என் வாசிப்பு அனுபவம் : தொடக்கமும், முடிவும், சாருநிவேதிதாவும்

சிறுவர் மலர், அம்புலிமாமா, முல்லா/பீர்பால்/ராமன் கதைகள் என வளர்ந்து வந்த நான் பத்தாம் வகுப்பும் படிக்கும் நாட்களில் கண்மணி, ரமணி சந்திரன், ராஜேஸ்குமார், சுபா என இலக்கிய சோலையில் மயங்கிக் கிடந்தேன். இளங்கலை சேர்ந்த சில நாட்களில் தமிழ் வாத்தியார் ஒருவா ஒரு முறை "சில நேரங்களில் சின மனிதர்கள்" என்னும் நாவல் குறித்து சிலாகித்ததில் கல்லூரி நூலகத்தில் தேடினேன். தேடியது கிடைக்காத போதும் அதே ஜெயகாந்தனின் "ரிஷி மூலம்" கிடைத்தது.

அது அப்படியே தொடர்ந்து, ஜி.நாகராஐன், ப்ரேம் ரமேஷ், அசோகமித்ரன், சு.ரா., தஞ்சை பிரகாஷ், தி,ஜானகிராமன், எஸ்.ராமகிருஷ்ணன் என்று வளர்ந்து பின்னர் லியோ டால்ஸ்டாய், அன்டன் செக்காவ், தஸ்தாயவெஸ்கி, மக்சிம் கார்க்கி, மிகயில் ஷோலகவ் ரஷ்ய மொழிபெயர்ப்பின் பால் திரும்பியது. மற்ற நூல்கள் எல்லாம் நூலகம் மூலமாகவே பெற முடிந்த எனக்கு, NCBHன் புண்ணியத்தில் மலிவு விலைபதிப்புகளாக ரஷ்ய சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் கிடைத்தன. ரஷ்ய பனியும், பயணமும், கதைகளும் என் கனவுகளை நிறைத்துக் கொண்டிருந்தன.

மெல்ல மெல்ல இலக்கிய போதைக்கு அடிமையாய் இருந்தேன். முதுகலை சேர்ந்த சிலநாட்களில் நாடக பேராசிரியர் மு.ராமசாமியின் அறிமுகம் மற்றும் முருகுபூபதியின் நட்பு இயல்பாகவே எனக்கிருந்த நடிப்பாசையை முறையான தீயின் கதகதப்பில் செழுமையாக்கிக் கொண்டிருந்தன.

கவிதைகளோடு அதிகம் பரிச்சயம் இன்றி இருந்த வந்த எனக்கு முருகுபூபதியின் நட்பும் அவருடன் கொண்ட உரையாடல் அல்லது முருகுபூபதி, கோணங்கி, குமார் அம்பாயிரம், வியாகுலன், யவனிகா ஸ்ரீராம் போன்ற அதிதீவிர கவிஞர்ளின் உரையாடல்களை வாய் பார்த்த நாட்களிலிருந்து கவிதையின் சுவை மீது மோகம் வரத்துவங்கியது. கவிதை எழுதுவதற்கும் முயற்சித்தேன் (வரவில்லை விட்டுவிட்டேன்)

முருகுபூபதி வகையராக்களின் கவிதைமொழி கடினமானது என்பதால் அவற்றைக் கடந்து கல்யாண்ஜி, மாலதி மைத்ரி, சுகிர்தராணி, மதிவண்ணன, தேவேந்திர பூபதி, தேவதச்சன், மனுஷ்யபுத்திரன் ஆகியோர் என்னைக் கவர்ந்த கவிஞர்களாக என் தேர்வில் இருந்தார்கள். முதுகலை இறுதியாண்டு வரும் சமயம், உயிர்மை இதழ் முதலாக வர ஆரம்பித்திருந்த சமயம். மாதம் தவறாமல் ஒரு இலக்கிய புத்தகமாவது வாங்கிவிட வேண்டும் என்று முடிவெடுத்தெருந்த சமயத்தில் உயிர்மை சரியாக பட்டது. உயிர்மையை தேர்ந்தெடுத்ததற்கு வேறொரு காரணமும் இருந்தது. அப்போது திருச்சியில் நான் ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் நடித்த நண்பர் செந்தில் உயிர்மையோடு அப்போது நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். தற்போது உயிர் எழுத்து நடத்தி வருகிறார். தொடர்ந்து ரிகசர்ல் நடந்த அந்நாட்களில் அவரிடம் பெரும்பாலும் ஓசியிலேயே உயிர்மை இதழ்கள் கிடைத்தன.


