தேசியக் கொடியேத்திய - திருநங்கை

ஆகஸ்ட், 04

நான் தங்கியுள்ள தமிழ்நாடு இறையியல் கல்லூரி (TTS) வளாகத்தின் மாணவர் பேரவைத் தலைவர் திரு. மேனன் அவர்கள் அன்றைய தினத்தில் மாலை 8.00 அளவில் என்னை சந்திக்க வந்திருந்தார். தன்னை அறிமுகம் செய்து கொண்ட அவர் அவள் விகடன் மற்றும் குங்குமம் கட்டுரைகளை பார்த்ததாகவும் அதற்கான தன் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பரஸ்பரம் அறிமுகம் முடிந்த பின்., சுதந்திர தினமன்று நடைபெறவுள்ள தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு என்னை சிறப்பு விருந்தினராக வருமாறு அழைத்திருந்தார் அத்தோடு நான் கொடியேற்ற வேண்டுமென்றும் கேட்டார்.. கேட்டதும் முதலில் எனக்கு சிரிப்பு வந்தது, பிறகு அவர் சீரியஸாக பேசியதைக் கேட்ட பிறகு எனக்கு ஒன்றும் சொல்லமுடியவில்லை.

நாட்டுப்பற்று என்பது போன்ற உணர்ச்சிகள் எதுவும் எனக்கு துப்புரவாக கிடையாது; மேலும், இந்தியாவை நான் ஒரு சுதந்திர/குடியரசு நாடாக ஏற்றுக்கொள்வதும் கிடையாது., என்னைப் பொருத்தவரை இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடுவதே சற்று அதிகம் தான்.. சரி, விசயத்திற்கு வருவோம், எனது தனிப்பட்ட கருத்து என்னவாக இருந்தாலும், ஒரு திருநங்கையை கொடியேற்ற செய்ய வேண்டுமென அவர்கள் முன்வந்திருப்பது நல்ல விசயம் தானே...

யோசித்து "உங்களுக்கு ஒரு திருநங்கை கொடியேற்ற வேண்டும் அவ்வளவு தானே".. கேட்டேன்... ஆமாம் என்று பதிலளித்தார் நண்பர் மேனன்.

உடனே ப்ரியா பாபு விற்கு போன் போட்டு விசயத்தைச் சொன்னேன்.. அவரும், கொடியேற்றத்திற்கு வர சந்தோசமாக ஒத்துக் கொண்டார். அவரை சென்னையிலிருந்து வரவைப்பதற்கான வேலைகள் மெல்ல மெல்ல நடந்தன.

...............


ஆகஸ்ட், 14

ஆகஸ்ட் 15 நிகழ்ச்சி என்பதால், முந்தைய தினமே ப்ரியா பாபு வருவதாக இருந்தார். Train, bus எதும் கிடைக்க வில்லை. அன்று நண்பகல் 01.00மணிக்கு கிடைத்த பஸ் ஒன்றில் தனது பயணத்தை துவக்கியவர் இடையே, மாலை 7.45க்கு தான் திருச்சிக்கு அருகே வந்து கொண்டிருப்பதாகவும், 10 மணிக்குள் TTS வந்து விடுவதாகவும் எனக்கு மொபைலில் தெரிவித்தார். இரவு மணி 10ஆகி , 11ஆகி, 12 ஆகியும் ஆளும் வரவில்லை, எந்த தகவலும் இல்லை.. மொபைலையும் Switch off செய்திருந்தார். எனக்கும், திரு. மேனனுக்கும்(சும்மாவே அவர் ரொம்ப பதருவார், நான் சொல்லவே வேண்டாம் பயந்தாங் கொள்ளி) பயங்கர டென்சன்... 11 மணிக்கு மேல் நாங்கள் விடுதியை விட்டு வெளியேயும் செல்ல முடியாது.. என்ன செய்யவென்று புரியாமல் முழிபிதுங்கிக் கொண்டு நிற்கிறோம்..

