ரயில்

பேருந்தில் இல்லாதது என்று trainல் என்ன இருக்கிறது..? தடக் தடக் சப்தம் இருக்கிறது; முகத்தோடு முகம் பார்த்து அமரும் படி இருக்கைகள் இருக்கிறது... பேச்சுத் துணைக்கு ஆளில்லாத போதும் அருகில் பேசிக்கொண்டிருக்கும் குரல்களைக் கேட்க முடிகிறது; நமது அதிர்ஷ்டம், ஜன்னல் இருக்கையாக அமைந்து விட்டால் இலவசமாக ஒரு சொர்க்கமே காத்திருக்கிறது...

வேறென்ன வேண்டும்..?

.......... .......... .............

இதோ இந்த ஜன்னல் வழியே விரியும் ஊரும், தெருவும், வீடும், மக்களும், காடும், ஆறும், பாலமும், காடும் அரும்பாடு பட்டு வரைந்த ஓவியம் போன்ற அழகை எங்கிருந்து பெருகின்றன..?

நீங்கள் முழுநேர கவிஞராக இருக்க வேண்டியதில்லை.. ஆனால், ஜன்னலோர இருக்கையை பெற்றிடும் பிரயத்தனத்திலேயே ஒரு கவிஞர் தென்றலைப் போல இதமாக பிறந்துவிடுகிறார்.

இடம் கிடைச்சாச்சு, ஜன்னலை வெரித்து பார்த்த படி / ஏதோவொரு புத்தகத்தை புரட்டிய படி / வாக்மேனில் பாடல் கேட்ட படி / வாய் பிளந்து உறங்கியபடி யென பயணித்து வருகையில் பயணம் வளர வளர அசதியாய் உணறும் உடல் தனது கால்களிரெண்டையும் எதிர் சீட்டின் மீது ஓய்வாக வைக்க முயற்சிக்கும்; எதிர் இருக்கைக்காரர் சற்று இணக்கமான ஆளாய் இருக்கும் பட்சத்தில் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சற்று அனுசரித்து ஹாயாக காலை நீட்டிக்கொண்டும் பயணத்தை தொடரலாம்;

அதுவும் சளிப்புற காலாற சற்று நடந்து கதவருகே சென்றால்... போதும்.... இதை தனியாய் வேறு விளக்க வேண்டிய அவசியமில்லை..

நகரும் வண்டியில் நாம் நின்று கொண்டிருக்க காற்றோடு நம்மையே நோக்கி வருவதைப் போல வரும் வளர்ந்த மரங்கள் பின் நம்மையும் கடந்து - பின்னால் வரும் மற்ற மரங்களுக்கும் வாய்ப்பளிப்பதைப் போல - விட்டு விலகி தூரம் தூரம் போயக்கொண்டிருக்கும் அழகை... தனியாய் விளக்க வேண்டுமென்பதில்லை..


வண்டியின் தாளகதிக்கு உடன்பட்டு உடல் அனிச்சையாய் ஆடிக்கொண்டிருக்க... கண்ணில் படும் காடு கரையெல்லாம் நகர்வதை / நகர்வதாக தோன்றும் விஞ்ஞான குழப்பத்தை அனுபவித்துக் கொண்டே பயணம் பல பரிமாணாமங்களைக் கடந்து விரிவதையும் தனியாக விளக்க வேண்டியதில்லை..

.......... .......... .............

பெரும்பாலும் முக்கிய ரயில் நிலையங்களை நெருங்குவதற்கு முன்பாக ஒரு மேம்பாலம் நிச்சயமாக அமைந்திருக்கும்.. முன்பு எப்போதாவது அதே சாலையில் நடந்திருந்தாலும் வேறு வாகனத்தில் சென்றிருந்தாலும் அப்போதெல்லாம் விரைந்து செல்ல வேண்டிய பதற்றமும், பாதுகாப்பு உணர்வும் நம்மிடம் மறைத்து வைத்திருந்த சாலையின் மொத்த அழகையும் இப்போது நிதானமாக அப்பாலத்தைக் கடக்கும் புகைவண்டி நமக்கு காட்டி விடும்.

சாலையை; பேருந்துகளை; இருசக்கர வாகனங்களை; பாதசாரிகளை அவற்றின் முன்னும் பின்னுமான இயக்கத்தை தேர்ந்த ஒளிப்பதிவாளனின் கேமிராவைப் போல தெளிவான காட்சியாக புகைவண்டியிலிருந்து கழுத்தை திருப்பி திருப்பிப் பார்க்கும் அனுபவம் ஒவ்வொரு முறையும் புத்தம் புதியதாய் சுவாரஸ்யமாக இருக்கும்...


அவ்வாறே, உயர உயர மரங்களால் நிழல் சூழ்ந்த ரெயில்வே அடுக்கு மாடி குடியிருப்புகளை, (அங்கே நிலவி வரும் பல் சமய கூட்டுக் கலாச்சாரத்தை நல்ல Anthropologist யாரவது ஒரு Research கூட செய்யலாம் ) புகைவண்டியின் ஜன்னலிலிருந்து பார்க்கையில் தெரியும் அழகே தனியானது....