உயிர்மை இதழில் அறிமுகமான சாருநிவேதிதா அந்நாட்களில் எனக்கு மிகவும் சிறந்த எழுத்தாளராக பட்டார். துணிச்சலான, வெளிப்படையான, பல்பரிமாண எழுதுத்தாக அவரது படைப்புகள் என்னனை கவர்ந்தன. இது போது இணையத்திலும் அவரது இணையபக்கத்தையும், வெப்உலகம், திண்ணை என்று கொஞ்சம் மேய்ந்து கொண்டிருந்தேன். நிஐத்தில் எழுத வேண்டும் என்ற நப்பாசையை மட்டும் எனக்கு அவ்வப்போது எழுப்பிக்கொண்டிருந்த நெருக்கமான தோழனாக சாருவின் எழுத்துக்கள் இருந்தன.


இது போக சிறு சிறு புத்தக கண்காட்சிகள். நண்பர்களின் பரிசு, நூலகம் என மேலும் கொஞ்சம் வாசிப்போடு தொடர்பிலிருந்தேன். ஒரு வகையில் அல்லது முழுக்க முழுக்க இந்த வாசிப்பே என் தனிமைக்கு உற்ற தோழியாக இருந்தது.


இந்த வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் புனே சென்று பிச்சை எடுக்க ஆரம்பித்த சில நாட்களில் முழுக்கவும் நின்றுவிட்டது. இயல்பு வாழ்க்கையின் இன்னல்களும், கோரங்களும் நேரமின்மையொடு கைகோர்த்து இலக்கியங்களின் மீது எனக்கிருந்த இனம்புரியாத தேடலை நீர்த்துப் போகச் செய்தது.

****************

புனேவிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் கழித்து புது மனுஷியாய் வாழ்க்கை மீதான அவநம்பிக்கையும், அதிருப்தி மற்றும் பயத்தோடு தமிழகம் திரும்பினேன். முன்பிருந்த இலக்கிய ஆர்வம் இப்போது இல்லை. என் தேவையெல்லாம், தங்குமிடம், பாதுகாப்பு, வேலை, நிம்மதி இவை மட்டுமு. என் முயற்சிகளுக்கு ஆதாரமாகவும், உந்து சக்தியாகவும் இருந்தது முருகபூபதி மற்றும் பிற இலக்கிய நண்பர்களின் நட்புதான். நேரடியாக உதவ முடியாத சூழ்நிலையிலும் பல கவிஞர்கள் என் நிலைக்காக வருத்தமும் நல்லது நடக்க வேண்டும் என்ற அக்கரையும் கொண்டிருந்தனர்.


இவற்றிற்கு அப்பாற்பட்டு எனக்கு தெரிந்த பல நண்பர்களிடம் சகட்டு மேனிக்கு வேலை வேலை என நச்சரித்துக் கொண்டிருந்தேன். அந்நிலையில், தோன்றிய யோசனைகளுள் ஒன்று சாருநிவேதிதாவிடமும் உதவி கேட்கலாம் என்பது. மிகச் சரியாக சொல்வதென்றால் அது ஒரு முட்டாள் தனமான யோசனையும் தான். எனக்கு சாருவைத் தெரியும் ஆனால் சாருவிற்கோ என்னைத் தெரியாது. அதனால் என்ன? விளிம்புகளின் அவலத்திற்காக கொதித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளன். வாழ்க்கையை கொண்டாட வேண்டும் என்ற சிந்தனை கொண்ட எழுத்தாளன், பல பெரிய புள்ளிகளுடன் தொடர்பு கொண்டிருந்த எழுத்தாளன் எனவே முயற்சி என்ற அளவில் என்ன தவறு என் தயக்கத்தை உடைத்துக் கொண்டேன்.