எப்படியோ, நள்ளிரவு 1 மணி சுமாருக்கு பத்திரமாக ஆட்டோவில் வந்து சேர்ந்தார்.. அம்மணிக்கு நடு ராத்திரி 1 மணிக்கு ஒரு புது ஊரில் தனியாக வருகிறோமே என்ற டென்சன் கொஞ்சமும் இல்லை. கூலாக ஆட்டோவிலிருந்து இறங்கினார். அம்மாடியோவ்!! நல்ல தைரியசாலிதான்.. "ஒருவேளை, காந்தி தாத்தா சொன்ன மாதிரி சுதந்திரம் கிட்டதட்ட கிடைச்சுருச்சோ என்னமோ!.. கொடியேத்த பொருத்தமான ஆள்தான்!!" என்று மனதில் நினைத்துக் கொண்டேன்..

திரு. மேனனுக்கு, திருமதி. ப்ரியா பாபுவை அறிமுகம் செய்து விட்டு நானும், ப்ரியா பாபுவும் உறங்கப் போனோம்.

................

ஆகஸ்ட், 15

சுதந்திர தின விடியலில், 7.45க்கு கொடியேற்றப்படவுள்ள திடலை இருவரும் அடைந்தோம்.. திட்டமிட்ட படி, திருமதி.ப்ரியா பாபு அவர்கள் சுதந்திர நாட்டின்(!?) தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சுருக்கமான, நேர்த்தியான உரையையும் நிகழ்த்தினார்.

தொடர்ந்தார் போல், 11.30 மணிக்கு 50க்கும் மேற்பட்ட இறையியல் மாணர்கள் சேர்ந்து திருமதி. ப்ரியா பாபுவுடன் கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்து நிகழ்த்தினர். கலந்துரையாடலில் இறையியல் மாணவர்கள் பலரும் தங்களது சந்தேகங்களையும் ஆரோக்கியமான கேள்விகளையும் எழுப்பினர். வழக்கம் போலவே மாணவிகளும் குறைவாகவே வந்திருந்து குறைவாகவே ஆனால் நிறைவாக கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

குறிப்பாக, கம்யூனிக்கேசன் துறைத் தலைவரும், சிறந்த பெண்ணிய சிந்தனாவாதியுமான திருமதி. மார்க்ரெட் கலைச்செல்வி அவர்களும் கலந்துரையாடலில் பங்கேற்று பல புதிய செய்திகளை தந்ததோடு, திருநங்கைகள் சார்பாக சில வேண்டுகோள்களையும் மாணவர்களிடம் முன்வைத்தார்.

கலந்துரையாடல் உண்மையான அக்கறையோடு நிகழ்ந்தது, வந்திருந்த சிறப்பு விருந்தினர் திருமதி. ப்ரியா பாபுவும் மாணவர்களின் கேள்விகளுக்கு தெளிவாகவும், ஆழமாகவும் தனது பதில்களைத் தந்து நிகழ்ச்சியை சிறப்புற நடத்தித்தந்தார்.

.........

ஒரு திருநங்கை தனியாக வந்து, ஒரு கல்லூரியில் பல மூத்தவர்கள் முன்னிலையில், சுதந்திர தினத்தில் கொடியேற்றி செல்வதும், மாணவர்கள் இயல்பாக அவரிடம் பழகுவதும், ஆரோக்கியமாக விவாதம் நிகழ்த்துவதும் சமூகத்தின் துவங்கியுள்ள நல்ல மாற்றமாகவே எனக்கும் படுகிறது.. வந்திருந்த திருமதி. ப்ரியா பாபுவும் மனநிறைவோடு விடை பெற்றார்.

11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லக்கிலுக் said...

சொல்கிறேனே என்று தப்பாக நினைத்து விடாதீர்கள்....

சமுதாயத்தில் உங்களை சமமாக நடத்தவேண்டும்... எந்தப் பேதமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றெல்லாம் உரிமைப் பிரச்சினை எழுப்பும் நீங்களே இதுபோல "திருநங்கை" என்றெல்லாம் புதிய பதத்தை உபயோகப்படுத்துவது சரியாக எனக்குப் படவில்லை.... ப்ரியா பாபுவை மங்கை என்றே குறிப்பிட்டுவிட்டு போங்களேன்... அது ஏன் திருநங்கை?

உங்களது குறைபாட்டினை (அல்லது வரம்) Advantage ஆக எடுத்துக் கொள்கிறீர்களோ என்றொரு சின்ன சந்தேகம்..... உங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்துவருவதாலேயே இந்தச் சந்தேகம் வருகிறது.....