பின்னால் ஒரு ரெயில்வே குடியிருப்பும், முன்னால் தண்டவாளத்தில் ஆளைத் தள்ளும் காற்றுடன் கம்பீரமாக பறந்து கொண்டிருக்கும் ரயிலுக்கும் இடையில் கையில் குழந்தையுடன், அது ரயிலை கைதட்டி குதூகளத்துடன் ரசிக்கும் அழகை எப்போதாவது அனுபத்துள்ளீர்களா..? அந்த அழகிற்காகவே extra ரெண்டு குழந்தைகளைக் கூட பெற்றுக் கொள்ளலாம்...!!

.......... .......... .............

மும்பை, புனேக்கு என்னைப் போல அபயம் வேண்டி ஓடிப்போகும் திருநங்கை(அலி)களுக்கு பிழைப்பதற்கு மூன்று வழிகளே உண்டு...

* விபச்சாரம் ( Technical Term தந்தா )
* கடை வீதிகளில் பிச்சை எடுத்தல் ( Technical Term கடை கேட்டல் )
* ரயிலில் பிச்சை எடுத்தல் (Technical Term Train கேட்டல்)

ஆரம்பத்தில் கடைக் கேட்டாலும், ரயிலின் மீது எனக்கிருந்த பாசம் (விட்ட கொறை தொட்ட கொறை ) காரணமாக போராடி ரயில் கடை கேட்கும் அரிய வாய்ப்பை ( மெய்யாகவே அரிய வாய்ப்பு தான் - ரயில் கடைக் கேட்பதில் தனித்திறமையும் தேவை)பெற்றேன்.

குறிப்பாக இரண்டு நாள் தான் என்றாலும் trainல் வியாபாரம் செய்த நாட்களில் ஏதோ அரசே என்னை Trialway Employeeயாக நியமித்ததைப் போல இன்னதென்று கூறமுடிந்திட முடியாத பெருமித உணர்வு எனக்குள் இருந்தது...

நிற்க...

இந்த பிறவி முழுதும் நான் நினைத்து நினைத்து ரசிக்கக் கூடிய விசயமாக இருக்கக் கூடியது நானும், பிரியாவும் Trainல் கடை கேட்ட நாட்களாகும்... குறிப்பாக, நாங்களிருவரும் அடித்த லூட்டிகள் என்றென்றைக்கும் நினைத்துப் பார்க்கக் கூடிய ரசமான நினைவுகளாகும்...

ஆம், வெகு இயல்பான, cool ஆன இரண்டு கல்லூரி பெண்கள் ஒரு சபா நாடகத்திற்கு ஒத்திகை பார்க்கும் தோரணையில் தான் நாங்களிருவரும் ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டும், கிண்டலடித்துக் கொண்டும் just like that Trainல் கடை கேப்போம்..

எங்களது மொத்த வாழ்க்கைக்குமான அவலத்தை நொந்து கொள்ளாமல் அதை ஏற்றுக் கொண்டும், அதற்கே எங்களை ஒப்புக்கொடுத்தும், ஆனால் அது குறித்த எந்த புகாரும் இன்றி எல்லாம் ( வெட்கம், மானம், சூடு, சொரணை இத்தியாதி இத்தியாதிகளை ) மறந்து, குதூகலாமாக புனே - லோனாவாலா தடத்தில் புழங்கும் முக்கியமான வண்டிகளில் ரயில்(பிச்சை!!)ராணிகளாக!? வளைய வந்தோம்..

நான், ப்ரியா, ப்ரதிக்ஷா, டைட்டானிக் ஆகிய நால்வர் கூட்டணியில் நானும் ப்ரியாவுமே பிரதானம்; கடைகேட்கும் போது கிடைக்கும் ஓய்வு நேரங்களில் நானும் ப்ரியாவும் ஒருத்தரை ஒருத்தர் போலியாக விமர்சிப்பதும்; கிண்டலடிப்பதும்; பொய் கோவம் கொள்வதுமாக எவ்வளவு இனிமையான நாட்கள் அவை... எங்கள் கலாட்டாவிற்கு முன் கல்லூரி பெண்களின் கலாட்டாக்கள் கூட ஒன்றுமில்லையென்றுதான் சொல்லத் தோன்றுகிறது. குறிப்பாக, நானும், ப்ரியாவும் வீட்டிலிருக்கும் கணங்களில் Tape Recorderஐ அலற விட்டு, அறையில் தம்மு தும்மென குதிப்பதும் ஆட்டம் போடுவதுமாக ஒரே கொண்டாட்டம் தான், ஆட்டத்தின் போதான ஒத்திசைவு என்பது எனக்கு ப்ரியாவிடம் மட்டுமே ஏற்படும்... என்னையும் என் நடனத்தையும் அவள் ரசித்துக் கொண்டிருக்க, எனக்கோ அவளாடுவதைப் பார்க்க பார்க்க போறாமையாக இருக்கும்... அதிலும் அவள் தெலுங்கு டப்பிங் பட பாடல்களை பாடுவதாகட்டும், ஆங்கிலப் படங்களில் வரும் தமிழ் வசனங்களையும், உச்சரிப்பையும் கிண்டலடிப்பதாகட்டும் அவளுக்கு நிகர் அவள்தான். (ச்சே!!... ப்ரியா அக்கா, உன்னை எவ்வளவு மோசாமாக miss செய்கிறேன் பார்!!...) உண்மையை சொல்வதானால், இந்த வேலை, இந்த ஹாஸ்டல், இந்த பாதுகாப்பு இவை எதையும் விட ப்ரியா அக்காவின் பேச்சும், நட்பும், அருகாமையும் உயர்ந்ததென்றே எப்போதும் சொல்லுவேன்..