ஒரு திருநங்கை. அதுவும் கொளரவமாக வேலை செய்ய வேண்டும் என ஆசைபடும் நியாயமான நோக்கம். இதற்காகவெல்லாம் தன்னாலான சிறுமுயற்சி கூடவா ஒரு எழுத்தாளர் எடுக்க மாட்டார்?! ஒருவேளை இம்முயற்சியின் பலனாக நல்ல வேலை கிடைத்துவிடாதா என்ற நப்பாசை என்னை விடாமல் துரத்தியது. இவற்றையெல்லாம் கடந்து என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளரிடம் பேசப் போகும் மகிழ்ச்சியும்.


பல முயற்சிகளோடு ஒரு முயற்சியாய் நண்பர்கள் மூலமாக சாருவின் எண் கிடைக்கப் பெற்று, தொலைபேசியில் உரையாடினேன். என்னை பற்றிய சுய அறிமுகம் செய்து கொண்டேன். குரலும், பேசும் விதமும் பாந்ததமாக, அன்பாகவே இருந்தது. பிறகு எனது உதவியை முன் வைத்தேன். எதிர்பார்த்த ரியாக்சனோ, பதிலோ இல்லை. தொடர்ந்து தொலைபேசியில் அழைக்கும் போதெல்லாம், தவிர்க்கப்பட்டேன். ஒருவேளை தன்னிடம் யாரோ விளையாடவதாக தவறாக நினைத்துக் கொண்டாரோ அல்லது ஒரு இலக்கிய ஐாம்பவானிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் முறை இதுவல்லவோ என்று என்னை நானே சமாதனப்படுத்திக் கொண்டேன்.


அதற்குள் எனக்கும் வேலை கிடைத்து ஓரளவு செட்டிலாகி விட்டிருந்தேன். எனக்கு திருநங்கைகளுக்கான ஆவண மையம் நடத்த வேண்டும் என்ற உபலட்சியம் ஒன்றிருந்தது. அற்காக திருநங்கைகள் தொடர்புடைய புத்தகங்களை தேடிக்கொண்டிருந்த போது கோணல்பக்கங்களின் சில பகுதிகளில் திருநங்கைகள் குறித்த சாருவின் பார்வை, அனுபவங்கள் எனக்கு சந்தேகத்தை, விமர்சனத்தையும் ஏற்படுத்தியது. அது குறித்து விவாதிக்கலாம் என்று சாருவுடன் தொடர்பு கொண்டபோது, ஒரு நேரம் கொடுத்து அந்த நேரத்தில் பேசலாம் என்றார். அவர் குறிப்பிட்ட நேரத்தில் தொடர்புகொண்ட போது பிறகு பேசுவோம் என்றார். அப்படியே தவிர்த்துக் கொண்டுவந்தார்.


அவர் இணைய உலாவி என்று அறிந்திருந்ததால், அவரது ஹாட்மெயில் / யாஹீ சரியாக நினைவில் இல்லை முகவரிக்கு சாட் செய்ய அழைப்பு ஒன்று விடுத்திருந்தேன். சில நாட்கள் கழித்து அந்த அழைப்பிற்கு பதிலிளித்தார். அதில் நான் யார் என்று கேட்டிருந்தார். என்னை யாரென்று தெரியாமல் ஏதோவொரு வித்யா என்றுதான் வந்துள்ளார் என்று அறிந்து. முன்பு தொலைபேசியில் பேசியவற்றை நினைவு படுத்தினேன். சட்டென சாட்டிலிருந்து மாயமானார். அதற்குள் சில இலக்கிய, சிந்தனை சிற்பிகளின் போலிமுகங்களை தெரிந்து கொண்டதாலும், இலக்கிய ஜாம்பவான்களின் மேலிருந்த பிரேமை நீங்கியதாலும், சாருவின் சிறுமையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.


அதைத் தொடர்ந்து அவரது எழுத்துக்களை மறுவாசிப்பு செய்ததில் பல கட்டுரைகளை ரசிக்க முடிந்தது. அதே பகடி, கோபம், தகவல் திரட்டு எல்லாம் ஆச்சரியப்படுத்தினாலும். சில தகவல்கள் போலியானது, நாடகத்தனமானது என்பதையும் என்னால் யூகிக்க முடிந்தது. கிட்டதட்ட ஒரு வருடங்கள் கழித்து ஒருவருடம் கழித்து உயிர்மையில் எழுதிய கட்டுரையை படித்து பயங்கர ஆத்திரம் எழுந்தது. அதிமேதாவியாக தோன்றினாலும் சில கட்டுரைகள் மிக எரிச்சலூட்டுவதாக அமையும் சாருவின் சில கட்டுரைகளுக்கிடையே இந்த திரைக்கட்டுரையையும் அதன் அபத்தததையும் ஏற்கனவே இங்கே எழுதியுள்ளேன். அதோடு அதை மறந்தும் விட்டேன்.


