விவரணப்பட திரையிடல் குறித்த பதிவு

கடந்த 08 ம் தேதி (ஜுலை 2006) மதியம் 3 மணிக்கெல்லாம் நானும் எனது நண்பர்களிருவரும் அரங்கத்தை அடைந்து விட்டோம்.. CDயை ஒரு முறை போட்டுப் பார்த்து Projectorலிம், CDயிலும் எந்த problemம் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு நிம்மதியாக பார்வையாளர்களை வரவேற்கத் தயாரானோம்... 4.00 மணிக்கு சரியாக, ஒரேயொரு அயல்நாட்டு (இங்கிலாந்து) நண்பர் மட்டும் முதல் ஆளாக வந்தார்.. screening 4.00 மணிக்குத்தானே என்று கேட்டார்.. நான் இந்தியாவில் 4.00 மணியென்றால் 4.45க்காலென அர்த்தம் என்று (வெட்கமில்லாமல்) பதிலளித்தேன்.. அவர் எரிச்சலுடன் தலையாட்டி விட்டு சென்று விட்டார்...

4.15க்குப் பிறகு சில கல்லூரி மாணவ மாணவிகள் வர ஆரம்பித்தனர்.. ஆனந்த் சாரும்(Regional Manager) பரபரப்பாக வந்து சேர்ந்தார். அவருடன் சற்று பேசிக் கொண்டிருந்த வேளையில் மற்ற நண்பர்களும் வர தொடங்கி விட்டிருந்தனர்....

4.30 மணிக்கு ரிப்போர்ட்டர் ஒருவர் வந்திருந்தார். தான் இன்ன பத்திரிக்கையிலிருந்து கூறியவர் திரையிடல் குறித்த ரிப்போர்ட் வேண்டுமென்று கேட்டார். சரி என்ற ஒப்புதலுக்குப் பின், தனது கேள்விகளைத் தொடங்கினார். திரையிடவுள்ள படத்தை குறித்தும், இத்திரையிடலின் நோக்கத்தையும் சுருக்கமாக கேட்டுவிட்டு சென்றார்... எனது பெயர் லிவிங் ஸ்மைல் வித்யா என்பதை கடைசி வரை ஏற்றுக் கொள்ளவே இல்லை(always, இந்த இண்டியன்ஸ்க்கு என் பெயரை மண்டையில் ஏற்றுவதுவதென்பது எனக்கு பெரும் இம்சையாகவே உள்ளது)... அதனாலோ என்னவோ செய்தியும் வெளிவரவில்லை..

இந்நிகழ்ச்சிக்கு chief guestஆக அழைக்கப்பட்டிருந்த இயக்குநர் அருண்மொழியால் கடைசி நேரத்தில் நிகழ்ச்சிக்கு வர இயலாமல் போனது மிகப் பெரும் குறையாக இருந்தாலும்.. அதனை ஈடு செய்யும் விதமாக, மற்றொரு chief guest ஆன லாவண்யா ( NESA, Bangalore)வின் பேச்சும், பார்வையாளர்களுக்கு சிறப்பான முறையில் அவர் பதிலளித்த விதமும் அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாக அமைந்தது...

சற்று தாமதமாக(!?) படம் 5.00மணிக்கு திரையிடப் பட்டது, ஆரம்பத்தில் குறைவான பார்வையாளர்களே அரங்கில் இருந்தாலும் 5.30 மணிக்கு மேல் 48 ஆண்கள்; 9 பெண்கள்; 7 திருநங்கைகளென 65 பேர் வந்திருந்தனர் ( மதுரையில் இது போன்ற திரையிடலுக்கு இவ்வளவு பார்வையாளர்கள் வந்திருப்பது நிஜத்தில் பெரிய விசயமே)வந்திருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி...