என்னுடைய இந்தக் கருத்துக்கு வசவு தெரிவிப்பவர்கள் வரிசையா ஒன் பை ஒன்னா வாங்க......

மனதின் ஓசை said...

நல்ல விஷயம்.. பகிர்தலுக்கு நன்றி.

//சமுதாயத்தில் உங்களை சமமாக நடத்தவேண்டும்... எந்தப் பேதமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றெல்லாம் உரிமைப் பிரச்சினை எழுப்பும் நீங்களே இதுபோல "திருநங்கை" என்றெல்லாம் புதிய பதத்தை உபயோகப்படுத்துவது சரியாக எனக்குப் படவில்லை....//

லக்கி... சமூகத்தின் பெரும்பான்மையானோர் இன்னும் திருநங்கைகளை சமமாக ஏற்றுக்கொள்ளாததால் இவ்வாறு கூற வேண்டியது அவசியமாகிறது...இது சமூகத்தின் பார்வையில் இருந்து எழுதப்பட்டதாக கொள்ள வேண்டும்..இது போன்றவை நிச்சயம் அங்கீகாரம்தான்.... இது போன்ற நிகழ்ச்சிகள் இடைவெளியை குறைக்க உதவும்..

இந்த நிகழ்ச்சியின் பகிர்தலுமே லிவிங் ஸ்மைலின் போரட்டத்தின் ஒரு பகுதிதான்.
திருநங்கைகளும் சமம் என்ற எண்ணம் மற்ற அனைவருக்கும் ஏற்படும் வரை இந்த போரட்டம் தேவைதான்..

லிவிங் ஸ்மைல் ,
எதுவும் தவறாக கூறி இருந்தால் இந்த பின்னுட்டத்தை பிரசுரிக்க வேண்டாம் :-)

G.Ragavan said...

பிரியா பாபு பற்றிப் படித்திருக்கிறேன். கொடியெற்றிப் பெருமை கொண்டதிற்கு வாழ்த்துகள்.

லக்கிலுக்கின் கருத்து பலருக்கும் இருக்கும் என்றே நினைக்கிறேன். அனைவருக்குமாய் ஒரு கருத்தைச் இங்கு சொல்லி விடுகிறேன்.

பொதுவாகவே ஒரு புதிய கருத்து நுழைகையில் ஓசை நிறைய இருக்கும். அது வழக்கமான நீரோட்டத்தோடு கலந்த பிறகு அந்த ஓசை அடங்கி விடும். இப்பொழுது கருத்து நுழையத் தொடங்கியிருக்கிறது. அதனால் ஓசையிருக்கிறது.

மஞ்சூர் ராசா said...

அன்பு சகோதரி, நீண்ட நாட்களுக்கு பிறகு (விடுமுறையில் இருந்ததால்) இந்த பக்கம் வர முடியவில்லை.

பிரியா பாபுவை அழைத்து சுதந்திரதின கொடியேற்றியது மனதிற்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களது போராட்டங்களுக்கு விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

பின்குறிப்பு: உங்கள் பெயரில் திருமங்கை (அலி), இதில் அலி என்பதை நீக்கிவிடலாமே.

லிவிங் ஸ்மைல் said...

Luckylook said... // சமுதாயத்தில் உங்களை சமமாக நடத்தவேண்டும்... எந்தப் பேதமும் இல்லாமல் பார்க்க வேண்டும் என்றெல்லாம் உரிமைப் பிரச்சினை எழுப்பும் நீங்களே இதுபோல "திருநங்கை" என்றெல்லாம் புதிய பதத்தை உபயோகப்படுத்துவது சரியாக எனக்குப் படவில்லை.... //

அதேன் நீங்களே சொல்லிட்டிங்களே நாங்கள் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம்.., முழு வெற்றி இன்னும் வந்திட வில்லை.. போராட வேண்டிய அவலத்தில் தான் இருக்கிறோம், போராட்டத்தில் பெறும் சில வெற்றிகளை பரவலாக்குகிறோம்..