கடந்த 6 ஐனவரியன்று நியூ உட்லான்ட்ஸ் ஹோட்டலில் சாருவின் மூன்று புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். இவ்விழாவில் பார்லிமெண்ட் உறுப்பினர் கனிமொழி வருவதால் முடிந்தால் அவரை நேரில் சந்தித்து, பெயர், பாலின மாற்றத்திற்கு உதவக்கோரியும், வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் முயற்சிக்கலாம் என்ற எண்ணமும் ஒரு காரணம். அடடா, எங்க வேல கேக்குறதுன்னா விவசத்த இல்லயான்னு மட்டும் கேக்காதிங்க. முறையான பெயர் மற்றும் பாலின அங்கீகாரமின்மையால் தினசரி வாழ்க்கையில் அடையும் நேரடிச் சிக்கல்கள் அனுபவத்தால் மட்டுமே புரியும். மனிதாபிமானம் கொண்டு ஒருவரின் உரிமைக்காக உதவுவதன் முனபு இலக்கியமோ, நாகரீகமோ எனக்க பெரிதாக படவில்லை.


ஆக நிகழ்ச்சிக்கு சென்ற எனக்கு அங்கே மற்றொரு ஆனந்த அதிர்ச்சியாக, திருநங்கைத் தோழிகளான ப்ரியா பாபுவும், ரோசும் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.
கண்டிப்பாக இருவருமே சாருவை, சாருவை மட்டுமன்றி யாரையும் படித்ததில்லை என்பது தெரியும். பிறகு இங்கே எப்படி என்பதே என் ஆச்சரியம். அவர்களிடமே கேட்டபோது, "அவரைத் தெரியும் " என்றார்கள். சரியென்று கூட்டத்தை கவனிக்க ஆரம்பித்தேன். விழாவிற்கு வந்த பல முண்ணனி கலையுலக, எழுத்தாளர்களில் அழகிய பெரியவன்,பாரதி கிருஷ்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் பாலு மகேந்திராவின் உரை நன்றாக இருந்தது. பாலு மகேந்திரா தாமதித்து தாமதித்து பேசினாலும், உரையாடலின் சில பகுதிகள் நன்றாகவே இருந்தது.


எதிர்பார்த்தபடியன்றி, கனிமொழி தனது உரையை விரைவாக முடித்துக் கொண்டு, அடுத்த கூட்டத்திற்கு சென்றுவிட்டார். ஆனாலும், ஆறுதலாக இருந்தது மற்றவர்களின் உரை. "வரம்பு மீறிய பிரதிகள்" குறித்து அழகிய பெரியவனின் அலசல் நன்றாக இருந்தது. மொழிபெயர்ப்பு கதைகள் குறித்து பல தகவல்களும் பிற கூடுதல் செய்திகளும் எஸ்.ராமகிருஷ்ணனின் உரையில் கிடைத்தது. சுவைபட பேசுவதில் வல்லவரான பாரதி கிருஷ்ணனின் உரையும் ரசிக்கும் படி இருந்தது. ஏற்கனவே தன் பல கட்டுரைகளில் சொன்னவற்றின் சாராம்சத்தோடு வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி சுவையான ஏற்புரையை சாருவும் தந்தார்.



