுடர் தன்னார்வ அமைப்பின் இயக்குநர் திரு. இளங்கோ அவர்களின் துவக்க உரையுடன் ஆரம்பமானது. லிவிங் ஸ்மைல் வித்யா வழங்கிய “பாலியல் சிறுபாண்மையினர் குறித்த திரைப்பட விழாவின் நோக்கம்” குறித்த அறிமுக உரையுடன் திரையிடல் தொடர்ந்தது.



முதலில் பிரபல இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்து 2005-ம் ஆண்டில் தேசிய விருது பெற்ற நவரஸா(தமிழ்) திரைப்படம் திரையிடப்பட்டது. ஸ்வேதா என்னும் 13வயதுச் சிறுமி, தன் சித்தப்பா கௌதம், பெண்ணாக மாறுவது கண்டு அதிர்வடைகிறாள். கூத்தாண்டவர் விழாவிற்குச் செல்லும் சித்தப்பாவை வீட்டிற்கு மீண்டும் அழைத்து வருவதற்காக கூவாகம் செல்கிறாள் ஸ்வேதா, அந்தப் பயணம், பாலியல் சிறுபாண்மையோர் பற்றிய ஆழமான புரிதலை ஸ்வேதாவிற்கு அளிக்கிறது. உடலளவில் ஆணாகவும், மனதளவில் பெண்ணாகவும் வாழும் திருநங்கைகளின் மனஉணர்வுப் போராட்டங்களையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் கலாபூர்வமாய் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். திருநங்கைகளுக்கு சக மனிதருக்கான அங்கீகாரம் கொடுத்து, குடும்பத்தினர் ஆதரவு அளிக்க வேண்டுமென்ற கருத்தினை இத்திரைப்படம் வலியுறுத்துகிறது.
***

இப்படம் குறித்த சிறிய கலந்துரையாடலுக்குப் பின் பாய்ஸ் டோன்ட் கிரை (ஆங்கிலம்) என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. கிம்பர்லி பியர்ஸ்சின் சிறப்பான இயக்கத்தில் நடித்த இப்படத்தின் நாயகி ஹிலாரி ஸ்வாங் இதற்காக 1997ல் சிறந்த நடிகைக்கான கோல்டன் க்ளோப் விருதினைப் பெற்றார்.

1993-ம் ஆண்டு நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. பெண் உடலில் பிறந்து ஆணாகத் தன்னை உணரும் டீனா பிராண்டன். பால்மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் ஹார்மோன் தெரபி பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆணுடை தரித்து பிராண்டன் என்ற பெயரில் எல்லோருக்கும் தன்னை ஆணாக அடையாளம் காட்டிக் கொள்ளும் டீனா, லேனா என்னும் பெண்ணிடம் காதல் வயப்படுகிறார். பின்னர், பிராண்டன் ஒரு ட்ரான்ஸ் ஜென்டர் என்று தெரிந்த பிறகும் லேனாவும் பிராண்டனை விரும்புகிறாள். அவரது உண்மை நிலை தெரியவர மற்ற ஆண் நண்பர்களோ டீனா பிராண்டனை பாலியல் பலாத்காரம் செய்து அவ்விசயம் வெளியில் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் கொன்றும் விடுகின்றனர்.


1993 நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இப்படம் வெளியான பிறகு அமெரிக்காவில் பாலியல் சிறுபாண்மையினரின் பாதுகாப்பு, அங்கீகாரம் குறித்த சட்டம் மேலும் வலுப்பட்டது. அதற்கு காரணமாக அமைந்த இப்படம் அவ்வாண்டிற்கான சிறந்த பத்துப் படங்களுல் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.
****