ப்ரதிக்ஷாவிற்கு பொதுவாக ஜாலியாக அரட்டை அடித்தல்; பாய்ஸை சைட் அடித்தல்; வகை வகையாக சாப்பிடுதல் போன்ற fun சமாச்சாரங்களில் அவ்வளவு ஆர்வம் கிடையாது. கிழவியைப் போல always பணம் பணமென ஆளாய் பறப்பாள், எது எப்படிப் போனாலும் அன்றைக்கான அதிக பட்ச வருவாய் வந்துவிடவேண்டுமென்பதிலேயே குறியாக இருப்பாள்... அவளைப் பொருத்த மட்டும் அதுதான் முக்கியம்.. but, நாங்கதான் கடைக் கேப்பதிலும் கில்லாடிகளாச்சே!!! கடைக் கேட்பதில் எங்கள் ஸ்டைலே என்பதே வேறு அன்பாக, கெஞ்சலாக கொஞ்சம் உரிமையோடு நாங்கள் கடை கேட்கும் விதமே எங்கள் success, இதில் என்னை விட ப்ரியா best.. எனவே, நாங்களிருவரும் அவள் புலம்பல் எதையும் சட்டை செய்வதில்லை... டைட்டானிக் எங்கள் சமூகத்திற்கு சற்றே புதியவள் என்பதால் அவள் எங்கள் கலாட்டாவில் அதிகமாக கலந்து கொள்வதில்லை...

எங்களிருவருக்கு தனியாக லோக்கல்-ரசிகர் வட்டமே( இதில், ரோஜ்வாலாக்கள், சில போலிஸ்கள், சில ரயில்வே ஆபிசர்கள், ஸ்டேசன்-ஆட்டோவாலாக்கள், கேண்டின் ஆட்கள் என சகலரும் அடக்கம்) உண்டு..


கடை கேட்பதில் நல்ல வருமானம் கிடைத்த நாட்களில் Evening லோனாவாலா ஸ்டேசன் இரண்டாவது பின் கேட்டில் 25+ வாலிபனின் தள்ளு வண்டியில் கிடைக்கும் Burgger (just 5/- தான், மற்ற costlyயான hotelகளில் கிடைப்பதை விட அருமையாக இருக்கும்-நிறைய காலேஜ் ஃகேர்ள்ஸ் கூட ரெகுலர் கஸ்டமர்ஸ்) அதை ஒட்டியுள்ள பிஸியான ஆனால் ஆழகான சாலையில் நின்று கொண்டு சாப்பிடுவதையும், நைட் வண்டி அடிக்கும் நாட்களில், லோனாவாலா பஜாரில் உள்ள சைனீஸ் ரெஸ்டாரெண்ட் ஒன்றில் chicken noodles சாப்பிடுவதை நினைத்துப் பார்க்கையில், கவலைகள் எதுமில்லாமல் மனது லேசாக இருக்கும் போது கதவருகே நின்று இதமாக அடிக்கும் தூரலை வேடிக்கை பார்ப்பதைப் பொல் உள்ளது...


நான் புனேக்கு சென்ற புதிதில் ப்ரியா டோலில் (கூட்டணி-எங்கள் நான்கு பேரில் ப்ரியாதான் மூத்தவள் (24) என்பதால் அவள் தான் எங்களுக்கு leader) சேர்வதற்கு முன் சில மூத்த அரவாணிகளுடன் தான் Train கேட்க சென்றேன்.. அவர்களுடன் செத்த சவமே போல, தேமேன்னு போவதும், வருவதும் பிச்சை எடுப்பதுமாக., ஒரே போராக இருக்கும், ஏனேனில், அங்கே மூத்த அரவாணியர் முன் இளைய அரவாணிகள் அடக்க(!! ) ஒடுக்க(!?)மாகத்தான் இருக்க வேண்டும்.. என்னைப் போல சுகவாசிகளுக்கு இதெப்படி ஒத்து வரும்.. எனவே, தொழில் நேர்த்தி கற்று தேர்ந்த பின் நானே தனியாக Train கேட்க கிளம்பி விட்டேன்.. தனியாக செல்வது, வெறுமையாகவும், பாதுகாப்பற்றதாகவும் இருப்பினும் சுதந்திரமகவே உணர்ந்தேன்...