படம் முடிந்ததும் 6.15 லிருந்து 8.00 மணிவரை படம் சார்ந்தும், திருநங்கைகளின் வாழ்வியல் சார்ந்துமான விவாதத்தை குறும்பட இயக்குநர் முத்து கிருஷ்ணன் (சேகுவேரா, என்ற குறும்படத்தை இயக்கியவர்) துவக்கி வைத்தார். இவ்விவாதம் திருநங்கை தோழி லாவண்யாவின் தலைமையில், வந்திருந்த பார்வையாளர்களில் கிட்டதட்ட 40க்கும் மேற்பட்டவர்களின் ஆரோக்கியமான கேள்விகளால் சிறப்பாக சென்றது...

விவாதத்தின் போது, எழுத்தாளர் வேணு கோபால்( இவரது கூந்தப்பனை என்ற குறுநாவலில் திருநங்கையர் குறித்த பதிவொன்று உள்ளது) பேசுகையில் திருநங்கையர் பற்றி நல்ல பலப் புதிய செய்திகள் தெரிய வந்தது... மேலும் திருநங்கையினரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு முக்கியமாக அவர்கள் கல்வித்தரத்தில் மேம்பாடு அடைய வேண்டுமென்றும், இலக்கியங்களில் தங்களது பங்களிப்பை தர வேண்டுமென்றும் வற்புருத்தினார்...

சென்னை கூத்துப் பட்டறையை சேர்ந்த நண்பர் சுரேஷ்வரன் (கருக்கல் இலக்கிய இதழின் ஆசிரியர்) திருநங்கையர்கள் நாடகங்களில் தங்களது பங்களிப்பினை தந்து அவற்றை மக்கள் மத்தியில் சேர்ப்பதின் மூலம் பொதுத்தளத்திற்கு வர வேண்டுமென்றும், அவ்வாறு செய்யப்படும் முயற்சிகளுக்கு தான் உதவத் தயாராக இருப்பதாகவும் கூறினார்..

மேலும், கோவையிலிருந்து வந்த நண்பர் இளங்கோ கிருஷ்ணன், சரவணன், சுரேஷ் கண்ணன், சையத், ரூபன், மேலும் சில (பெயர் மறந்து விட்டது) நண்பர்கள் திருநங்கைகளின் விடுதலைக்கான மெய்யான அக்கறையோடு விவாத்தில் பங்கு கொண்டணர்..

படத்தின் நிறை குறைகளை பற்றியும் முத்து கிருஷ்ணன், அழகு பாரதி, தமிழரசன், செழியன், ஹவி போன்றோர் நிறைவான விவாதத்தை மேற்கொண்டனர்..

இந்நிகழ்ச்சியை சரியான திட்டமிடலின்றி செய்ததால் சற்று பொருளாதார சிக்கலும் (இந்த மாச சம்பளமே காலி), அதிகம் பேரை சென்றடைவதில் சற்று சருக்கலும் ஏற்பட்டது...

ஆனாலும், இதுவொரு நல்ல அனுபவமாகவும், பல புதிய தகவல்களைப் பெற வாய்ப்பாகவும் அமைந்தது.. நல்ல நிகழ்ச்சி ஒன்றினை செய்த மனநிறைவோடு வந்தவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக(?!) முடித்து விட்டேன்..

அடுத்த முறை சற்று தெளிவான திட்டமிடலோடு (நமது வலையுலக நண்பர்களின் ஆதரவும் இதற்கு தேவை) சிறப்பாக நடத்த முயல்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

... ..... ........


செகண்ட் பர்த்

1998 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஆய்வு நிமித்தமாக வந்த ஜெர்மன் மாணவியான இலாரியா ஃப்ரெஸியா இங்குள்ள திருநங்கைகளின் வாழ்வியல் அவலத்தால் பாதிக்கப்பட்டு , சென்னையை சேர்ந்த விவரணப்பட இயக்குநர் அருண்மொழியுடன் இணைந்து Madras Eyes (பின்னர் சில் காரணங்களால் செகண்ட் பெர்த் என்று பெயர் மாற்றம் பெற்றது) என்ற பெயரில் இப்படத்தை எடுத்தார்..