அச்சுப்பிழை (தமிழ்) ‘இப்படம் ஒரு சமுதாயத்தின் கதறல்’ என்ற அறிமுகத்தோடு தொடங்குகிறார் இயக்குநர் விக்னேஷ். பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த சந்திரன் என்னும் கிராமத்துச் சிறுவன், மனதவில் பெண்ணாக மாறும் தருணத்திலிருந்து படம் தொடங்குகிறது. கல்லூரி சேர்ந்த போதும் அவனது நடத்தையில் சந்தேகம் கொண்ட நிர்வாகத்தினர் அவனை வெளியில் அனுப்பிவிடுகின்றனர். பெண் உடைதரித்து, நகையணியும் சந்திரனை தந்தை அடித்து காயப்படுத்திறார். மருத்துவமனையில் சந்திரனுக்கு ஜெயசுதா என்னும் திருநங்கை ழருவரின் நட்பு கிடைக்கிறது. வீட்டை விட்டு வெளியேறி அவருடன் சென்று விடுகிறான். திருநங்கையினருக்கு ஏற்படக்கூடிய பல்வேறு இன்னல்களை எதிர்கொண்ட பின் ‘நிர்வாணம்’ என்னும் பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறான். பெண்ணாக மாறிய சந்திரா, இளைஞன் ஒருவனை காதலித்து மணந்து கொள்கிறாள். திருமண வாழ்வில் ஈடுபடுவதோடு தன்னைப் போன்ற திருநங்கைகள் சுயமரியாதையோடு உழைத்து வாழ்வதற்கும், பாலியல் நோயிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் வழிகாட்டியாய் இருக்கிறார். இதற்கிடையில் கல்லூரித் தோழர் இருவர் சந்திராவின் குடும்பத்தினரைச் சந்தித்து சந்திராவின் பாலியல் திரிபு மரபணு சார்ந்தது என்பதால் இதில் அவளுடைய குற்றம் எதுவுமில்லை என விளக்குகின்றனர். குடும்பத்தினரும் சந்திராவை பெண்ணாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அடைகின்றனர்.

சந்திரா தன் குடும்பத்தினரைக் காணவரும் அன்று தந்தை இறந்துவிடுகிறார். அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய சந்திரா முன்வருகிறார். ஆயினும் ஊர்மக்கள் அதனை எதிர்க்கின்றனர். தந்தையின் சடங்கினை அந்த எதிர்ப்பை மீறி நிறைவேற்றுகிறார். மக்கள் சந்திராவை ஆபாசமாகப் பேசி அடித்துக் கொன்று விடுகின்றனர். தமிழகச் சூழலில் திருநங்கைகளின் வாழ்க்கை முறையில் உள்ள அவலத்தை சித்திரிக்கும் முயற்சியாக இப்படம் உள்ளது.
***


இறுதியாக 2005-ம் ஆண்டு வெளிவந்து டங்கன் டக்கர் இயக்கிய ட்ரான்ஸ் அமெரிக்கா (ஆங்கிலம்) திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படத்தில் ஃப்ரீ என்னும் திருநங்கை பாத்திரத்தில் சிறப்பாக நடித்ததற்காக, பெலிசிட்டி ஹப்மன் என்ற நடிகை ஆஸ்காருக்கு நாமினேட் செய்யப்பட்டார். நவீன அமெரிக்க சூழலில் ஒரு திருநங்கை தனது பால்மாற்று சிகிச்சை மேற்கொள்ளும் முறையை நகைச்சுவை இலையோடும் குடும்ப நாடகமாக இப்படம் உள்ளது. பால் மாற்று சிகிச்சை செய்து கொள்வதற்காக பல ஆண்டுகள் உணவகத்தில் பணிபுரிவதோடு, பகுதி நேர வேலையும் செய்து பணியாற்றி கிடைக்கும் வருமானத்தில் பொறுமையாக பணம் சேமித்து (அரசு அங்கீகரிக்கும் இம்முறையான சிகிச்சையை பெற பல மில்லியன்கள் செலவாகும்) வருகிறார் ஃப்ரீ. ஒரு வருடத்திற்கு முன்பே தனது சிகிச்சைக்காக பதிவு செய்து கொண்ட ஃப்ரீ. இச்சிகிச்சைக்காக, மனோதத்துவ நிபுணர், கைனகாலசிஸ்ட் ஆகியோரின் பரிந்துரையும் பெற்று, சிகிச்சை மேற்கொள்ள இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் அவள் எதிர் கொள்ளும் புதிய பிரச்சனையும், அதோடு தனது பணக்கார குடும்பத்தினருக்கும் தன் நிலையை புரிந்து கொள்ளும்படி செய்து வெற்றிகரமாக பால்மாற்று சிகிச்சையைய மேற்கொண்டு முழு பெண்ணாக தனது வாழ்க்கையை கண்ணியமாக தொடர்கிறாள் ஃப்ரீ.
***

(பார்வையாளர்களில் ஒரு பகுதி)

மதுரை, கருர், ராசபாளையம், திருநெல்வேலியிருந்து பேராசிரியர்கள், அரசு அதிகாரிகள், சட்ட ஆலோசகர்கள், திரைப்பட ஆர்வலர்கள். சமூக அக்கறையாளர்கள், மாணவர்கள் என 80க்கும் மேற்பட்ட நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஒவ்வொரு திரைப்படம் முடிவுற்றதும் நண்பர்கள் சிலர் கலந்துரையாடலில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும், படம் பார்த்த பொழுது தங்களுக்கு ஏற்பட்ட மன உணர்வுகளையும் தயக்கமின்றி வெளிப்படுத்தினர்.