விழா முடிந்த உடன், பல நாட்களாக கைகுழுக்க வேண்டுமென்று ஆசையாய் இருந்த அழகிய பெரியவனிடம் என்னை அறிமுகம் செய்து கைகுழுக்கிக் கொண்டேன். அவ்வாறே விழாவிற்கு வந்திருந்த கல்லூரி பட இயக்குநர் பாலாஜி சக்திவேலிடம் பாராட்டுதல் தெரிவித்து கூடவே, அவரது அடுத்த படத்தில் திருநங்கைகளை நேர்மறையாக காண்பிக்குமாறு சில காட்சிகளாவது வையுங்கள் என வேண்டுகோளும் விடுத்தேன். பெரும்பான்மை திரைவிமர்சகர்களால் சிலாகிக்கப்பட்ட காதல் படம் எனக்கும் பிடித்திருந்தாலும், கல்லூரி படமே எனக்கு மிகவும் சிறந்த படமாக, இந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்படமாக பட்டது. எனது வாழ்த்தை அவரிடம் நேரடியாக சொல்ல முடிந்ததில் மகிழ்ச்சியும் இருந்தது.


வரும் போது, திரைத்தொடர்பாக சாரு எழுதிய ஒரு புத்தகத்தையும் அங்கேயே வாங்கிக் கொண்டேன். ஏற்கனவே உயிர்மையிலும், இணையபக்கத்திலும் வாசித்த கட்டுரைகளின் தொகுப்பு தான் என்றாலும், இதில் திருநங்கைகள் குறித்த சொற்கள் இடம் பெற்றதால். எனது ஆவண சேகரிப்பு உதவுமென்பதால் வாங்கிக்கொண்டேன்.



வாசிப்பில் தீவிரமாக இருந்த ஆரம்பநாட்களில் எழுதவேண்டும் என்ற கொஞ்சநஞ்ச ஆசையை எழுப்பி எழுதுவதில் இருந்த தடையை உடைக்க உதவியவை சாருவின் எழுத்து என்பது மறுக்க முடியாதது. இலக்கிய கூட்டம், வாசிப்பு என கடந்த இரண்டு வருடங்களாக விலகியே இருந்த எனக்கு சாருவின் புத்தக வெளியீட்டு விழா மீண்டும் உற்சாகத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தியது உண்மை.

22 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லிவிங் ஸ்மைல் said...

Raj Chandra has left a new comment on your post "என் இலக்கிய அனுபவம் : முடிவும், துவக்கமும், சாருநிதிதாவும்":

//கவிதைகளோடு இன்று வரை ஒன்ற முடிவதில்லை. மனுஷ்யபுத்திரன் ஒரு பேட்டியில் சொன்னது போல கவிதைகள் எல்லோருக்கும் எழுதப்படுவதில்லை...சிலரால் மட்டுமே அதை உள்வாங்கி அனுபவிக்க முடியும் என்பதாலோ என்னமோ? (அவரின் வரிகளை நினைவிலிருந்து எழுதுகிறேன்).

மற்றப் பதிவர்களும் சாருவுடன், அவரின் எழுத்துக்களோடு தொடர்புப்படுத்திக் முரண்பாடாகத்தான் பார்த்திருக்கின்றனர்.

புத்தகத்தைப் பற்றி உங்களின் கருத்துக்களை நேரம் இருப்பின் எழுதுங்கள். //

கதிர் said...

உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.

அகஆராய்ச்சியாளன் said...

அழகான நடையில் எழுதியுள்ளீர்கள் லிஸ்.

லக்கிலுக் said...

//சிறுவர் மலர், அம்புலிமாமா, முல்லா/பீர்பால்/ராமன் கதைகள் என வளர்ந்து வந்த நான் பத்தாம் வகுப்பும் படிக்கும் நாட்களில் கண்மணி, ரமணி சந்திரன், ராஜேஸ்குமார், சுபா என இலக்கிய சோலையில் மயங்கிக் கிடந்தேன்.//

நானும் தான் :-)

'ஒரு ஊருலே ஒரு ராஜா' கதை மாதிரி எல்லாருக்கும் வாசிப்பு இப்படித்தான் தொடங்குகிறதோ?

முத்துகுமரன் said...

நல்ல பதிவு வித்யா. உங்களை மதுரையில் சந்தித்த போதே உங்களின் இலக்கிய ஆர்வத்தையும், கலை சார்ந்த தேடலையும் உணர முடிந்தது.
//வாசிப்பில் தீவிரமாக இருந்த ஆரம்பநாட்களில் எழுதவேண்டும் என்ற கொஞ்சநஞ்ச ஆசையை எழுப்பி எழுதுவதில் இருந்த தடையை உடைக்க உதவியவை சாருவின் எழுத்து என்பது மறுக்க முடியாதது. இலக்கிய கூட்டம், வாசிப்பு என கடந்த இரண்டு வருடங்களாக விலகியே இருந்த எனக்கு சாருவின் புத்தக வெளியீட்டு விழா மீண்டும் உற்சாகத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தியது உண்மை//

வாழ்த்துகள். நிறைய இலக்கிய படைப்புகளை தர வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

நிலாரசிகன் said...