.......... .......... .............

அபு..

அபு மும்பை - சோலாப்பூர் தடத்தில் செல்லும் வண்டியின் கேண்டின் மேனேஜர், 35 வயது நிரம்பிய, திருமணமான, பழகுவதற்கு இனிமையான எனது முக்கியமான நண்பர்.., இலகுவாக, சாந்தமாக கடைக் கேட்கிற எனது அணுகு முறையால் யார்க்கும் என்னை எளிதில் பிடித்து விடும் (இது, பின்னாட்களில் அபுவே என்னிடம் சொன்னது).. ஆனால், அபு அவ்வளவு சீக்கிரம் எனக்கு நண்பராகிவிடவும் வில்லை... எதார்த்தமாக ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது எனது கல்வியைப் பற்றி தெரியவந்த பின் அபுவிற்கு என் மீது அனுதாபமும், அபிமானமும் கூடியது.., அன்றிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்களானோம், இந்த வண்டியில் கர்ஜத்-புனே(1.30 மணி நேரம் வரை கடை கேட்பதால், எனக்கு நிறைய ஒய்வு நேரம் கிடைக்கும்...அந்த ஓய்வில் கிடைத்த நட்பு தான் அபு., அவரது அறிமுகத்தாலேயே regularஆக அந்த வண்டியில் வரும் சில பிஸினஸ் மேன்களின் அறிமுகம் கிடைத்தது., அவர்களிடமெல்லாம் நான் M.A., படித்து விட்டு பிச்சை எடுக்கும் அவலத்தை மாய்ந்து மாய்ந்து கூறிவருவார். அப்படித்தான் எனக்கு ஒரு அலுவலகத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பும் வந்தது.. இது குறித்து முன்பே நம்புங்கள்.. நான் வசிப்பது தமிழ்நாட்டில் என்ற பதிவில் கூட கூறியுள்ளேன்..


குமார்

பத்து வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து, மும்பையில் படாத பாடு பட்டு,பார்க்காத வேலை பல செய்து, 16 வயதிலேயா திருமணமும் முடித்து இன்று இரண்டு குழந்தைகளுடன் settle ஆகி விட்ட 27 வயது குமார்.. வாழ்க்கையில் பல அனுபவங்களைக் கடந்தவர். தற்போது, வண்டியில் மொபைல் கவர், லேஸ், கீ-செயின் போன்ற பொருட்களை வியாபாரம் செய்து வருகிறவர்.. மிக மிக கண்ணியமான எனது மற்றுமொரு நண்பர், முன்பே சொன்னது போல நான் Trainல் வியாபாரம் செய்வதற்கு என்னை ஊக்குவித்தவர்... மால் முழுதும் மொத்தமாக எங்கே வாங்க வேண்டும், எந்த சீசனுக்கு என்ன மால் வாங்க வேண்டும், எந்த மால் எந்த கடையில் cheap and best ஆக கிடைக்கும் என கிட்டதட்ட இரண்டு நாட்கள் என்னோடும், ப்ரதிக்ஷாவோடும் Bag, Key-chain Stand முதற்கொண்டு தேவையான மால் என A to Z அனைத்தையும் கூட இருந்து வாங்கிக் கொடுத்தவர்.. தான் அறிந்த தொழில் நுணுக்கங்கள் அனைத்தையும் எங்களுக்கு கற்றுக் கொடுத்தவர்.. இந்த புதிய பிஸினஸ் மூலம் எங்கள் Life Styleலே மாறிவிடுமென எங்களை விட முழுதாக நம்பியவர்... முதல் நாள் வியாபாரமே ஆகாததைக் கூறி அழுதபோது கூட ஆறுதலும், தைரியமும் தந்து தன்னம்பிக்கையை வளர்த்தவர். அப்போது அது பயன்படாத போதும் பின்னாட்களில், நான் தன்னம்பிக்கையோடு போராடுவதற்கு உதவியாய் இருந்தது..