// உங்களது குறைபாட்டினை (அல்லது வரம்) Advantage ஆக எடுத்துக் கொள்கிறீர்களோ என்றொரு சின்ன சந்தேகம்....//

எனக்கென்னமோ விமர்சனம் செய்கிறேன் பேர்வழியே என்று நீங்கள் உங்கள் மேதாவிலாசத்தைக் காட்டுவதாகவும், உங்களுக்கு ஒரு விளம்பரம் ஏற்படுத்திக் கொள்வதாகவும் தான் நானும் நினைக்கிறேன்..

முடிந்தால், என்ன Advantage எடுத்துக் கொண்டேன் என்று சொல்லுங்களேன்..

// ப்ரியா பாபுவை மங்கை என்றே குறிப்பிட்டுவிட்டு போங்களேன்... //

பின்வரும் கேள்விளுக்கும் என்னிடமல்ல, மனசாட்சி என்று ஒன்று சொல்வார்களே.. அதனிடம் பதில் சொல்லுங்கள்

# நீங்கள் உண்மையில் எங்களை(திருநங்கை) மங்கைகளாகத் தான் பார்க்கிறீர்களா..?

# உங்கள் குடும்பத்தில் ஒரு மங்கை பிறந்தால் அவளை உங்களால் முழு மங்கையாகவே ஏற்றுக் கொள்ளமுடியுமா..?

# ஒரு மங்கை(திருநங்கை)யை மணம் முடித்து காலம் முழுதும் அவளை கலங்காமல் பார்த்துக் கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா..?

// என்னுடைய இந்தக் கருத்துக்கு வசவு தெரிவிப்பவர்கள் வரிசையா ஒன் பை ஒன்னா வாங்க...... //

அய்யா சாமி, மன்னிக்கவும், உங்களுடைய விளையாட்டிற்கெல்லாம் இது இடமில்லை..

..........

விமர்சனத்தில் +ve, -ve இரண்டும் உண்டு தான். ஆனால், புரிதல் இல்லாமல் விமர்சனம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை அரைவேக்காட்டுத் தனமாக புலம்பித் தள்ளுவதையும், விளம்பரம் தேடிக் கொள்வதையும் செய்ய வேண்டாமென்று அனைத்து வலைப்பூ நண்பர்களையும் பொதுவாக கேட்டுக்கொள்கிறேன்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வாழும் புன்னகை வித்யா!
இக் கொடியேற்றச் செய்தி மிகுந்த மன மகிழ்வைத் தந்தது. நம் சமுதாயம் மாற்றங்களைக் காணும் பக்குவ நிலைக்குச் சிறுகச் சிறுக மாறுவது ,நல்ல அறிகுறியே!
யோகன் பாரிஸ்

Rarebreed said...

badluck luckylook. betterluck next time. and to vidya i know how it hurts , but don't be so harsh next time ( pavam lucky ). appuram ungaloda face picture ennachu. why u started hiding urself.

ராசுக்குட்டி said...

இது இட ஒதுக்கீடு போலத்தான்! கேட்காவிட்டால் யாருக்கும் கவலையிருக்காது! கேட்கப்பட்டால் , "ஒடுக்கப்பட்டதற்காக ஓவராகப் போறீங்க" என்பார்கள். ஒரு பார்வையாலே ஒதுக்கி வைக்கும் சமுதாயம் மாறும் வரை, யாராவது இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கத்தான் வேண்டும்.

வித்யா, இந்தியா ஒரு சிறந்த நாடு என்பதில் உங்களுக்கு சந்தேகம் எதுவும் வேண்டாம். குறைகள் எல்லா நாடுகளிலும் இருக்கும். தேசியக் கொடி ஏற்றுவது உண்மையிலேயே மிகப் பெருமையான விஷயம்தான். வாழ்த்துக்கள் நீங்களும் கலந்து கொண்டமைக்கு!

KARMA said...

லிவிங் ஸ்மைல் அவர்களே,

மனசாட்சியிடம் சில கேள்விகளை மிக்க அவசரத்துடனே கேட்டுவிட்டீர்கள்.

திருநங்கையரும் சக மனிதர் போல் அன்பும் மரியாதையும் பெற்று வாழக்கூடிய சமுதாயம் படைத்திட வேண்டும் என்பதில் நம்மிடையே கருத்து வேறுபாடு கிடையாது.