நல்ல பதிவு.

//கைகுழுக்கி//

கைகுலுக்கி

ச.மனோகர் said...

நல்ல பதிவு!

Voice on Wings said...

கலக எழுத்தாளர் என்ற போர்வையில் உலா வருபவர்கள் தங்களால் உருப்படியாக எதுவும் செய்ய இயலாவிட்டாலும், விளிம்பு மக்களிடையே இத்தகைய தவறான எதிர்பார்ப்புகளை எழுப்பி விடுவது ஒரு சோகமாக பக்க விளைவு. இவர்களை விட, காசு வாங்கிக் கொண்டு காவியம் படைப்பவர்களே மேல் என்று தோன்றுகிறது. (அவர்களால் எந்தவொரு ஏமாற்றங்களையும் ஏற்படுத்த வாய்ப்பில்லாததால்)

(சாரு பற்றிய தகவல்கள் குறித்து மற்ற பின்னூட்டாளர்கள் கவனமாக side-step செய்து பின்னூட்டமிட்டிருப்பதன் மர்மமும் ஆராயப் பட வேண்டியது :) )

M Poovannan said...

ஜீரோ டிகிரி நாவலைப் படித்த பின்னுமா சாருவின் மேல் உங்களுக்கு இத்தனை ஈர்ப்பு !!!!!!

செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

"மொழி" திரைப்படம் பற்றிய தனது விமர்சனத்தில், பிரம்மானந்தத்தை, பிரகாஷ்ராஜ் "ஹோமோசெக்ஸ்" என்று நினைத்து பயப்படும் காட்சியை, நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும் காட்சி என்று குறிப்பிட்டு இருந்தார் சாருநிவேதிதா. அவரைத் திட்டி கட்டுரை எழுதினார் இந்த "வாழும் புன்னகை" என்பது யாராலும் மறக்க முடியாது.

கிருத்திகா ஸ்ரீதர் said...

நல்ல மொழி வளத்துடன், கோர்வையான எழுத்து.. ஏமாற்றங்களைக்கூட மிக எளிமையாக வன்முறையின்றி தாங்கள் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு பாரட்டுக்குரியது.. தங்களின் தன்னம்பிக்கையில் மற்றுமொரு மைல்கல்.. வாழ்த்துக்கள்..

Arun Sundar said...

I'm not sure if I can comment in english, as I dont see even a single english comment. Neways, I dont have a tamil font nor I could refrain from commenting :)

The post is very good and reminded me of my childhood days of siruvar malar! And by the way, unga profile'la "Sila kaalam pune'yilum, Madurai'ilum kalindhadhu"'nu pottu irukkeenga. Shouldnt it be "Kazhindhadhu?"

Uma Nedumaran said...

அன்பு வித்யா..
முதல் முறையாக தங்கள் வலைப்பூவிற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது.. தங்கள் பக்கத்தின் வடிவமைப்பை கண்டவுடன் உண்மையிலேயே மிரண்டுவிட்டேன்.. மிக அருமை.. அடுத்து.. வாழும் புன்னகை என்று தாங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் பெயர்.. அது பல செய்திகளை உணர்த்துகிறது.. இன்று நம் சமூகத்தில் திருநங்கைகள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்க நேரிடும் இடர்களைப் போன்று வேறு யாரும் சந்திக்கவில்லை.. அத்தகு சூழலில் நின்று கொண்டு.. புன்னகையுடன் வாழ்வேன் என்று உறுதி பூண்டிருக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..
மூன்றாவதாக.. தங்களின் எழுத்து நடையும் மிக எளிமையாக.. மற்றொரு தோழர் குறிப்பிட்டிருந்தது போல்.. வன்முறையின்றி எதிர் கருத்தை பதிவு செய்யும் வகையில்.. மிக அருமையாக இருந்தது.. தங்களிடமிருந்து மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்..
நன்றி

M.Rishan Shareef said...