தீதீ

மதியம் 3 மணிக்கு வரும் பெங்களூர் - மும்பை வண்டியில் கடை கேட்கையில் வரும் தீதீ(அக்கா)யும் அவளின் 3 வயது மகளும் மத்தியான எனது வண்டியின் தோழர்கள் தீதீக்கு இரண்டு கால்களும் இயங்காது.. தனது 3 வயது சிறுமியை துணையாகக் கொண்டு வண்டியில் குழந்தைகளுக்கென சிறு சிறு பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்.. புனே ஸ்டேசனிலிருந்து வண்டி கிளம்புவதற்கு முன் உள்ள 10நிமிடம் தான் எங்களின் நட்பு நேரம்.. அந்த நேரத்தில், கதவிற்கும் முகம் அலம்பிக் கொள்ளூம் wash basinக்கும் இடையில் பரிதாபமாக அமர்ந்து கொண்டு தீதீ தன் மகளைக் கொஞ்சுவதும், திட்டுவதும் பார்ப்பதற்கு நெகிழ்ச்சியான தருணம்... தீதீயின் மகள் ஆரம்பத்தில் என்னிடம் சேரவிட்டாலும் சீக்கிரமே என்னுடன் ஒட்டி விட்டாள். ஒரு முறை அவளது Birthdayக்கு கூட எனக்கு சாக்லேட் தந்தாள்.. சொந்தபந்தம் எதுவற்ற ஏதோவொரு ஊரில் அனாதை போல வாழும் பிச்சைக்காரி ஒருத்திக்கு ஒரு குழந்தையின் வெள்ளந்தியான birthday சாக்லேட் எத்தகைய Emotinal Taste என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா..? நான் கூட அவளுக்கு ஒரு புது கவுன் வாங்கி தரவேண்டுமென விரும்பினேன்... ஆனால், வாங்கித் தராமலேயே என் புனே வாழ்க்கையை முடித்து விட்டேன்...இன்றும் எனக்கு அது ஒரு குறையாகவே உள்ளது... இனி நான் பூனே போனாலும் அவளைப் பார்க்க முடியாது. ஏனெனில், தீதீ ஏற்கனவே என்னிடம் அவளை அடுத்த கல்வியாண்டில் பள்ளியில் சேர்த்து விட இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தாள்... அவள் பள்ளியில் சேர்ந்து விட்டாள் இரு காலும் இல்லாத தனக்கு ஓடும் வண்டியில் வியாபாரம் செய்வதில் மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று புலம்புவாள்.. ஒருவேளை விடுமுறை நாடகளில் உடன் வரலாம்..


சில சமயம் எனக்கு தோன்றுவதுண்டு, காலகளற்ற இந்த தீதீ தனது கணவனுக்கே கூட பாரமாய் இருக்க விரும்பாமல், தனது ஊனத்தின் மீது எந்தவொரு சுய பச்சாதாபமும் கொண்டிராமல், வாழ்க்கையை அதன் போக்கிற்கு போகவிட்டு, தனக்கான ரொட்டிக்கு எந்த சிரமமும் பாராமல் ஓடும் Trainஐ விட சுறுசுறுப்பாக உழைக்கும் அவள் உழைப்பின் முன் நல்ல தேக ஆரோக்கியம் உள்ள எனக்கு எந்த பிரச்சனையும் பெரிய பிரச்சனையல்ல.. தனிமையைத் தவிர.....

.......... .......... .............


நேரமின்மையால் இத்துடன் முடிக்கிறேன்... மேலும் சிலவற்றை விரைவில் அடுத்து ஒரு பதிவில் இடுகிறேன்... எழுத்துப் பிழை எதும் இருப்பின் அதே நேரமின்மை என்ற காரணத்தைக் கூறி அனுசரித்துக் கொள்ள வேண்டுகிறேன்...

26 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Unknown said...

உங்களின் அனுபவங்களே உங்களின் சொத்து...
சாமான்ய மனிதர்களின் அறிமுகங்கள் அருமை..
**
புதிய போட்டோவில் அழகாக இருக்கிறீர்கள்.

மா சிவகுமார் said...

எழுத்துப் பிழைகள் எதுவும் கண்ணில் படவில்லை அம்மா.

முதல் பாதியில் ரயில் பயணம் பற்றிய உங்கள் விவரிப்பில் அப்படியே மூழ்கி விட்டேன். கையில் ஏதாவது பரபரப்பு கதைப்புத்தகத்தில் மூழ்கி சன்னலோர இருக்கையிலும் அந்த அற்புதங்களைப் புறக்கணித்து விட்ட தவறைக் கூட நான் செய்திருக்கிறேன். ஆனால் அந்த தினசரித் தளையை மறந்து மணிக் கணக்கில் சன்னலில் தெரியும் திரைப்படத்தில் மூழ்கிய கணங்கள் மறக்க முடியாதவை.

ரயிலில் கடை கேட்கும் திருமங்கையினரின் பக்கத்தை விவரித்ததற்கு நன்றி.

அன்புடன்,

மா சிவகுமார்

SnackDragon said...

//இதோ இந்த ஜன்னல் வழியே விரியும் ஊரும், தெருவும், வீடும், மக்களும், காடும், ஆறும், பாலமும், காடும் அரும்பாடு பட்டு வரைந்த ஓவியம் போன்ற அழகை எங்கிருந்து பெருகின்றன..? //

ஒரு கவிதை போன்ற வரி இது. இனிமையையும் அவலத்தையும் குழைத்து ஒருங்கே வடித்த பதிவு. மிக்க நன்றி.

SnackDragon said...
This comment has been removed by a blog administrator.
இளங்கோ-டிசே said...