திண்டுக்கல் பகுதியில் உள்ள திருநங்கையர்களின் வாழ்க்கை முறை, சாரதா என்ற திருநங்கை ஒருவரின் மூலமாக இப்படத்தில் காட்டப் படுகிறது... இதில், வழக்கமான மசாலா சினிமாக்களில் காட்டப்படுவதைப் போலன்றி, திருநங்கைகளின் இயல்பான வாழ்க்கை முறையை அவர்கள் வெறும் விபச்சாரிகள் என்பதாக இல்லாமல் ஒப்பாரி பாடகர்களாக, கரகாட்டக்காரிகளாக வாழ்வதையும், மிக முக்கியமாக அவர்கள் அந்த ஊர் கிராம மக்களுடன் இயல்பாக-ஊரோடு ஒத்த வாழ்க்கையை-வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் இப்படம் நமக்கு தெள்ளத்தெளிவாக காட்டுகிறது..

லாவண்யா

ஒரு திருநங்கையாக தனது இளமையில் பல துன்பங்களை அனுபவித்தாலும், குறிப்பாக மற்றவர்களைப் போலவே தனது குடும்பத்தாரால் இன்னல்கள் பல அடைந்த போதும் குடும்ப டாக்டரிடம் தனது பிரச்சனையை விளக்கிக் கூறி, அவர் மூலம் தனது குடும்பத்தாருக்கு தன்னையும் தனது இயல்பையும் எடுத்துக் கூறி பக்குவமான முறையில் ஒரு புரிதலை ஏற்படுத்தினார்.. அதன் மூலம் அதே குடும்பத்தாரின் ஒப்புதலோடு அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு முழுப் பெண்ணாக குடும்பத்தின் ஆதரவுடன் வாழும் பாக்கியமும் பெற்றார்.

B.A. (HIndi) முடித்து, M.A., இறுதியாண்டின் போது இவர் அறுவை சிகிச்சை மேற்கொண்ட விசயம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததால் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். தற்பொழுது பெங்களூரிலுள்ள NESA என்னும் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தனது குடும்ப பொறுப்பை ஏற்று சமூகத்தில் நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து வருகிறார்..

16 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

நன்மனம் said...

நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள்!

அந்த அயல்நாட்டு நண்பர் திரும்ப வந்தாரா:-)

Desikan said...

வாழ்த்துக்கள்.
தேசிகன்
http://www.desikan.com/blogcms/

நிலா said...

//அறுவை சிகிச்சை மேற்கொண்ட விசயம் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்ததால் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.//

அதிர்ச்சியாக இருக்கிறது!!!


உங்கள் குறும்படத்தை இணையத்தில் வெளியிட்டால் அதிகப் பேரை சென்றடையலாமே?

உங்கள் நண்பன்(சரா) said...

நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள்!





அன்புடன்...
சரவணன்

G.Ragavan said...

லிவிங் ஸ்மைல் வித்யா....பேரு பெருசாயிருக்கிறதால கஷ்டப்படுறாங்களோ என்னவோ. வித்யான்னு கூப்பிடலாமா?

சரி. விஷயத்துக்கு வருவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு மருத்துவ நிகழ்ச்சி. அதில் மருத்துவரான என்னுடைய நண்பனின் பங்களிப்பும் இருந்தது. ஒரு விடுமுறை நாளில் நானும் சென்றிருந்தேன். அன்று ஏதோ குறும்படம் இருக்கிறது என்று என்னைப் பார்க்கச் சொன்னான். இளஞ்சிவப்புக் கண்ணாடி என்று பெயர் வரும் குலாபி ஆய்னா என்ற இந்திப் படம். அது ஸ்ரீநாரி (ஹி ஹி திருநங்கையை இந்திப் படுத்தீட்டேன்.) பற்றிய படம். அதில் அவர்கள் எப்படி ஒரு குடும்பமாக வாழ்கிறார்கள். அந்த உறவுகளும் அன்பும் அவர்களுக்குள் எழும் ஆசைகளும் அழகாகக் கொண்டு வந்திருந்தார்கள். ஒரு காட்சியில் "அம்மான்னு கூப்புட மட்டும் செய்ற. ஆனா ஒன்னும் சொல்லாத!" என்று அம்மா ஸ்ரீ மகள் ஸ்ரீயை கேட்கும் காட்சியில் மனசு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அதில் பேச்சுலர்ஸ் பார்ட்டி என்ற பெயரில் இவர்களை ஆட வைத்து ஆண்கள் அவர்களை exploit செய்வதைக் காட்டினாலும்...அது அவர்களுடைய உடலியல் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது என்ற வகையில் எடுத்துக் கொள்ளப்படவும் வேண்டியுள்ளது.