மிக அழகான எழுத்து நடை உங்களது.
சாருவின் எழுதும் கற்பனை வளத்துக்கும்,அவரது வாழ்க்கை முறைக்கும் பெறுமளவு வித்தியாசமிருப்பதனை நானும் உணர்கிறேன்.
நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள் வித்யா.
எழுத்து மிக இயல்பாகவும்,அழகாகவும் உங்களுக்குக் கை வருகிறது.

ஜமாலன் said...

தோழர் வித்யாவிற்கு...

சாருவின் முதல் நாவலான 'எக்ஸிஷ்டென்யிலிஸமும் பேன்ஷி பனியனும்' என்கிற நாவலுக்கு ஒரு நீண்ட திறணாய்வு போன்ற ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன் 90-களில். 90-களில் பலமுறை அவருடன் பழகியிருக்கிறேன். பிரேம் ரமேஷ் மாலதி என சிலமுறை அவரது வீட்டில் தங்கியும் விவாதித்தும் இருக்கிறேன். அப்பொழுது அவர் அமரந்தாவுடன் இருந்தார். அது ஒரு காலம். அந்த சாருவும் வேறு. அதன்பின் சாருவின் எழுத்துக்கள் மற்றும் நாவல்கள் அத்தனை சுவாராஷ்யமாகவும் இல்லை என பலரின் கருத்துக்கனைப் படித்துள்ளேன். நாவல்கள் இன்னும் நான் வாசிக்கவில்லை. ஆயினும் அவரது முதல் நாவலின் பங்களிப்பு என்பது மறுக்க முடியாத ஒன்று. இன்று யதேச்சையாக அவரது தப்புத்தாளங்களில் பாபா பற்றிய குறிப்பை படித்தேன். கலகம் எனது பிறப்பரிமை என்று புறப்பட்ட சாருவா? என என்னால் நம்ப இயலவில்லை. நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் சரிதான். அவரால் உங்களக்கு உதவ முடியாததை முடியாது என்று கூறியிருக்கலாம். போகட்டும்.

சாருவால் பிரச்சனைக்குள்ளான நண்பர்கள் ஆபிதின் மற்றும் பிரேம்-ரமேஷ் என பட்டியல்கள் உள்ளது. எழத்தாளனது எழுத்துக்கும் அவனது வாழ்க்கைக்கும் உள்ள தொடர்பு என்பது நேரடியானது அல்ல என்றாலும் அவனது சிந்தனையை அவனது வாழ்க்கைச் சூழலே தீர்மாணிக்கிறது. அவ்வகையில் சாருவின் தற்போதைய வாழ்க்கைச் சூழல் வேறு. பாலியல் அரசியல் உடல் அரசியல் கலகம் அதிகார எதிர்ப்பு என்று பேசிய கால வாழ்க்கைச்சூழல் வேறு. தற்பொழுது அவரது எழத்துக்களும் சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்களைத்தான் நினைவூட்டுகின்றன.


//மனிதாபிமானம் கொண்டு ஒருவரின் உரிமைக்காக உதவுவதன் முனபு இலக்கியமோ, நாகரீகமோ எனக்க பெரிதாக படவில்லை. //

முகத்திலறையும் வார்த்தைகள். உங்கள் எழுத்தில் எளிமையும் நேர்மையான உணர்வுகளும் உள்ளது. அவ்வப்போது இதுபோன்ற தெரிப்புகள். வாழ்த்துக்கள்.

உங்களது மற்றொரு தெறிப்பான வாக்கியம் உருவாக்கிய எனது கருத்துக்களை பாருங்கள். நீங்கள் எனது இப்பதிவை பார்த்திருக்கக்கூடும் இல்லாவிட்டால் வாய்ப்புக் கிடைத்தால் பாருங்கள்:
http://tamilbodypolitics.blogspot.com/2007/08/httplivingsmile.html

அன்புடன்
ஜமாலன்.