இரயில் பயணங்கள் குறித்த அழகும் இதமும்.....அதைவிட உங்களின் தன்னம்பிக்கை இன்னும் இயல்பாய் இப்பதிவில் மிளிர்கிறது.

லிவிங் ஸ்மைல் said...

கல்வெட்டு, மா சிவகுமார், karthikramas, டிசே தமிழன் அனைவருக்கும் நன்றி...

// KARTHIKRAMAS said...போட்டோ பிடிக்க வந்தவரைப் பார்த்தா? ;) //

என்ன சொல்கிறீர்கள் ஒன்றும் புரியவில்லையே...

ilavanji said...

அருமையா எழுதறீங்க கவிதா!

ரயில் பயணங்கள் பற்றிய போலித்தனமில்லாத வரிகள் உங்ககூட நானும் பயணித்த உணர்வுகளைத் தருகிறது.கண்ணதாசன் சொன்னதுபோல "அனுபவங்களே வாழ்க்கை".

பகிர்ந்துகொண்டதற்கு நன்றிகள்.

லிவிங் ஸ்மைல் said...

// இளவஞ்சி said... அருமையா எழுதறீங்க கவிதா! //

தெய்வமே,, என் பெயர் லிவிங் ஸ்மைல் வித்யா, கவிதா இல்லைங்க...

ilavanji said...

மன்னிச்சுக்கங்க வித்யா!

// தெய்வமே,, // இது தேவையாடா இளவஞ்சி? :)

உங்க நீநீநீளமான பதிவை ரசிச்சுப் படிச்சதுல உங்க பேர கோட்டை விட்டுட்டேன். ஹிஹி...

ilavanji said...

லிவிங் ஸ்மைல் வித்யா, (அப்பாடா! கரெட்டா சொல்லிட்டேன்! )

உங்களுக்கு நேரமிருப்பின் ரயில் பற்றிய எனது பதிவையும் பாருங்க!

http://ilavanji.blogspot.com/2006/01/blog-post.html

விளம்பரத்துக்கு திட்டாதீக! :)

நவீன் ப்ரகாஷ் said...

வித்யா சம்பவங்கள் கண்முன் தெரிகின்றது ! நன்கு வருணித்துள்ளீர்கள் ! பாரட்டுக்கள் !

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

இனி நான் போகப் போகும் ரயில் பயணங்களில் எல்லாம், என் பார்வையையும் என் சிந்தனையையும் மாற்றி விடும்படி செய்து விட்டது உங்கள் பதிவு...

G.Ragavan said...

லிவிங் ஸ்மைல், நல்ல விவரிப்பு. ரயில் பயணங்கள் எப்பொழுதும் சுகமானது. அதிலும் நமக்கு ஒத்தவர்கள் உடன் இருந்து விட்டால்..கேட்கவே வேண்டாம்.

பொதுவாகவே ரயிலில் திருமங்கைகளுடன் எனக்கு நல்ல அனுபவங்கள் இருந்ததில்லை. என்னுடைய பார்வைக் கோளாறினால் அப்படி இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இனிமேல் என்னுடைய பார்வைக் கோணத்தை மாற்றிக் கொண்டு பார்க்க முயல்கிறேன்.

ரயில் வண்டியை ஆதாரமாக வைத்துக் கொண்டு எத்தனை பேர் பிழைக்கிறார்கள். அப்பப்பா!

அந்த emotional taste...உண்மையிலேயே அருமை. நமக்கு யாருமில்லையோ என நினைக்கும் வேளையில் நமக்கும் ஒரு ஆதரவு கிடைக்கிறது என்றால்....உண்மையைச் சொல்லுங்கள். அழுதீர்கள்தானே?

மஞ்சூர் ராசா said...

வித்யா
எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது. சோகம் நிறைந்த வாழ்க்கையின் மெலிதான உணர்வுகளையும், சம்பவங்களையும், நல்ல பல மனிதர்களையும், இயற்கையையும், எவ்வளவு அழகாக வார்த்தைகள் சிதையாமல், எளிய நடையில் எழுதுகிறீர்கள்.

உங்களிடம் இன்னும் நிறைய திறமை இருக்கிறது.

நீங்கள் மிகச் சிறந்த ஒரு எழுத்தாளராகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று எனக்கு மனதில் படுகிறது.

அந்த நாட்களுக்காக வெகு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

லிவிங் ஸ்மைல் said...

// நமக்கு யாருமில்லையோ என நினைக்கும் வேளையில் நமக்கும் ஒரு ஆதரவு கிடைக்கிறது என்றால்....உண்மையைச் சொல்லுங்கள். அழுதீர்கள்தானே? //


நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வதில் எந்த கூச்சமும் வேண்டாம் தானே.. ஆமாம், உண்மையாகவே அழுதேன்.. இந்த கேள்வியை நீங்கள் நேருக்கு நேராக நின்று கேட்பதைப் போல இருக்கிறது.....