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்கள் திரையிடலும் வெற்றி என்றே தோன்றுகிறது. இன்னும் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள்.

ramachandranusha(உஷா) said...

வித்யா, நீங்கள் குறிப்பிட்ட லாவண்யா இவரா பாருங்க.
என் பதிவில் இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்
http://nunippul.blogspot.com/2006/01/3.html

துளசி கோபால் said...

வித்யா,

நலமா?

உங்க பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.

http://www.desipundit.com/category/tamil/

லிவிங் ஸ்மைல் said...

வாழ்த்துகளை தெரிவித்த நண்பர்கள், நன்மணம், தேசிகன், நிலா, உங்கள் நண்பன், ராகவன், உஷா, துளசி கோபால் அனைவருக்கும் என் நன்றி...

// அந்த அயல்நாட்டு நண்பர் திரும்ப வந்தாரா:-) //

வந்தார், மேலும் TTS போன்றவொரு கல்வி நிறுவனத்தில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்த போதும் ஏன் ஒரு மாணவர் கூட பங்கேற்கவில்லை என்று அங்கலாய்த்தார்.. பிரின்ஸ்பாலிடம் சென்று புகார் செய்ததாக கேள்விப் பட்டேன்...

அப்பாவி ஆங்கிலேயர்!!..

லிவிங் ஸ்மைல் said...

// உங்கள் குறும்படத்தை இணையத்தில் வெளியிட்டால் அதிகப் பேரை சென்றடையலாமே? //-- நிலா ..


மன்னிக்கவும், அது எனது படமல்லவே.. இது குறித்து அப்படத்தின் இயக்குநர் தான் முடிவெடுக்க முடியும்...



//இளஞ்சிவப்புக் கண்ணாடி என்று பெயர் வரும் குலாபி ஆய்னா என்ற இந்திப் படம். -- ராகவன்//

நான் ஏற்கனவே கூறியிருப்பதைப் போல் திருநங்கையர்கள் குறித்த பல தகவல்களை திரட்டிக் கொண்டு வருகிறேன். ஆகவே, மேற்படி குறும்படம் குறித்து மேலும் அதிக தகவல்களைத் தர வேண்டுகிறேன்.. அதாவது அப்படத்தின் இயக்குநர், எடுத்த காலம், முக்கியமாக அப்படத்தின் காப்பி கிடைக்க யாரை அணுக வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.

கஸ்தூரிப்பெண் said...

திருநங்கைகளைக் கண்டு ஒடி ஒளிந்து கொண்டிருந்தேன் உங்கள் பதிவை படிக்கும் வரை. மெதுமெதுவாக பனி விலகியது மாதிரி உங்கள் வாழ்க்கை புலப்படுகிறது.
மென்மேலும் தொடர்ந்து எழுதுங்கள்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இது போன்ற உங்களின் அடுத்தடுத்த முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

மஞ்சூர் ராசா said...

அன்பு வித்யா.
குறும்பட வெளியீட்டுவிழா நிகழ்ச்சியை மிக நன்றாக விவரமாக நகைச்சுவை இழையோட எழுதியிருக்கிறீர்கள்.

நிகழ்ச்சி நன்றாக நடந்ததற்கு பாராட்டுக்கள்.

அடுத்த முறை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போது பங்குபெறும் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்தால் அமைப்பாளர்களுக்கு ஓரளவு பாரம் குறையும் வாய்ப்பு உள்ளது.
யோசிக்க வேண்டிய விசயம்.