இப்போது நீங்கள் உங்கள் இதயம் தொட்டு சொல்லுங்கள் ....!

நீங்கள் ஒருவேளை திருநங்கையாகப் பிறந்திருக்காவிட்டால்.....
உங்களது எண்ணங்களும், செயல்களும் எந்த அளவிற்கு திருநங்கையர்க்கு ஆதரவாயிருந்திருக்கும் ?

என்னுடன் பணி செய்யும் அன்பர் தனது மகனை (6 வயது) இரத்தப் புற்று நோய் தாக்கியதால் இங்குள்ள பல இந்தியர்களை Bone marrow - drive க்கு வரச்சொல்லி வேண்டியிருந்தார். எனினும் பலர் செல்லவில்லை. நம் இந்தியர்களுக்கு எப்போதுமே இதில் ஒரு பயம், இதில் ஏதேனும் பிரச்சனை(உடம்புக்கோ, ஆன்மாவுக்கோ)வந்துவிட்டால்? "நமக்கேன் வம்பு" (இந்தியரின் தாரக மந்திரம்).

கடைசியில் அவர் மகன் இறந்து விட்டான். எனது நண்பர் விரக்தியடைந்து அனைத்து இந்தியரையும் இதயமில்லாதவர்கள் போலவும் தனக்குபோல் விசாலமான பார்வை எவர்க்கும் இல்லாதது போலவும் பேச ஆரம்பித்துவிட்டார். உண்மை என்னவெனில் இதுபோன்றதொரு சம்பவம் நிகழவில்லையெனில் அவரும் மற்றவ்ர் போல் "நமக்கேன் வம்பு" இந்தியரே.

தாங்களின் திருநங்கையர் பற்றிய நிலைப்பாடும் இது போன்ற ஒன்றே. நான் இவ்வாறு சொல்வதால் தாங்களின் வலி, வேதனை, மற்றும் போராட்டங்களைப் பற்றி குறைவாக மதிப்பிடுபவதாக தயவு செய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.

தாங்களின் பிறப்பின் விசித்திரத்தை களைந்து பார்க்கின், தாங்களின் எண்ண ஓட்டங்களும், செயல்களும் எங்களைப்போன்றதாகவே சராசரியாய் இருக்குமென்றும்......

ஆகையால் திருநங்கையரை நங்கையராய் தற்போதுள்ள சமூக சூழலில் பார்க்க முடியாவிட்டலும், அதற்கான விழைவை காணமுடிவதில் மகிழ்சியே.

-- திருமூலன்

சுந்தரவடிவேல் said...

நல்ல செய்தி. கொடியேற்று உபசாரத்தைவிட முக்கியமானதாக நான் நினைப்பது மாணவர்களுக்குப் புரிதலை மேம்படுத்தும் வகையில் நடந்த கலந்துரையாடல். இது பலருக்கு நல்லதொரு அகமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. தொடர்ந்தும் உங்கள் பதிவுகளை எதிர்நோக்குகின்றேன். நன்றி.

வடிவேல் said...

தோழி லிவிங் ஸ்மைல்,
லக்கி லுக் சொன்ன கருத்தை விட திருமூலன் சொன்ன கருத்து என்னை வருத்தமடையச் செய்தது. நீங்கள் திருநங்கையாய் பிறந்திருக்காவிட்டால் அவர்களுக்கு ஆதரவாய் உங்கள் செயல்கள் இருந்திருக்குமா என்று கேள்வி எழுப்புகிறார். அடிபட்டவனுக்குதான் வலி தெரியும். ஆனால் ஆதரவு தெரிவிப்பவனுக்கெல்லாம் அடிபட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒருவேளை நீங்கள் திருநங்கையாய் பிறந்திருக்காவிட்டாலும் அவர்களின் பிரச்சனைகள் உங்களுக்கு தெரிய வரும்போது நீங்கள் அவர்களுக்கு ஆதரவாய் செயல்பட்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.
இன்னொரு விஷயம். உங்கள் பதிப்புகளில் ஆங்காங்கே தென்படும் மிதமான நகைச்சுவை மிகவும் ரசிக்கும்படி உள்ள்து.
வடிவேல்.