இத்தைகைய படங்களை பார்ப்பதோடு மட்டுமன்றி திருநங்கைகள் குறித்த பிரக்ஞையை வளர்த்தெடுப்பதற்கு அனைவரும் தங்களவில் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்ற லிவிங் ஸ்மைல் வித்யா தன் கோரிக்கையை வலியுறுத்த, இந்நிகிழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற தொடர்ந்து உறுதுணையாக இருந்த நண்பர் பிரபாகரன் அவர்களுக்கும், திரையிடலுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவியும் செய்த நண்பர் ரெங்கநாதனுக்கும், அரங்குதவி செய்த தமிழ்நாடு இறையியல் கல்லூரி நிர்வாகத்திற்கும், படங்கள் பெற்றுத் தருவதில் உதவியாய் இருந்து மற்ற நண்பர்களுக்கும் தனது மனங்கனிந்த நன்றியினை தெரிவித்து நண்பர் இளங்கோவன் அவர்கள் மாலை 7 மணிக்கு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

16 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

முத்துகுமரன் said...

//பெண்ணியம், பெண் விடுதலை, தலித்தியம் குறித்து விவாதிக்கக் கூடிய சமூக ஆர்வலர்கள், இலக்கிய சிந்தனாவாதிகளிடமும் அவர்களைக் குறித்த கரிசனம் உள்ள அளவிற்கு போதிய புரிதல் இன்றி, முயற்சியும் இன்றி மௌனம் சாதிக்கின்றனர்.//

உண்மைதான் வித்யா.சமூகத்தின் தயக்கம் அவர்களுக்குள்ளும் இருந்துவிடுகிறது. ஆனால் இந்த சூழல் மாறும். மாற்றத்தின் அறிகுறிகளும் தென்படுகின்றன. சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாதிருப்பதே இந்த தயக்கங்களுக்கு காரணமாக இருக்கின்றது. விழிப்புணர்வின் ஊடாகத்தான் இந்த மாற்றங்களை கொண்டு வர இயலும். அதற்கு உங்களைப் போன்றவர்களின் தொடர்ச்சியான பங்களிப்பும் தேவை.

திரைப்பட விழா சிறப்பாக நடைபெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் நிறைவளிப்பதாக இருக்கிறது. இந்த நிகழ்வை வெற்றிகரமாக்க உங்களுக்கு உறுதுணை புரிந்த அத்தனை நண்பர்களுக்கும் பாரட்டுதல்களும் நன்றிகளும்..

லிவிங் ஸ்மைல் said...

நன்றி முத்துக்குமரன்...

உண்மைத்தமிழன் said...

அன்பு வித்யா தங்களின் சீரிய வழிகாட்டுதலில் மதுரையில் நடைபெற்றிருக்கும் "பாலியல் சிறுபான்மையினர் குறித்த திரைப்பட விழா" சிறப்பாக நடந்து முடிந்ததற்காக எனது மகிழ்ச்சியையும், அந்நிகழ்ச்சி உருவாகக் காரணமாக இருந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

//இத்தைகைய படங்களை பார்ப்பதோடு மட்டுமன்றி திருநங்கைகள் குறித்த பிரக்ஞையை வளர்த்தெடுப்பதற்கு அனைவரும் தங்களவில் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்//

உங்களுடைய இந்த 'வேள்வி' நிச்சயமாக வெற்றியடையும் என்று நம்புகிறேன். நீங்கள் திரையிட்டுள்ள படங்களில் Boys Don't Cry படத்தை மட்டும்தான் நான் பார்த்திருக்கிறேன். மற்றப் படங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. விரைவில் அதனை பார்த்துவிடுகிறேன். திருநங்கைகள் பற்றிய புரிதல் எனக்குள் இருக்கிறது. என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் இருக்கிறது. சிலரிடம் புரிய வைத்திருக்கிறேன். பலரும் புரிதல் வேண்டுமெனில் இது போன்ற ஊடகங்கள் வாயிலாகத்தான் அறிய வைக்க வேண்டும்.

திருநங்கைகள் பற்றியத் திரைப்படத்தில் நீங்கள் நடிக்க உள்ளீர்கள் என்ற செய்தியைப் படித்தேன். அதிலும் தாங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

தருமி said...

very happy over the success of the function. very glad for your efforts making ripples... let it continue...

had to miss it as i was away on these days

மங்கை said...

மகிழ்ச்சி வித்யா..