வாழ்த்துக்கள்.

லிவிங் ஸ்மைல் said...

// கஸ்தூரிப்பெண் said...
திருநங்கைகளைக் கண்டு ஒடி ஒளிந்து கொண்டிருந்தேன் உங்கள் பதிவை படிக்கும் வரை. மெதுமெதுவாக பனி விலகியது மாதிரி உங்கள் வாழ்க்கை புலப்படுகிறது. மென்மேலும் தொடர்ந்து எழுதுங்கள் //

தங்கள் எண்ணத்தை நேர்மையாக தெரிவித்ததற்கு நன்றி... விழாவிற்கு வந்தவர்களில் ஒரு தோழியும் இதேயேதான் கூறினார்.. அதாவது, தங்களுக்கு திருநங்கைகளை பார்த்தால் பயமாக, குழப்பமாக இருப்பதாக தெரிவித்தார்... ஆண்கள், பெண்களை காலகாலமாக உலகம் தெரியாமல் அடிமையாக வளர்த்ததன் விளைவாக அவர்களின் மனதில் பதியாமல் போன அநேக விசயங்களில் ஒன்றுதான் எங்களதும்...

பொதுமக்களுக்கும், எங்களுக்குமான இந்த திரை விலகினால் மட்டுமே எங்களுக்கு அங்கீகாரமும், வாழ்வும் கிடைக்கும், பனி விலகிய கஸ்தூரிப் பெண் இன்னும் விலாகத தோழிகளின் திரைகளையும் விலக்குவார் என்றே நம்புகிறேன்...

நன்றி...

// மஞ்சூர் ராசா said...
அடுத்த முறை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போது பங்குபெறும் அனைவரும் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்தால் அமைப்பாளர்களுக்கு ஓரளவு பாரம் குறையும் வாய்ப்பு உள்ளது. //

சரியாக சொன்னீர்கள்.. இந்த முறையே எனக்கு நாக்கு வெளியே தள்ளிவிட்டது..

வாழ்த்துக்களை பின்னூட்டமிட்ட நண்பர்கள் குமரன், கஸ்த்ர்ரிப் பெண், மஞ்சூர் ராசா அனைவருக்கும் நன்றி..

ஒரு பொடிச்சி said...

இந்தப் படங்களை பார்க்க ஆவலாக இருக்கிறது.

Unknown said...

வாழ்த்துக்கள்...

//வெளியிட அல்ல//

தங்களது அடுத்த முயற்சிக்கு, நிதி உதவி அளிக்க ஆவலாய் உள்ளேன். தெரியப்படுத்தவும். orbraja@gmail.com

Raveendiran said...

அன்பு வலைப்பதிவர்களே,

தமிழ் வலைப்பகுதிக்கு நான் புதியவன்.நானும் ஓர் வலைப்பகுதியை தற்காலிகமாக பதிந்து அதை எப்படி கையாள்வது என்பதையும் மற்ற பதிவுகளைப்போல் எப்படி உருவாக்குவது, மெருகேற்றுவது என்று பயிற்சி செய்கிறேன். சந்தேகங்கள் பல உண்டு, உங்களிடம் உதவிக்கு வருவேன்.

நான் பல வலைப்பக்கங்களை பார்வையிட்டேன், படித்தேன்.அதில் இரண்டு வலைப்பக்கங்களை படித்தேன் மனதில் பதித்தேன். மனதை மிகவும் சலனப்படுத்திய பக்கங்கள். வாழ்க்கையில் போராடுபவர்களுக்கு அதில் வெற்றி பெற தூண்டும் பக்கங்கள். அப்பக்கங்கள் www.livingsmile.blogspot.com , www.positiveanthonytamil.blogspot.com. இருவருமே அவர் அவர் வாழ்க்கையில் பெரும் போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.வித்யா, அந்தோனி உங்களுக்கு என் வாழ்த்துக்கள். மீண்டும் வருவேன்.