என்ன சொல்ல வார்த்தை எதுவும் கிடைக்கவில்லை....

இதை நீங்கள் யூகித்த கணத்தில் எனக்கு ஒரு நல்ல நண்பர் கிடைத்த நிறைவைப் பெறுகிறேன்...

லிவிங் ஸ்மைல் said...

// இனி நான் போகப் போகும் ரயில் பயணங்களில் எல்லாம், என் பார்வையையும் என் சிந்தனையையும் மாற்றி விடும்படி செய்து விட்டது உங்கள் பதிவு...said குமரன் எண்ணம் //


// பொதுவாகவே ரயிலில் திருநங்கைகளுடன் எனக்கு நல்ல அனுபவங்கள் இருந்ததில்லை. என்னுடைய பார்வைக் கோளாறினால் அப்படி இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இனிமேல் என்னுடைய பார்வைக் கோணத்தை மாற்றிக் கொண்டு பார்க்க முயல்கிறேன் said... g.ragavan .//

தங்களின் எண்ணமும் பார்வையும் மாறினால் எனக்கும் மகிழ்ச்சியே.. பதிவிற்கு நன்றி....

தொடர்ந்து ஊக்கமும் ஆதரவும் அளித்து வரும் நண்பர்கள் நவீன் ப்ரகாஷ், ராகவன், மஞ்சூர் ராசா அனைவருக்கும்

நன்றி!!

வல்லிசிம்ஹன் said...

லிவிங் ஸ்டைல் வித்யா, ரயில் பயணத்துக்காகவே ரயிலில் போக வெண்டும் என்று நினைப்பவள் நான்.
ரயில் பாடல்கள் சினிமாக்களில் வரும்போது தெரியும் சோகத்துக்காகவும் அழுது இருக்கிறேன்.
ஓடும் ரயிலில் அனைவரும் தூங்கும் அந்தக் கணங்களில் கூட விழித்து நீங்கள் சொல்லும் ஜன்னலோரைத்தைப் பிடித்துக்கொண்டு ,அப்போது வரும் கரிப்புகை(அந்தக் காலம்),ரயில் கூவும் நீண்ண்ண்ட இசை,
காலியான இரவு நேர ஸ்டேஷன்கள்
ஏன் , கடைசியாக வரும் பச்சைவிளக்கும் என்னில் பதிந்தவை.
அன்னல் அவைகள் எல்லாமெ உங்கள் பதிவில் இருக்கும் உண்மைக்கு முன்னால் சிறு குழந்தையின் கோடுகள்.
உங்கள் சித்திரங்கள் வளரவேண்டும்.
உங்கள் எழுத்தும் வாழ்க்கையும் சிறக்க வேண்டும்.

லிவிங் ஸ்மைல் said...

// சிறிய தகவல்: எதிரெதிரே பார்த்து அமரக்கூடிய பேருந்துகளும் உண்டு. suresu //

தகவலுக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி...

// ரயில் பயணத்துக்காகவே ரயிலில் போக வெண்டும் என்று நினைப்பவள் நான் < manu //.

அட நானுந்தாங்க...


// ரயில் பாடல்கள் சினிமாக்களில் வரும்போது தெரியும் சோகத்துக்காகவும் அழுது இருக்கிறேன். < manu //

casual timeமை விட travelல் கேட்கப்படும் பாடல்கள் பலமுறைக் கேட்ட பாட்டாக இருந்தாலும் அப்போது பல புதிய பரிணாமங்களை அடைவதை நானும் உணர்ந்ததுண்டு...


// ஓடும் ரயிலில் அனைவரும் தூங்கும் அந்தக் கணங்களில் கூட விழித்து நீங்கள் சொல்லும் ஜன்னலோரைத்தைப் பிடித்துக்கொண்டு....< manu //

சே.. உண்மையிலே அற்புதமான தருணமல்லவா....

பின்னூட்டமளித்த நண்பர்கள் சுரேசு, மனு இருவருக்கும் நன்றி....

பொன்ஸ்~~Poorna said...

வித்யா,
ரயில் பயணத்தை அற்புதமாக விவரித்திருக்கிறீர்கள். அப்படியே என் பழைய பயணங்களைக் கண்முன் கொண்டு நிறுத்திவிட்டது..

மஞ்சூர் கேட்டது போல், சோகமான ட்ரெயின் கேட்டல் போன்ற நிகழ்வுகளையும் இப்படி சுகமாக எப்படி வர்ணிக்க முடிகிறது உங்களால்?

ஒரு நல்ல பயணம் போய் வந்த நிறைவு, பதிவைப் படித்து முடித்தபின்..

லிவிங் ஸ்மைல் said...

வாங்க பொன்ஸ் உங்களைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்...