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

தீவிர இலக்கிய வாசிப்புக்கு உட்படும் காலங்கள் பெரும்பாலும் கல்லூரி நாட்களே. வெகுஜன எழுத்துகளில் இருந்து விலகி வாழ்வனுபவத்தையும் ஆழ்ந்த வாசிப்பு அனுபவத்தையும் கொடுக்கும் அந்த காலங்களில் நல்ல எழுத்தாளர்களது அறிமுகம் ஒரு வரம் என சொல்லலாம். உங்களுக்கு கிடைத்த அந்த வரிசை மிக அற்புதமானது. உங்கள் வாசிப்பு உங்கள் எழுத்துகளை வளமாக்கும்.. மாற்று எண்ணங்களை உருவாக்கும். கருத்துகளின் மதிப்பு கூடும். கேள்விகளும் எழும். மேலும் படிக்க பதிகளும் கேள்விகளும் இடம் மாறும்... இது ஒரு நல்ல அனுபவம். சாருவின் எழுத்துகளில் உள்ள பேன்டஸி ஸெக்ஸ் என்னை முதன் முறை சாருவை படிக்க தூண்டியது என்று என்னால் சொல்ல முடியும். எழுத்தாளனும் எழுத்துகளும் ஆளுமை அளவிலும் சமுதாய அளவிலும் மாறுபட்ட உருவம் கொண்டவர்கள் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. விதிவிலக்குகளை நான் அறிந்ததில்லை. உங்கள் பதிவு நன்றாக இருந்தது. மேலும் எழுதுங்கள்.

கரிசல்காடன் said...

அன்பு வித்யா..
முதல் முறையாக தங்கள் வலைப்பூவிற்கு வரும் வாய்ப்பு கிடைத்தது... மிக அருமை..

குமரன் said...

சொல்ல நினைத்ததை, தெளிவாக சொல்லிவிட்டீர்களா ஸ்மைல்?

சாரு உங்கள் கருத்தில் நல்ல ஆளா? கெட்டவனா?

Unknown said...

Recently I read Charu's 'Alainthu thiribavanin azhagiyal'. As I started reading, I was amazed and by the time I finished the book, I have lost all my respect for him. He completely contradicts himself. Pachaikili Muthu Charam is a complete copy of a hollywood movie 'Derailed' and I dont understand how he can consider that as an important tamil cinema. Finally I decided that he will simply toss a coin to decide whether a movie is good or bad. There does not seem to be any other logical reason behind it. Your blog re-assures that. Keep up the good work.

aravintraj said...

இந்த வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் புனே சென்று பிச்சை எடுக்க ஆரம்பித்த சில நாட்களில் முழுக்கவும் நின்றுவிட்டது. இயல்பு வாழ்க்கையின் இன்னல்களும், கோரங்களும் நேரமின்மையொடு கைகோர்த்து இலக்கியங்களின் மீது எனக்கிருந்த இனம்புரியாத தேடலை நீர்த்துப் போகச் செய்தது.
இந்த வரிகளுக்கு முன் தாங்கள் எழுதியதை படிக்கும் முன் பிரமிப்பாக இருந்தது. இந்த வரிகளில் மனம் மனம் அலறியது, ஏன் இந்த அவலம் என

மேலும் தங்களது தளத்தின் பின்னணி மிக மிக மிக அருமை அற்புதம், கான்செப்ட், மாடல் எல்லாம் பிரமாதம்

aravintraj said...

இந்த வாசிப்பும், இலக்கிய ஆர்வமும் புனே சென்று பிச்சை எடுக்க ஆரம்பித்த சில நாட்களில் முழுக்கவும் நின்றுவிட்டது. இயல்பு வாழ்க்கையின் இன்னல்களும், கோரங்களும் நேரமின்மையொடு கைகோர்த்து இலக்கியங்களின் மீது எனக்கிருந்த இனம்புரியாத தேடலை நீர்த்துப் போகச் செய்தது.
இந்த வரிகளுக்கு முன் தாங்கள் எழுதியதை படிக்கும் முன் பிரமிப்பாக இருந்தது. இந்த வரிகளில் மனம் மனம் அலறியது, ஏன் இந்த அவலம் என

மேலும் தங்களது தளத்தின் பின்னணி மிக மிக மிக அருமை அற்புதம், கான்செப்ட், மாடல் எல்லாம் பிரமாதம்

tamilnadufellowship said...

தோழியே உங்களுகு என் வாழ்த்தும் வணக்கமும்