இது மாதிரி நிகழ்ச்சிகளுக்கு ஆளுகள சேர்த்தறது எவ்வலவு கஷடம்னு எனக்கு நல்லா தெரியும்....80 பேர்.. ஹ்ம்ம்..பெரிய விஷயம்... உங்க எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

லக்கிலுக் said...

திரைப்படவிழாவை வெற்றிகரமாக நடத்திக் காட்டியதற்கு பாராட்டுக்கள்!!!

கிருது said...

Very Good.. Happy to hear LIVING SMILE did successful function.

I have already been seen all your film by European TV channels.

Onec again சிறப்பாக நடந்து முடிந்ததற்காக எனது மகிழ்ச்சியையும், அந்நிகழ்ச்சி உருவாகக் காரணமாக இருந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

லக்கிலுக் said...

உங்கள் டெம்ப்ளேட்டில் தமிழ்மணத்துக்கு ஆதரவான பேட்ஜ் கண்டேன். நன்றி!!!!

வடிவேல் said...

தோழி லிஸ்,

நீங்கள் ஒருங்கிணைத்த திரைப்பட விழா பெருவெற்றியடைந்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தேன். சாத்தியப்பட்டால், விழாவில் நிகழ்த்தப்பட்ட உரைகளையும், பார்வையாளர்கள் கலந்துரையாடல் தொகுப்பினையும் நாங்களும் அறிந்து கொள்ளும் வண்ணம் இந்த வலைப்பூவில் பதிப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பணி மேலும் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் ஜிமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றினையும் அனுப்பியுள்ளேன்.

வடிவேல்

G.Ragavan said...

திரைப்படவிழா சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துகள். இன்னும் பல நிகழ்ச்சிகள் இதை விடவும் சிறப்பாக நடந்து விழிப்புணர்ச்சியைக் கொண்டு வர வாழ்த்துகள்.

// பெண்ணியம், பெண் விடுதலை, தலித்தியம் குறித்து விவாதிக்கக் கூடிய சமூக ஆர்வலர்கள், இலக்கிய சிந்தனாவாதிகளிடமும் அவர்களைக் குறித்த கரிசனம் உள்ள அளவிற்கு போதிய புரிதல் இன்றி, முயற்சியும் இன்றி மௌனம் சாதிக்கின்றனர்.//

இந்த நிலை நிச்சயம் மாற வேண்டும். எல்லாரும் ஏதோ குறையுடையவர்களே. ஆனால் அடுத்தவர்களின் குறையை மட்டும் குறையாகக் காணும் மனநிலை மாறாத வரை இப்படித்தான் தொடரும். நிலமை மாறும் என்று நம்புவோம்.

பாரதி தம்பி said...

வலியையும், வேதனையையும் பகிர்ந்துகொள்கிறேன்.

thiagu1973 said...

பாலியல் சிறுபாண்மையினர் குறித்து ஒரு மங்கலான சமூகம் கொடுத்த பார்வையே கொண்டு இருந்தேன் .

உங்களின் பதிவுகள் அதை சுக்குநூறாக்கியதுடன் அவர்களது பாலியல் குறைபாடு கருதி ஒதுக்கும் நிலைக்கு எதிரானவன் ஆகிவிட்டேன் .

தொடர்ந்து போராடுங்கள் வித்யா . நாங்கள் துணையாயிருக்கிறோம்

நளாயினி said...

00 good.

manipayal said...

congratulations on a wonderful show. My sincere wishes for more such awareness events.

M.Rishan Shareef said...

இதில் நவரசா மட்டுமே திருநங்கைகளைப் பற்றி நான் பார்த்த திரைப்படம்.அதற்கு முன்பு வரை திருநங்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேனே ஒழிய நேரில் கூடப் பார்த்ததில்லை.
'நவரசா' வில் வரும் ஸ்வேதாவின் மனநிலையோடும், அவளது கேள்விகளைப் போன்ற நிறைய கேள்விகளோடும் தான் நான் இருந்திருக்கிறேன்.இப்பொழுதும் இருக்கிறேன்.
நிறையத் திரைப்படங்களில் திருநங்கைகளை ஆடவிட்டும், நகைச்சுவைக்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ளும் போதும் மிக வேதனையாக உணர்கிறேன்.
ஒவ்வொரு திருநங்கைக்குள்ளும் யுகம்,யுகமாக வதைப்படுத்தும் வேதனைகள் இருக்கிறது என்பதனை உங்கள் வலைத்தளம் உணர்த்துகிறது.
தொடர்ந்து எழுதுங்கள்...!

Mangai said...

Congrats!!!

I appreciate your efforts.
Thirunangaigal should be educated and offered good jobs so that the impression about this society on them as 'sex workers' will pass away.