// மஞ்சூர் கேட்டது போல், சோகமான ட்ரெயின் கேட்டல் போன்ற நிகழ்வுகளையும் இப்படி சுகமாக எப்படி வர்ணிக்க முடிகிறது உங்களால்? பொன்ஸ் //

// வித்யா எப்படி உங்களால் இப்படி எழுத முடிகிறது. சோகம் நிறைந்த வாழ்க்கையின் மெலிதான உணர்வுகளையும், சம்பவங்களையும், நல்ல பல மனிதர்களையும், இயற்கையையும், எவ்வளவு அழகாக வார்த்தைகள் சிதையாமல், எளிய நடையில் எழுதுகிறீர்கள் மஞ்சூர் ராஜா//


இதற்கு பதிலென்று சொல்ல ஒன்றும் தெரியவில்லை... அன்று அது போல பிச்சையுண்டு வாழும் அவலத்தை எண்ணி மருகியிருந்தாலும்... இன்று அவற்றிலிருந்து விட்டு விடுதலையாகி விட்டோம். இனி எல்லாம் சுகமே என்ற பாதுகாப்பு உணர்விற்குகுப் பின், இப்போழுது ஆறஅமர அந்த வாழ்க்கை குறித்து நினைத்துப் பார்க்கையில் சில சுவாரஸ்யாமன தருணங்கள் குறிப்பாக, ப்ரியாவிற்கும் எனக்குமான நட்பு.... அனைத்தையும் மிஸ் செய்வதாகவே படுகிறது...

மேலும், இந்த மனப்பாங்கிற்கான பதிலை நான் பதிவிலே கூறியிருக்கிறேன்.... (எங்களது மொத்த வாழ்க்கைக்குமான அவலத்தை நொந்து கொள்ளாமல் அதை ஏற்றுக் கொண்டும், அதற்கே எங்களை ஒப்புக்கொடுத்தும், ஆனால் அது குறித்த எந்த புகாரும் இன்றி எல்லாம் ( வெட்கம், மானம், சூடு, சொரணை இத்தியாதி இத்தியாதிகளை ) மறந்து, குதூகலாமாக.....)

எங்களைப் போன்றவர்களுக்கும், மற்றும் பிற ஊணமுற்றவர்களுக்கும் குறைகளைப் போலவே அக்குறைகளை ஏற்கும் பக்குவமும் எப்படியோ வந்துவிடுகிறது..

பொதுவாக சொல்வதானால், காலமும் அனுபவமும் தான் இதற்கு காரணமாக இருக்க முடியும்....

SnackDragon said...

தவறான இடத்தில் அந்த பின்னூட்டத்தை போட்டுவிட்டேன். மன்னிக்கவும். இப்போது எடுத்து விடுகிறேன்.

மலைநாடான் said...

//எங்களைப் போன்றவர்களுக்கும், மற்றும் பிற ஊணமுற்றவர்களுக்கும் குறைகளைப் போலவே அக்குறைகளை ஏற்கும் பக்குவமும் எப்படியோ வந்துவிடுகிறது..//

இது ஒரு ஞானியின் மனநிலையில் வரக்கூடிய வார்த்தைகள்

//பொதுவாக சொல்வதானால், காலமும் அனுபவமும் தான் இதற்கு காரணமாக இருக்க முடியும்....//

மிகச்சரியான வார்த்தைகள். காலம்தான் கடவுள் என்பது என்கூற்று.

வித்யா உங்கள் அனுபவங்கள் மட்டுமல்ல, எழுத்துக்களும் வலிமையானவை. தொடர்ந்து எழுதுங்கள்.
பாராட்டுக்கள்.

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

லிவிங் ஸ்மைல் வித்யா, அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். வித்தியாசமான கோணத்தைக் காண்பிக்கிறீர்கள். நன்றி.

ஒரு பொடிச்சி said...

படிக்கையில் எழுத்துப் பிழைகளைக் கவனித்தபோது உங்களது பிரச்சினை விளங்கியது!
அது: ற/ர பிரச்சனை! :-)
ஆதாரம்:
எங்கிருந்து பெரு(று)கின்றன..?
ஜன்னலை வெரி(றி)த்து பார்த்தபடி
இதமாக அடிக்கும் தூ(ற)லை வேடிக்கை பார்ப்பதைப் பொல் உள்ளது...

Next: ள/ல
அதுவும் சளி(லி)ப்புற
கைதட்டி குதூக(ல)த்துடன்
-----------------------------
பதிவு பிடித்திருந்தது.. நாவலின் ஒரு அலகு போல!

லிவிங் ஸ்மைல் said...

தோழர் செல்வராஜுக்கு என் நன்றி...


பிழைகளை தயங்காமல் சுட்டிக்காட்டிய தோழி பொடிச்சிக்கு (வாழ்த்துக்கும் சேர்த்து) என் நன்றி..

லிவிங் ஸ்மைல் said...

தனது வாழ்த்தை பின்னூட்டமிட வேண்டுமென்பதற்காகவே வலைப்பூ ஒன்றினை நிருவி தனது வாழ்த்தைத் தெரிவித்த நண்பர் பெங்களூர் செந்திலுக்கு என் நன்றி....